தேர்தல் நேரங்களில் தண்ணி பட்ட பாடாகப் படுவது எது?
அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள்
நேரடியாக கலந்து கொண்ட போர்களில் மிக மிக முக்கியமானது பத்ரு, உஹது,
அஸ்ஹாப்(கன்தக்), முரைஸி(பனுா முஸ்தலிக்), தாயிப், கைபர்,
மக்கா, ஹுனைன் ஆகியவை.
இவை எட்டிலும் புறம்படும்பொழுதே நேரடியாக கலந்து கொள்ள கிளம்பி விடுகிறார்கள்.
இப்படி புறப்படும்பொழுது தோழர்களில் ஒருவரை மதீனாவுக்கு கலீபாவாக-
பிரதிநிதியாக நியமித்து விட்டுத் தான் போவார்கள். ஆட்சியாளர் வெளியில்
போனால் அந்த பொறுப்பில் ஒருவரை வைத்து விட்டு செல்ல வேண்டும் என்பதிலும் முன் மாதிரி
நபி (ஸல்) அவர்கள்தான்.
இப்பொழுது உள்ளவர்கள் விமானத்திலே பறப்பதிலேதான்
குறியாக இருக்கிறார்களே தவிர. பிரதிநிதியாக யாரையும் நியமிக்கத் தயாராக இல்லை. பிரதிநிதியாக யாரையும் நியமிக்காத
நிலையிலேயே அதிபதியாகப் போனவர்கள், அகதிகளாகவும் கைதிகளாவும்தான்
திரும்புகிறார்கள். பல நாட்டு அதிபதிகளின் நிலை இன்று இப்படித்தான்
உள்ளது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் போல் எல்லா தரப்பு மக்களாலும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்கள்
அல்ல இவர்கள்.
இந்த ‘அல்அப்வா’ அல்லது ‘வத்தான்’ என்ற நிகழ்வுக்கு போவதற்கு முன்னால். ஆட்சியாளரான அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள். ஸஅது இப்னு உபாதா (ரலி)
அவர்களை மதீனாவின் பொறுப்பில் வைத்து விட்டுச் சென்றார்கள். அவர் ஒரு அன்சாரித் தோழர். பெரிய தியாகி.
அகபாவில் உடன்படிக்கை எடுத்து இஸ்லாத்தை ஏற்ற 12 பேரில் ஒருவர்.
குறைஷிக் கூட்டம் ஒன்று வருகிறது. பனுா ழம்ரா என்ற ஒரு கூட்டம் அவர்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கிறது என்ற தகவல் கிடைக்கிறது. ஆட்சித் தலைவரான ரசூல்(ஸல்) அவர்கள் தலைநகரிலேயே இருந்து கொண்டிருக்கவில்லை. தகவல் கிடைத்ததும் அவர்களே தலைமை ஏற்று சென்றார்கள். ஆனால் குறைஷிக் கூட்டம் வரவில்லை. அது தவறான தகவல். அதனால் சண்டை எதுவுமே நடக்கவில்லை. இருந்தாலும் இதுவும் போர் என்றே
பதியப்பட்டுள்ளது.
பனுா ழம்ரா என்ற கோத்திரத்தாரிடம் சென்றார்கள். அவர்கள்தான் குறைஷிகளுக்கு உதவி ஒத்தாசைகள் செய்கிறார்கள் என்பதால் எச்சரிக்கை செய்தார்கள். ‘ழம்ரா’ கிளையினரின் தலைவரான அம்ர் பின் மக்ஃஷி அல் ழம்ரி என்பவருடன் நட்பு உடன்படிக்கை
செய்தார்கள்.
“இது அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மது ‘ழம்ரா’ கிளையினருடன் செய்யும் ஒப்பந்தம்...” என்றுள்ள உடன்படிக்கையில் சில வாக்குறுதிகள்
அளித்தார்கள். ஒரு இடத்திற்கு நாம் போனால். அங்கு உள்ளவர்களுடைய ஆதரவு நமக்கு வேண்டும்
என்றால். அந்த ஆதரவை பெறுவதற்கு அவர்களுக்கு தேவையான சில வாக்குறுதிகளை
கொடுக்க வேண்டும்.
இந்த மாதிரி வாக்குறுதிகளை இன்றும் கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள். ஆனால் கொடுக்கும் வாக்குறுதிகளை நிலை நாட்டுகிறார்களா
என்றால், நிச்சயமாக இல்லை. வாக்குறுதிகள்
என்றால் எல்லாரும் கொடுப்பார்கள். நமது நாட்டில் அரசியல்வாதிகளால்
கொடுக்கப்படாத வாக்குறுதிகளா? தேர்தல் நேரங்களில் தண்ணி பட்ட
பாடாகப் படுவது எது? வாக்குறுதிகள்தானே! தாங்களாகவே வாக்குறுதிகளை அள்ளிக் கொடுப்பார்கள்.
காணாததற்கு தங்கள் தலைமையிடமிருந்து வாங்கியும் கொடுப்பார்கள்.
எதை? வாக்குறுதிகளை.
அல்லாஹ் உடைய துாதர்(ஸல்) அவர்கள்
அளித்த வாக்குறுதிகள், செய்த ஒப்பந்தங்கள் மற்றவற்றுடன் எப்படி வித்தியாசப்படுகிறது?
அதையும் பார்க்க வேண்டும். துாதருடையவை கடைசி வரை நடைமுறைப் படுத்துவதற்கு சாத்தியமானதாக
இருந்தது. காரணம் அது
உண்மையான வாக்குறுதியாக இருந்தது. இப்போதைக்கு சொல்லி சமாளிப்போம்.
இப்படி சொல்லும் போதே ஏமாற்றும் எண்ணத்துடன் சொல்கிறார்களே! அது
போல அந்த வாக்குகள் இருக்கவில்லை. நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம்
உடையதாக அந்த வாக்குகள் இருந்தன.
வாக்குறுதிகள் இறைவனிடம் விசாரிக்கப்படும்
என்ற அச்சமும் அவர்களிடம் இருந்தது. அதனால்தான் ஒரு வாக்குறுதியை கொடுத்து
விடுவார்களோயானால். அதை நிறைவேற்றுவார்கள். ஏன் என்றால் வாக்குறுதிகள் மறுமையில் விசாரிக்கப்படும் என்பது அல்லாஹ்வின்
எச்சரிக்கை. ”வாக்கை (வாக்குறுதியை) நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக வாக்கு(குறுதி பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்)
விசாரிக்கப்படும். (திரு குர்ஆன் 17:34)
வாக்குகளை காப்பற்றக் கூடியவர்தான் முஹம்மது
நபி(ஸல்)
அவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால் இதை மிகைப் படுத்துவதற்காக என்ன சொல்வார்கள்? ரசூல்(ஸல்) அவர்களிடம் ஒருவர் ஒரு நாள் ஒரு இடத்திற்கு வருகிறேன்
என்று சொல்லி இருந்தார். அவர் வரவே இல்லை. சொன்ன நாளில் அங்கு போய் நின்ற ரசூல்(ஸல்) அவர்கள் மறு நாள் வரை அங்கேயே நின்றார்கள். இவ்வாறு சொல்வார்கள்.
இந்த மாதிரி சம்பவங்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை. ஒரே இடத்தில் நிற்பது சாத்தியமா? ஐந்து வேளை தொழுகைகள்
இருக்கிறன. அவசிய தேவைகள் இருக்கின்றன.
ரசூல்(ஸல்) அவர்கள் என்ன சொல்லி உள்ளார்கள். நீங்கள் வாக்கு கொடுத்தீர்கள் என்றால்
முடிந்த வரை செயல்படுத்துங்கள் என்று. முடியவில்லையா பிரச்சனையே கிடையாது.
முடியாததற்கு அல்லாஹ் யாரையுமே குற்றம் பிடிக்க மாட்டான்.
குறிப்பிட்ட ஒரு ஊரின்
நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் எதிர்பாரா போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.
தேர்தல் நேரத்தில் சொல்லத் தேவையே இல்லை. அல்லது வேறு விதமான காரணங்களால் குறித்த
நேரத்தில் போக முடியவில்லை. அல்லாஹ் குற்றம் பிடிப்பானா? குற்றம் பிடிக்க
மாட்டான். பொய்யான காரணங்களை சொல்லி வாக்கை நிறைவேற்றாமல் ஏமாற்றுபவர்களை சும்மா
விடவே மாட்டான் என்பது தனி விஷயம்.
இந்த மாதிரி மிகைப்படுத்தல்கள் ஒரு
காலத்தில் தெரியாமல் சொல்லி இருப்பார்கள். அவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில் இல்லாததை சொல்வதும் குற்றம் தான். அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள்
வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடக்கூடியவர்களாக இருக்கவில்லை. வாக்குறுதிகளை
காப்பாற்றக் கூடியவர்களாகவே இருந்தார்கள். ழம்ரா கிளையினருக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன?
ழம்ரா கிளையினர்
தங்களது உயிர், பொருள்
அனைத்திலும் பாதுகாப்புப் பெற்றவர்களே! ழம்ரா கோத்திரத்தாரிடம் சண்டை செய்பவர்களை நாங்களும் எதிர்ப்போம். சண்டை
செய்பவர்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்வோம். அதே மாதிரி எங்களோடு யாரும் சண்டைக்கு
வந்தால் ழம்ரா கோத்திரத்தாராகிய
நீங்களும் உதவி செய்ய வேண்டும். எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று
ஒப்பந்தத்ததை ஏற்படுத்தினார்கள்.
அது மட்டுமன்றி இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான எந்த ஒரு போரிலும் ஈடுபடக் கூடாது. அவ்வாறே நபி (ஸல்) உதவிக்காக அழைத்தால் அவர்களும் உதவ வரவேண்டும்
என்றும் ஒப்பந்தம் செய்தார்கள். இந்த ஒப்பந்தத்தை எழுதி
முடிக்கும்பொழுது இறுதியாக ஒரு வாசகம் இடம் பெற்றுள்ளது. என்ன வாசகம்?
”கடல் வற்றினாலும் இந்த ஒப்பந்தம் நிலைத்திருக்கும்” என்ற வாசகம் இறுதியாக இடம்
பெற்றுள்ளது. கடல் நீர் வற்றிப் போனாலும் இந்த வாக்குறுதி நிலைத்திருக்கும் என்று
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதே மாதிரி ரசூல்(ஸல்) அவர்கள் காலம் முழுவதும்.
அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. அந்த பகுதியில் உள்ளவர்கள் ஒட்டு மொத்தமாக
இஸ்லாத்திற்கு வரவில்லை. இருந்தாலும் அவர்களின் உயிருக்கும் பொருளுக்கும் இஸ்லாமிய
சாம்ராஜ்யம் பாதுகாப்பை கொடுத்து வந்தது.
இந்த நிகழ்வின் போது பதினைந்து நாட்கள் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வெளியில்
இருந்தார்கள். மக்காவிலிருந்து மதீனா வந்த பிறகு செய்த முதல் பயணமும் இதுதான். நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட முதல் போர் தடுப்பு முயற்சியும் இதுதான். 70 முஹாஜிர்களுடன் சென்ற இந்த முயற்சியிலும் வெள்ளைக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.
ஐந்தாவதாக செய்த முயற்சிக்குப் பெயர் ”பூவாத்“ இதற்கும் நபி (ஸல்) அவர்களே தலைமை ஏற்றுச்
சென்றார்கள். நபி (ஸல்) அவர்களுடன் 200 தோழர்கள் புறப்பட்டுப் போனார்கள். எதிர் தரப்பில் 2500 ஒட்டகங்கள்
மற்றும் 100 குதிரைகளுடன் வந்து கொண்டிருந்தனர்.
தொடரும் இன்ஷாஅல்லாஹ்.http://mdfazlulilahi.blogspot.in/2016/06/blog-post_43.html
அடுத்த தலைப்பு
சிறிய ஹஜ். பெரிய ஹஜ் சின்ன
பத்ரா? பெரிய பத்ரா?
முந்தைய தலைப்புகள்
Comments