அல்லாஹ்வின் துாதர் (ஸல்) அந்தக் கடிதத்தில் என்ன எழுதி இருந்தார்கள்?

எட்டாவதாக கி.பி. 624 ஜனவரி மாதம். நபி (ஸல்) அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி (ரழி) அவர்களை நக்லாஎன்ற இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இது வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சி. 

அவரோடு இடம் பெற்றவர்கள் 12 பேர் என்றும். 8 பேர் என்றும்.  உடன் சென்றவர்கள் எட்டு தலைவரோடு சேர்த்து 9 என்றும் செய்திகள் உள்ளது. ஒன்பது பேருடைய பெயர்கள் உள்ளதால் 9 பேர் என்பதே சரி என்கிறார்கள். இருவருக்கு ஓர் ஒட்டகம் வீதமாக இவர்கள் ஒருவர் மாறி ஒருவர் பயணம் செய்தார்கள்.


நபி (ஸல்) ஒரு கடிதத்தை எழுதி அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். இரண்டு நாட்கள் கழிந்த பின்தான் கடிதத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்கள். அப்துல்லாஹ் (ரழி) அப்படையை அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டு சென்றார்கள். அது ஹிஜ்ரி இரண்டு ரஜப் மாதம். இது எப்படிப்பட்ட மாதம்? 

போர் செய்வதற்கு தடை செய்யப்பட்ட மாதம். புனிதமிக்க நான்கு மாதங்களில் ரஜபும் ஒன்று. இந்த மாதத்தில் எந்த தாக்குதலும் செய்ய முடியாது. இந்த மாதம் முடிந்தால்தான் போர் செய்ய முடியும். இஸ்லாம் அங்கீகரித்த சட்டம். ஜாஹிலிய்யா காலத்திலேயே அரபு மக்களால் ஏற்கப்பட்டு இருந்தது. மக்கா காபிர்களும் போர் புரிய மாட்டார்கள்.

ஆனால் மக்கா காபிர்கள் என்ன செய்வார்கள்? அந்த மாதத்தில் போர் புரிந்து விட்டால். அடுத்த மாதத்தை புனித மாதமாக மாற்றிக் கொள்வார்கள். உதாரணமாக ரஜப் மாதம் போர் செய்து விட்டால். ஷஃபான் மாதத்தை ரஜப் என இவர்கள் விருப்பத்திற்கு பெயர் மாற்றிக் கொள்வார்கள். இதை அல்லாஹ் திருமறையில் சொல்லி காட்டி உள்ளான்.  

முஸ்லிம்கள் அல்லாஹ்வின் சட்டத்தை பின் பற்றக் கூடியவர்கள். இரண்டு நாள் கழித்து அந்த கடிதத்தை அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் பிரித்துப் பார்த்தார்கள்.. அல்லாஹ்வின் துாதர் (ஸல்) அந்த கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறார்கள்?

நீங்கள் எனது இந்தக் கடிதத்தைப் படித்த பிறகு, மக்காவுக்கும் தாயிபிற்கும் மத்தியிலுள்ள நக்லாஎன்ற இடத்தை அடையும் வரை தொடர்ந்து செல்லுங்கள். அந்த இடத்தை அடைந்து விட்டால் அங்குத் தங்கி விடுங்கள். குறைஷிகள் வியாபாரத்துக்காக போக்கு வரத்துக்கு பயன்படுத்தி கொண்டு இருக்கும் இடம் அது. குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை எதிர்பார்த்திருங்கள், அவர்களின் வருகையை அறிந்து. அங்கு என்ன நடக்கிறதோ அந்த செய்திகளை மட்டும் எனக்கு அனுப்புங்கள்இதுதான் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.  வேறு எதுவும் இல்லை.


நக்லா என்ற இடத்தில் பயண கூட்டம் போல் தங்க வேண்டும். போகின்ற வருகின்ற எல்லோரையும் அல்ல. குறைஷிகள் நடமாட்டத்தை மட்டும் கண்காணிக்க வேண்டும். கண்காணித்து தகவல் அனுப்ப வேண்டும். இந்த கடிதத்தைப் பார்த்த உடன் அவர்கள் என்ன எண்ணினார்கள்

குறைஷிகளின் செய்திகளை அறியப் போவது என்பது ஒரு உளவு பார்க்கும் வேலை. உளவு பார்க்க போகும்போது. உயிர் பிழைக்கவும் செய்யலாம். அவர்களிடம் பிடிபட்டு கொல்லப்படலாம். இது உயிரை பணயம் வைத்து செய்யக் கூடிய ஒரு வேவு பார்க்கும் வேலை. வியாபார கூட்டதில் வருகின்றவர்கள் இவர்களை தெரிந்தவர்கள்தான். இவர்கள் அனைவருமே மக்காவாசிகள். யாரும் மதீனாவாசி கிடையாது. இவர்கள் அனைவரின் முகங்களை தெரிந்தவர்கள்தான் வருவார்கள். 

அபுஜஹ்ல், உத்பா, ஷைபா உட்பட எல்லாருக்கும் இவர்களைத் தெரியும். எனவே இவர்கள் தங்கி இருப்பது தெரிந்தால் அவர்கள் வந்து தாக்கி விடலாம். இவர்கள் சிறிய எண்ணிக்கையே உள்ளனர். அவர்கள் பெருங் கூட்டமாக வந்தால் எதுவும் நடக்கலாம். ஆக இது ஒரு ஆபத்தான பணிதான்.

இதைப் படித்த அப்துல்லாஹ் (ரழி) செவிமடுத்தோம் வழிப்பட்டோம்!என்று கூறியவராக, இச்செய்தியை தங்கள் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.  “நான் உங்களை நிர்பந்திக்கவில்லை. யார் ஷஹீதாக - வீரமரணம் அடைய விரும்புகிறாரோ அவர் என்னுடன் வரலாம். யார் மரணிப்பதை வெறுக்கிறாரோ அவர் திரும்பிவிடலாம். யாருக்கும் நிர்ப்பந்தம் கிடையாது. ஆனால், நான் ரசூல்(ஸல்) அவர்களின் கட்டளையை நிறைவேற்ற தயாராகி விட்டேன். என்று கூறினார்.

உடனே அவர்களது தோழர்கள் ரசூல்(ஸல்) அவர்களின் கட்டளையை நிறைவேற்ற நாங்களும் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்கள். இவ்வாறு இவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். வழியில் ஸஅது இப்னு அபீவக்காஸ்(ரலி), உத்பா இப்னு கஸ்வான்(ரலி) ஆகிய இருவர் அவர்களது ஒட்டகத்தைத் தவற விட்டு விட்டனர். எனவே அவர்கள் அதைத் தேடுவதில் ஈடுபட்டு படையிலிருந்து போய் விட்டனர். 

அப்துல்லாஹ் (ரழி) மீதமுள்ளவர்களுடன் நக்லாஎன்ற அந்த இடத்தை வந்தடைந்தார்கள். இந்த இடம் எப்படிப்பட்டது எனில். இங்கு மதீனாவாசிகளின் எந்த ஆதிக்கமும் கிடையாது. மதீனாவாசிகளை இங்கு பார்க்கவும் முடியாது. அந்த மாதிரியான ஒரு இடமாக இருப்பதால் அந்த வழியாக குறைஷிகளில் உள்ள மிகப் பெரிய ஆட்கள் இந்த வழியாக வரக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே அந்த இடத்தில் தங்கி உளவு பார்த்து கொண்டிருந்தார்கள்.

பெரிய வணிக கூட்டம் எதுவும் வரவில்லை. மொத்தமே நான்கு பேர்களை மட்டுமே கொண்ட மிகச் சிறிய வணிகக் கூட்டம் வந்தது. ஹள்ரமீ என்ற ஒருத்தர் தலைமை ஏற்று வந்தார். அப்துல்லாஹ் என்பது அவரது பெயர். ஹழ்ரமீ கோத்திரத்தைச் சார்ந்தவர். அம்ர் இப்னு ஹழ்ரமீ என்றும் அறியப்பட்டிருக்கிறார். 

அவரது தலைமையில் உஸ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா, நவ்ஃபல் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா. மற்றும் முகீரா கிளையினரின் அடிமையான ஹகம் இப்னு கைஸான் ஆகியோருடன் வியாபாரக் குழு வந்தது. 

அவர்களிடம் உலர்ந்த திராட்சை, பதனிடப்பட்ட தோல் மற்றும் வியாபாரப் பொருட்கள் அவர்களிடம் இருந்தது. பதனிடப்பட்ட தோல், உலர்ந்த திராட்சை ஆகிய இரண்டும் அந்தக் காலத்தில் விலை உயர்ந்த பொருட்கள். பண்ட மாற்றிலேயே தோல் கொண்டு போய் கொடுத்தால் தேவையானதெல்லாம் வாங்கி விடலாம். ஒரு தோலுக்கு எவ்வளவோ பொருள்கள் கிடைத்து விடும்.

அதே மாதிரி உலர்ந்த திராட்சை உணவிலேயே உயர்ந்த விலை உடையது. இந்த இரண்டும் இன்றைய தங்கம், வைரம் போன்றது. இதுவெல்லாம் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்ற தகவல் எல்லாம் சேகரித்து விட்டார்கள். இப்பொழுது அவர்கள் முன் உள்ள பிரச்சனை என்ன? 

சங்கைமிக்க மாதமாகிய ரஜப் மாதத்தின் கடைசித் தேதியில் இருக்கிறார்கள். இப்போது அவர்களுடன் சண்டையிட்டால் சங்கைமிக்க மாதத்தின் கண்ணியத்தைப் பாழ்படுத்தியவர்களாக ஆகி விடுவார்கள். ரஜப் மாதம் முடியும் வரை அதாவது ஒரு இரவு காத்து இருந்தால் அவர்கள் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விடுவார்கள். தாயிப் வழியாக திரும்பிக் கொண்டிருக்கும் அவர்கள் ஹரம் எல்கைக்குள் நுழைந்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. 

எனவே இப்பொழுது தாக்குதல் நடத்த வேண்டும் என்றால் இன்று ரஜப் மாதமாக இருக்கிறது. ரசூல்(ஸல்) அவர்களுக்கு செய்தி அனுப்பி விபரம் கேட்பதற்கு கால அவகாசம் இல்லை. எனவே இப்பொழுது என்ன செய்வது? என்று அப்துல்லாஹ்(ரலி) தங்களது தோழர்களிடம் ஆலோசனை கேட்டார்.

ரசூல்(ஸல்) அவர்கள் தகவல்தான் தரச் சொன்னார்கள் என்று ஒருவர் கருத்து கூறினார். தகவல்தான் தரச் சொன்னார்கள் என்பது உண்மைதான். விலை உயர்ந்த நிறைய சரக்குகளுடன் போகிறார்கள். இந்த பொருள்களெல்லாம் மக்கா போய் சேர்ந்தால் அது நமக்கு எதிராகத்தான் பயன்படும். பெரிய இலாபகரமான சரக்குகளுடன் போய்க் கொண்டு இருக்கிறார்கள். இவர்களை விட்டால் நமக்கு எதிராகத்தான் பயன்படுத்துவார்கள். நம்மை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார்கள். இப்படி பலவிதமான கருத்து வேறுபாடுகள் வந்தது.

ஆலோசனையின் இறுதியில். நடக்கிறது நடக்கட்டும். ஏற்கனவே ஏழு முயற்சிகள் செய்தும் எதிலுமே எதுவும் கிடைவில்லை. வாய்ப்பு கிடைத்து இருப்பது இந்த முயற்சியில்தான். இந்த முறை நாம் முந்திக் கொண்டோம். நாளை அவர்கள் வரப் போகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நம்மால் இயன்றதை பார்த்து விடுவோம் என்று முடிவுக்கு வந்தார்கள்.

இது அவர்களுக்குள் எடுத்த முடிவு. அல்லாஹ்வுடைய துாதருக்கு எந்த பங்கும் இதில் இல்லை. ரசூல்(ஸல்) அவர்கள் தாக்குதல் நடத்தச் சொல்லி உத்தரவு போட்டு அனுப்பவும் இல்லை. ரசூல்(ஸல்) அவர்கள் உத்தரவு என்னவென்றால் தகவல் சொல்வதுதான். ங்கு என்ன நடக்கிறதோ அந்த செய்திகளை மட்டும் கொண்டு வாருங்கள் என்றுதான் கூறி இருந்தார்கள். தாக்கச் சொல்லவில்லை. நடந்தது என்ன? அதனால் நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் என்ன? அவர்களை நோக்கி வந்த விமர்சனங்கள் என்ன என்ன?
http://mdfazlulilahi.blogspot.in/2016/07/blog-post_3.html 

தொடரும் இன்ஷாஅல்லாஹ்
                                                                       அடுத்த தலைப்பு
முந்தைய தலைப்பு

தேர்தல் நேரங்களில் தண்ணி பட்ட பாடாகப் படுவது எது?


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு