சொந்த வீட்டுக்காக போகாத பிள்ளைகள் சொந்தக்காரர்களுக்காக போகுமா?

அன்றைய வியாபாரம் என்பது ஒவ்வொருவரும் தனித் தனியாக செல்வது என்ற நிலையில் உள்ளது அல்ல. ஒரு ஊரில் உள்ள அத்தனை பேருடைய பொருளையும் வியாபாரத்துக்கு கொண்டு போவார்கள். குடும்பத்துக்கு ஒருவர் என உடன் செல்வார்கள்

வீட்டுக்கு ஒருவர் அல்ல குடும்பத்துக்கு ஒருவர். 10 குடும்பத்திலிருந்து பத்துப் பேர்இருபது குடும்பத்திலிருந்து 20 பேர் என்றுதான் போவார்கள். அவர்களில் ஒருவர் தலைவராக இருப்பார். எல்லாருமாக போய் விட்டால் ஊரில் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாருமாகப் போவது அந்தக் காலத்தில் தேவையற்றதும் கூட.



சுமைகளை, வியாபாரப் பொருள்களை வாகனங்கள்தான் சுமக்கும். எனவே 10 ஒட்டகங்களுக்கு ஒரு ஆள். 20 ஒட்டகங்களுக்கு ஒரு ஆள் என்றுதான் போவார்கள். ஒட்டகங்களை கட்டுப்படுத்தி வழி நடத்த தெரிந்த ஆட்கள். வியாபாரம் செய்வதற்கு வியாபார திறமை உடையவர்கள். இப்படித்தான் போவார்கள்

அவரவர் பொருள்களுக்கு அவரவர் போக வேண்டும் என்ற நிலை அன்று கிடையாது. பண்டமாற்று வியாபாரம் என்பதால் இதுதான் யதார்த்தம். 50 வயதை தாண்டிய முந்தைய தலை முறையினருக்கு இது புரியும். ரேடியோ, டேப், டி.வி, ஸ்மார்ட் போன் போன்றவை எளிதாக இல்லாத காலம் அது. அவைகளால் கட்டிப் போடப்பட்டுள்ள இன்றைய பிள்ளைகளுக்கு இது புரியாது.


முந்தைய தலை முறையினர் கடைக்கு போகிறார்கள் என்றால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் விசாரிப்பார்கள். அவர்கள் உறவினர்களாகக் கூட இருக்க மாட்டார்கள். நபி(ஸல்) சொன்ன பக்கத்து வீட்டுக்காரர் என்ற உரிமைதான். நான் பஜாருக்கு (கடைத் தெருவுக்கு)ப் போகிறேன் உங்களுக்கு ஏதாவது வேண்டுமா? என்று கேட்பார்கள்

நடந்து போகிறவர் 5 வீடுகளுக்கு ஒருவர். சைக்கிள், மாட்டு வண்டி போன்ற வாகனத்தில் போகின்றவர் என்றால் பத்து 15 வீடுகளுக்கு ஒருவர். இப்படிப் போய் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து ஒருவருக்கொருவர் உபகாரிகளாக இருந்தார்கள். அதுபோல்தான் அவர்களது பிள்ளைகளும் உபகாரிகளாக வளர்ந்தார்கள்.

இப்பொழுது கிராமங்களில் கூட இந்த உபகார நிலையை காண முடிவதில்லை. சொந்த பந்தங்களைக் கண்டால் எங்கே வேலை சொல்லி விடுவார்களோ என்று தலை தெறிக்க ஓடும் பிள்ளைகளாக வளர்த்து விட்டார்கள்

அவர்கள் சொந்த வீட்டுக்காகவும் போவது இல்லை. சொந்த வீட்டுக்காக போகாத பிள்ளைகள் சொந்தக்காரர்களுக்காக போகுமா? போகாது போவது இல்லை. அதனால்தான் அளவுக்கு அதிமாக டோர் டெலிவரிகள் பெருகி விட்டது. விஞ்ஞான முன்னேற்றத்தின் விமர்சிக்கப்படும் விளைவுகளில் இதுவும் ஒன்று.

ஒருவர் போய் பல வீடுகளுக்கு சாமான் வாங்கி கொடுத்த அந்த நிலைதான் அந்தக் கால வியாபாரத்திலும் இருந்தது. எனவே மக்காவில் இருந்தவர்கள் முடிவு செய்தார்கள். முஸ்லிம்கள் வலுப் பெற்று விட்டார்கள். ஆகவே முஸ்லிம்களை விட்டு வைக்கவே கூடாது. எனவே அபு சுப்யான் தலைமையில் வரக் கூடிய முழு வணிகப் பொருளையும் முழுமையாக யுத்தத்திற்காக செலவு செய்வோம். எப்படியாவது முஹம்மதுவையும் அவரைச் சார்ந்தவர்களையும் நாம் கொன்று விடுவோம் என்று தீர்மானிதார்கள். 

இப்படி இவர்கள் மிக உறுதியாக இறுதி முடிவு எடுத்து யுத்தப் பிரகடனம் செய்தார்கள். அதுதான் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. ஜாகிர் நாயக் பிரச்சாரம் உலக அளவில் வலுப் பெற்று விட்டது அதனால் சங்பரிவார் அரசு சந்தர்ப்பம் பார்த்து அவருக்கு எதிராக வேலைகளை செய்து வருகிறது. இதுவும் மக்கா காபிர்கள் வழியில் உள்ளதுதான்.

போர் தடுப்பு முயற்சிகளிலே ஏழாவது முயற்சியான துல் உஷைராவின் அந்த முயற்சி. ஷாம் நகரை நோக்கி போன அந்த வியாபாரக் கூட்டத்தை திரும்ப வரும்போது தடுக்க வேண்டும் என்ற அந்த திட்டம்தான் பத்ரு போரின் துவக்கம்

மதீனா முஸ்லிம்களை முற்றிலுமாக அழித்து விடுவதற்காக வரக் கூடிய  பொருளாதாரம் அது. அந்த பொருளாதாரம் மக்காவுக்கு போய் சேர்ந்த உடனே அவர்கள் திட்டமிட்டபடி திரட்டிய பொருளாதாரத்தோடு திரண்டு கொண்டு வர இருக்கிறார்கள்.

போர் புரிய போக வேண்டும் என்று சொன்னால் அங்கிருந்து வர பத்து அல்லது பதினைந்து நாட்களாகும். 300 மைல்கள் வர வேண்டும் என்றால் அவ்வளவு நாட்களாகும். 15 நாள் பயணத்துக்கு உரிய சாப்பாடு வேண்டும். களத்திற்கு வந்த பிறகு எத்தனை நாள் இந்த போர் நடக்கும் என்று சொல்ல முடியாது. அந்தந்த காலத்திற்கு என்று போருக்கு என ஒரு முறை இருக்கும். ஒரேயடியாக எல்லாரும் மொத்தமாகப் போய் மோதிக் கொள்ள மாட்டார்கள்

முதலில் ஒருவருக்கு ஒருவர். பிறகு இருவருக்கு இருவர். பிறகு மூவா் இப்படித்தான் போர் ஆரம்பம் ஆகும். இப்படியான போர் எத்தனை நாள் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. மறுபடி திரும்ப வருவதற்கும் அதே மாதிரி பத்து பதினைந்து நாட்களாகும். இதற்கு எல்லாம் உணவு வேண்டும்.

இடையில் எங்கும் போய் வாங்க முடியாது. ஹோட்டல்கள் இல்லாத காலம். பாலைவனம். அந்த பாலைவனத்தில் உணவு என எதுவுமே கிடைக்காது. இவ்வளவு காலத்துக்கும் தேவையான உணவுகளை சேகரித்துக் கொண்டு போக வேண்டும். அந்த அளவுக்கு தேவையான உணவு வகைகளை சேகரித்துக் கொண்டு அவர்கள் ஷாமிலிருந்து வருகிறார்கள். அதை முறியடித்து விட்டால் அவர்கள் திட்டப்படி போர் செய்ய வருவதற்கு சக்தி பெற மாட்டார்கள்

எனவே அதை முறியடிக்க வேண்டும் என்பதற்காக ரசூல்(ஸல்) அவர்கள் மீண்டும் ஒரு போர் தடுப்பு முயற்சியை மேற்கொள்கிறார்கள். தடுப்பு முயற்சிதான் பத்ருப் போரின் ஆரம்ப கட்டமாக ஆகிறது.

சுமார் 1000 ஒட்டகங்களுடன் ஷாமில் இருந்து திரும்பக் கூடிய நாட்கள் நெருங்கியது. உடனே தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஸஈது இப்னு ஜைது (ரழி) ஆகிய இருவரை நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் வடக்குத் திசையை நோக்கி அனுப்பி வைத்தார்கள். அனுப்பி அவர்களைப் பற்றிய செய்திகளை கொண்டு வாருங்கள் என்று அனுப்பினார்கள்

அப்பொழுதும் பத்ரு என்ற இடம் தீர்மானிக்கப்படவில்லை. ஹவ்ராஎன்ற இடத்தைத்தான் தேர்வு செய்கிறார்கள். அந்த இரண்டு பேரும் அந்த இடத்தை அடைந்து அங்கு தங்கியிருந்தனர். பொதுவாக ஒட்டகங்களை விட குதிரைகள் மிக வேகமாக வந்து விடும். எனவே குதிரைகளில் வரக் கூடியவர்கள் முன்பே வந்து விடுவார்கள். ஒட்டகக் கூட்டம் 15 நாட்களாக வரும் என்றால் குதிரைகளில் வரக் கூடியவர்கள் வேகமாக 3நாளில் வந்து விடுவார்கள்.

அவர்களிடம் விசாரிப்பார்கள். ஒட்டகங்கள் பெரும்பாலும் ஆடு மாடுகள் மாதிரி ஒன்றை ஒன்று ஒட்டி உரசிக் கொண்டு வராது. ஒன்றன் பின் ஒன்றாக ரயில் பெட்டிகள் மாதிரிதான் போகும்.  

1000 ஒட்டகம் என்றால் சும்மாவா? உதாரணமாக முதல் ஒட்டகம் சென்னை மண்ணடியில் மக்கள் உரிமை ஆபீஸ் முன் நின்றால் கடைசி ஒட்டகம் தாம்பரத்தில் ம.ம.க. முதல் மாநாடு நடந்த இடத்தில் நிற்கும். 


இவ்வளவு நீளமான பயணக் கூட்டம் என்றால் எளிதில் அடையாளம் சொல்ல முடியும். ஹவ்ராவில் தங்கி உள்ள அந்த இரண்டு தோழர்களும் சும்மா விபரம் தெரிந்து கொள்கிற மாதிரி. அப்பாவிகள் மாதிரி விசாரித்துக் கொண்டு இருந்தார்கள். அதாவது வேவு பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

உளவு பார்த்துக் கொண்டு இருந்த அவர்கள் அபூ ஸுஃப்யான் வியாபாரக் கூட்டத்துடன் திரும்பக் கூடிய செய்தியை அறிந்து கொள்கிறார்கள். அபுஸுப்யான் மக்காவில் உள்ள பெரிய தலைவர்களில் ஒருவர். அபு ஜஹ்லுக்கு அடுத்த நிலையில் உள்ளவர். பின்னர் இஸ்லாத்தை தழுவி விட்டார். அவர் இஸ்லாத்திற்கு வரும் முன்பு அவரது தலைமையில்தான் ஷாம்(சிரியா)வில் இருந்து மக்காவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். உடனே மதீனாவுக்கு செய்தியை அனுப்பி விடுகிறார்கள். 

ஒரு ஒட்டகம் என்பது குட்டி யானை என்கிறார்களே அதை விட கூடுதலாக சாமான்களை ஏற்றலாம். அரை லாரி சரக்கை ஒரு ஒட்டகம் சுமக்கும். 1000 ஒட்டகம் என்பது 500 லாரி அளவு சாமான்களை கொண்டது. அவ்வளவு பொருட்களை ஏற்றிக் கொண்டு வருகிறார்கள்.


அவர்கள் கொண்டு வரக் கூடிய பொருட்கள் 50,000 தீனார்கள் மதிப்பு உள்ளவை. அதாவது 50,000  தங்க காசுகள். 50,000  தங்க நாணயங்கள் என்பது அந்தக் காலத்தில் மிகப் பெரியது. இதற்கு பாதுகாப்பாக வருவது எத்தனை பேர் என்றால். வெறும் 40 பேர்தான். மக்காவாசிகள் 40 போ்தான் வருகிறார்கள். அருமையான ஒரு வாய்ப்பு. இந்தச் செய்தியை ரசூல்(ஸல்) அவர்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். 

அந்த நேரத்தில் கூட ரசூல்(ஸல்) அவர்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. வருகிறவர்கள் வாருங்கள் என்றுதான் அழைக்கிறார்கள். அப்படி இருந்தும் முன்னுாற்றுக்கும் மேற்பட்டவர்கள். வருகிறார்கள். முந்தைய 8 முயற்சிகள் போலவே இந்த முயற்சியும் இருக்கும் என்றுதான் மதீனாவில் உள்ள முஸ்லிம்கள் நினைத்தார்கள்.

அதனால்தான் தேவையான ஏற்பாடுகள் இல்லை. நிறைய பேர் போகவில்லை. எத்தனையோ முறை போய்விட்டு திரும்ப திரும்ப வருகிறார்கள். நாம போய் என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணி நிறைய பேர் வரவில்லை. அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூட இது போராக வெடிக்கும் என்று நினைக்கவே இல்லை.  

போர் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு போகவும் இல்லை. அந்த பொருளாதாரத்தை முடக்குவதன் மூலம். ஒரு பாதுகாப்பை நாம் அடையளாம் என்ற எண்ணத்தில்தான் ரசூல்(ஸல்) அவர்களே தலைமையாக முன்னின்று புறப்பட்டார்கள். அப்பொழுது அவர்களுடன் முஹாஜிர்களும் அன்சாரிகளுமாக சேர்ந்து முன்னுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் செல்கிறார்கள்.

போர் என்ற எந்த ஒரு ஆயத்தமும் இல்லாமல் சாதரணமாக 300க்கும் மேற்பட்டவர்கள் போகிறார்கள் என்றால். அதற்கு தகுந்த உணவு. எத்தனை நாட்கள் தங்க வேண்டும் என்ற திட்டம் எதுவும் இல்லாமல். திடீரென்றும் சாதாரணமாகவும் செல்கிறார்கள். மதீனாவில் இருக்கக் கூடியவர்களில் யாரையும் நிர்ப்பந்தப்படுத்தி அழைக்கவில்லை. மக்காவாசிகளோ போருக்கான எல்லா தயாரிப்புகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தொடரும் இன்ஷாஅல்லாஹ்.

நன்றி மக்கள் உரிமை

முந்தைய தலைப்பு 

ஈகை நபியையா இரக்கம் இல்லாதவர் போர்க் குணமும் பழி வாங்கும் எண்ணமும் உடையவர் என்கிறார்கள் பாவிகள்?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு