நீங்கள் லட்சியத்திற்காக ஓட்டுக் கேட்டவர்களா? லட்சங்களின் பங்குகளை பெற ஓட்டு கேட்டவர்களா? உங்கள் செயல்பாடுகளே பதில் தரும்.

தேர்தல் முடிந்து விட்டது.  2 அணிகள் மட்டுமே  வெற்றிபெற்றுள்ளது.  இதைப்  பார்ப்பவர்களில்  2 அணியிருமே இருப்பீர்கள். தேர்தலோடு  உங்கள்  பணி  முடிந்து விட்டது  என்று  ஒதுங்கி  விடாதீர்கள்.  இனிதான் உங்களுக்கு  அதிகமான கடமை  இருக்கிறது.  

இத்துடன் உள்ள இந்த   குவளை, டிரம் ஆகிய  இரண்டும்  சாலை  ஓர  ஓட்டல்களில்  இருந்து எடுக்கப்பட்ட படங்கள். 


இப்படி வைத்துக் கொண்டு நவீன கட்டண கழிப்பிடம் என்ற பெயரால் ரூபாய்5, 10 என அவர்கள் காசு பிடுங்கிறார்கள்.

இது  ஒரு  பெண்கள்  கல்லூரியில் ஆண் விஸிட்டர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கக்கூஸில் எடுத்த போட்டோ. மாணவிகள் உபயோகிப்பது இதைவிட மோசமாக கண்றாவியாக இருக்கிறது என்றார்கள். இரண்டு  இடங்களிலுமே கடுமையான கட்டணம் வசூலிக்கிறார்கள். ஒன்றில் கட்டண கழிப்பிடம் என்று  போட்டிருப்பார்கள்  மற்றொன்றுக்கு கட்டண கல்லூரி என்று போட்டிருக்க மாட்டார்கள்.  

நம்மால் தேர்வு செய்யப்பட்ட MLA க்கள் அரசு  பஸ்களில் போவது  இல்லை.  கவுன்சிலர்களே AC கோச் கூபேயில்,   AC கார்களில்தான் போகிறார்கள். அப்படி  இருக்கையில் MLA க்களை பற்றி  சொல்லவும்  வேண்டுமா? முன்பெல்லாம் அரசு  பஸ்களின் முதல் இருக்கைகளில்  2 சீட்கள் MLA க்களுக்கு  என  ஒதுக்கி  எழுதப்பட்டிருந்தது. இப்பொழுது எந்த பஸ்களிலும் அந்த எழுத்து இல்லை.

பாளைத் தொகுதி MLA வாக VST ஷம்சுல் ஆலம்  அவர்கள்  இருந்த  நேரம். 1985ல் அவருடன்  மதுரை  ஆதீனத்தை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கச் சென்றோம்.  MLAக்கு‌ம்  அவருடன்  ஒருவருக்கும் இலவசம்.  எனக்கு  டிக்கெட்  எடுத்துக் கொண்டேன்.  சாலையோர ஓட்டலில் பஸ் நின்றது.  

இறங்கி  ஓடிய  கண்டக்டரும்  டிரைவரும் ஆளுக்கொரு நாற்காலியினை கொண்டு  வந்து  போட்டார்கள். MLA இயல்பாக  வெளியே உட்கார்ந்து  இருந்தார்.  VST ஷம்சுல் ஆலம் அமைதியானவர். பந்தா இல்லாதவர். 

ஓட்டலின் உள்ளே சென்ற மு லீக் தொகுதி அமைப்பாளர்  செ. கா. மு. யூசுப்  அவர்கள்  கை கழுகும் இடத்தில் முகம் கழுவிட சென்றார். அது  அழுக்கு  படிந்து  அசிங்கத்துடன் துர்நாற்றமாக இருந்தது. உடனே சப்தம்  போட்டார். கடை ஊழியர் சாப்பிட  வந்தவர்கள் பேசாமல்  போகிறார்கள். ”முகம் கழுவ வந்த  நீங்கள்  என்ன வம்பு பண்ணுகிறீகள்” என்று  கடுமையாக பேசினார்.  

”வெளியே உட்கார்ந்து  இருப்பது  யார்  தெரியுமா?  பாளை  தொகுதி MLA.  அவருடன் வந்து  இருக்கிறேன். சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு போன் போட்டார் என்றால் லைசென்ஸ் ரத்து செய்து  கடையை இழுத்து  மூடி  விடுவார்கள்”  என்றார். 

அது வரை வேடிக்கை பார்த்த கடை முதலாளி  ஓடி வந்து  செ. கா. மு. யூசுப்  கையை பிடித்து  கெஞ்சினார். உடனே சுத்தம் செய்கிறேன் என்றார். 2 ஊழியர்களுடன் ஓனரும் சேர்ந்து சுத்தம் செய்தார். 

1986இல்  மேலப்பாளையத்தில் பன்றிகள் பெருகி தொல்லை தாங்க முடியாத அளவை எட்டியது. ராஜாரஹீம் என்ற அதிகாரி நகர் சுத்தி தொழிலாளர் பற்றாக்குறையை பன்றிகள் நிவர்த்தி செய்வதாகக் கூறி சமாளித்துக் கொண்டிருந்தார். 

அ.தி.மு.க. சார்பில் ஜாபர் என்ற நகர் மன்ற உறுப்பினர் இருந்தார். அவர் பன்றி குட்டிகளை  பையில் அள்ளிச் சென்று நகர் மன்ற கூட்டம் நடந்தபொழுது கூட்டத்தினுள் கவுன்ஸிலர்களுக்கு மத்தியில் பன்றிக் குட்டிகளை ஓட விட்டு புரட்சி பண்ணினார்.  

இந்த அனுபவத்தை ஏன் எழுதுகிறேன். முடிந்தால் நீங்கள் செயல்படுத்துங்கள். நீங்கள் யாருக்காக ஓட்டுக் கேட்டீர்களோ அவர்கள் மூலம் இதனை சரி செய்ய முடியுமா? முயற்சி செய்யுங்கள்.

சுத்தம் சுகம் தரும். சுத்தம் சோறு போடும் என்பார்கள். அல்லாஹ்வின் துாதரோ (ஸல்)  சுத்தம் ஈமானில் பாதியாகும் என்று கூறி உள்ளார்கள்.அறிவிப்பவர் : அபூ மாலிக் அல்அஷ்அரீ நூல் : முஸ்லிம் (328) 

அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான் (அல்குர்ஆன் 9 : 108)

இன்று அரசு பஸ்கள் நிறுத்தும்  சாலை  ஓர கடை வரும்  முன்பே மூத்திர வாடை  வந்து விடும். திருநெல்வேலி துவங்கி சென்னை வரை அனைத்து பேருந்து நிறுத்தங்களும் துர் வாடையைக் கொண்டே வரவேற்கின்றன. யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. இது பழமொழி. அரசு பஸ்கள் நிறுத்தம் வரும் பின்னே மூத்திர வாடை வரும் முன்னே. இது புதுமொழி. 

AC காரில்  செல்லும் MLA க்கள் மூக்கை இந்த வாடை துளைக்காது. எனவே இதைப் பார்ப்பவர்கள், தேர்தலில் நாயாய், பேயாய்  ஓட்டுக் கேட்டு அலைந்தவர்கள். அவரவர் பகுதி MLA க்களிடம் இந்த மாதிரி குவளைகளை சேகரித்து கொடுங்கள். 

ஜாபர்  M.C. மாதிரி மன்றத்துக்குள் கொண்டு போக முடியாவிட்டாலும். சட்டமன்ற வாசல்களில் போட்டாவது புரட்சி பண்ணி தீர்வு காணட்டும். நீங்கள் லட்சியத்திற்காக ஓட்டுக் கேட்டவர்களா? லட்சங்களின் பங்குகளை பெற ஓட்டு கேட்டவர்களா? உங்கள் செயல்பாடுகளே பதில் தரும். 





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு