யாரைப் பற்றி நாம் விசாரிக்கப்படுவோம்?

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். இது இறைமறையில் (2:154,3:169ஆகிய) இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ள வசனங்கள். இந்த வசனங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு விதமாக ஒட்டு மொத்த சமுதாயத்தையும் வழி கெடுத்துள்ளதைப் பார்க்கிறோம். இணை வைப்பாளர்களாக ஆக்கியதைக் காண்கிறோம்.


தவறிய மனிதர்களை தரைக்குறைவாக விமர்சிக்கமாட்டோம்! தனி நபர் தாக்குதலை அடியோடு தவிர்ப்போம்! தவறுகளை எவர் சுட்டிக்காட்டினாலும் அடக்கத்துடன் ஏற்போம்! தனி மனித வழி பாட்டை தரை மட்டம் ஆக்குவோம். இது போன்ற கவர்ச்சி வசனங்களையும் வார்த்தை ஜாலங்களையும் சொல்கிறார்கள். சொல்லிக் கொண்டே தனி மனித வழி பாட்டுக் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வயது வரம்பு இன்றி மிகவும் அசிங்கமாக, தரக்குறைவாக பேசி, எழுதி இழிவுபடுத்தக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதன் மூலம் அவர்களை நரகத்துக்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதையும் பார்க்கிறோம்


அதுபோல் போர் நம்மீது கடமை. ஆகவே ஹைய அலல் ஜிஹாது. மீண்டும் கர்பலா. இப்படி அர்த்தம் தெரியாமல் கவர்ச்சி வார்த்தைகளைச் சொல்கிறார்கள். இப்படிச் சொல்லி யாரை நோக்கி ஆயுதத்தை எடுக்க வைத்துள்ளார்கள். தன் சகோதரனை நோக்கி ஆயுதத்தை எடுக்க வைத்துள்ளார்கள். இது இறைத் துாதர்(ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின்னால் தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் முஸ்லிம்கள் மத்தியில் நடந்து வருகிறது. முஸ்லிம்களுக்குள் அடித்துக் கொண்ட நிகழ்வுதான் கா்பலா. மீண்டும் கா்பலா என்றால் என்ன அர்த்தம். முஸ்லிம்களே முஸ்லிம்களை கொல்வோம் என்பதுதானே அர்த்தம்.


கர்பலா” சொல்வதற்கு கவர்ச்சியாக உள்ளதால். கர்பலா கர்பலா என கர்ஜிக்கிறார்கள். அதன்படி முஸ்லிம்களுக்குள் அடித்துக் கொண்டு கர்பலாக்களை மீண்டும் மீண்டும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். யார் ஒருவன் ஒரு முஸ்லிமை கொல்கிறானோ அவன் காபிராகி விடுகிறான். ஒரு முஃமினை ஏசுவது பாவம். ஒரு முஃமினை கொல்லுவது குபுர் என்று அல்லாஹ் உடைய துாதர்(ஸல்) எச்சரிக்கை செய்துள்ளார்கள். அல்லாஹ்வுடைய துாதரின் எச்சரிக்கையே ஜிஹாது, கர்பலா என்ற கவர்ச்சி வார்த்தைகளுக்கு முன் எடுபடாமல் போய் விடுகிறது.


ஜிஹாத் என்ற சொல்லைக் கேட்டாலே ஒரு சாரார் வெறுப்பின் உச்சக் கட்டத்திற்கு செல்கிறார்கள். இன்னொரு சாரார் உணர்ச்சியின் உச்சிக்கே எகிறிப் போய் விடுகின்றார்கள். அந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு விடுகின்றார்கள். அதனால் தங்களையும் தங்கள் சமுதாயத்தையும்தான் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் இலக்காக கூறும் எதிரிகள் அல்ல. எதிரிகளின் சிப்பாயிகளுமல்ல.  அப்பாவி பொதுமக்களான முஸ்லிம்கள்தான்.


பாதிக்கப்பட்ட பொதுமக்களில் ஜிஹாதில் ஈடுபட்டுள்ளவர்களின் குடும்பமும் அடங்கும். அவர்களின் பெற்றோரும் பிள்ளைகளும் உடன்பிறப்புகளும் சேர்ந்துதான் நடுத்தெருவில் நிற்கிறார்கள். கண்ணீர் விட்டுப் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஒரு பக்கம் இவர்கள் போர் முனையில் நிற்கும் காட்சிகள். இன்னொரு பக்கம் அவரது பெற்றோர்கள் பிச்சை எடுக்கும் காட்சிகள். இப்படி உலக டி.வி.க்கள் காட்டிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக முஸ்லிம் நாடுகளின் டி.வி.க்கள் அம்புக் குறி போட்டு அடையாளம் காட்டி ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றதைப் பார்க்கிறோம்.


காபிர்களால் வீட்டையும் நாட்டையும் இழந்த முஸ்லிம்கள் அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள். அது அன்றைய தியாக வரலாறு. முஸ்லிம்கள் முஸ்லிம்களால் வீட்டை இழந்து, நாட்டை இழந்து நாடோடிகளாகி விட்டார்கள். அக்கம் பக்கத்து நாடுகளில் அகதிகள் முகாம் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இது நாளைய வரலாறு இன்றைய செய்தி.  சோகச் செய்தி. ஜிஹாதிகளின் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உடன்பிறப்புகளுக்கும் அகதிகள் முகாம்கள்கூட அடைக்கலம் அளிக்க பயந்து மறுக்கின்றன. இது அதைவிட மோசமான துக்கச் செய்தி. ”நாட்டிலுள்ளவர்களை காக்க புறப்பட்டோம்” என்றவர்களால் அவர்களது வீட்டிலுள்ளவர்களுக்கு ஏற்பட்ட கதி இது.


எல்லை தாண்டியவர்களில் சிலர் நாட்டின் எல்லையை மட்டும் தாண்டவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக எல்லா எல்லைகளையும்தான் தாண்டி விட்டார்கள். இதைவிடப் பச்சையாக எழுத முடியாது. எழுதினால் மிகவும் கொச்சையாகப் போய்விடும். இதை நாம் உலக அளவில் கணடு வருகின்றோம். குறிப்பாக இப்பொழுது ஸிரியாவின் காட்சிகள் சாட்சிகளாக இருந்து கொண்டிருக்கிறது. விதவைகள் பெருகி இருக்கிறார்கள். வெளிநாட்டவர்களை திருமணம் மற்றும் மறுமணம் செய்யும் பழக்கம் உடையவர்கள் அரபிகள். அந்த அரபிகள் கூட சிரியாவின் கன்னிப் பெண்களையும் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்கள்.


சிரியன்கள் கூட பெண் பார்த்து பேசி முடித்த பின். இன்ன ஜிஹாதிக்கு துாரத்து சொந்தம் என்ற தகவல் கிடைத்தவுடன் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள். இதனால் 35 வயதுகளை தாண்டிய கன்னிகள் தேங்கிக் கிடக்கிறார்கள். நம் நாட்டிலே வரதட்சணைக் கொடுமை என்போம். இந்தக் கொடுமைக்கு என்ன பெயர் சொல்வது. 


அல்லாஹ்வின் துாதர் வியாபாரம் செய்யச் சென்ற சுரியாவின் இன்றைய நிலையை எழுதினால் ரத்தக்கண்ணீர்தான் வரும். கேள்விப்பட்டதையோ ஊடகங்களில் வந்ததை வைத்து ஊகித்தோ எழுதவில்லை. சம்பந்தப்பட்ட நாட்டினருடன் நேரடி தொடர்புடன் கலந்து இருந்து அறிந்து கண்ணீர் வடித்ததைத்தான் எழுத்தாக வடித்துள்ளோம்.


ஜிஹாதைப் பற்றி ஒவ்வொரு சாராரும் கொண்டுள்ள கருத்துக்கள் சரியானவையா? றையின் மறையும் நபியின் மொழியும் ஜிஹாத் சம்பந்தமாக என்ன விளக்கம் அளித்துள்ளனஉண்மை முஸ்லிம்கள் ஜிஹாது பற்றி எப்படிப் புரிந்து நடக்க வேண்டும்? என்பதை விளக்க வேண்டிய கட்டாய காலத்தில் வாழ்கிறோம்.


நம்முடைய அதிகாரத்தில் இல்லாத விஷயங்களில் நாம் ஈடுபடக் கூடாது. அதைப் பற்றி கேள்வி கேட்கப்பட மாட்டோம். எதைப் பற்றிய கேள்வி நமக்கு கேட்கப்படுமோ அதில்தான் நமது நோக்கம் இருக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் நாம் ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். யாரைப் பற்றி நாம் விசாரிக்கப்படுவோம்? 


நம்மைப் பற்றித்தான் நாம் விசாரிக்கப்படுவோம். நம்முடைய பொறுப்புகளைப் பற்றி நாம் விசாரிக்கப்படுவோம். அடுத்தவர்களைப் பற்றி விசாரிக்கப்படமாட்டோம். எனவே அடுத்தவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. அப்படியானால் ஒருவர் சிரமத்துக்கு உள்ளாகி இருந்தால். கவலைப்படாமல் போகணும் என்று அர்த்தம் அல்ல. நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். ஒருவர் அறியாமையில் இருந்தால் நம்மால் இயன்ற உபதேசங்களை செய்ய வேண்டும்


அந்த உபதேசமும் நபி வழியில்தான் இருக்க வேண்டும். நையாண்டி செய்யும் நாதாரிகள் வழியில் இருக்கக் கூடாதுநையாண்டி செய்வது உபதேச முறையும் அல்ல. நபி வழியும் அல்ல. நையாண்டி செய்வதுதான் பிரச்சாரப் பணி என சில அறிவுக் குருடர்கள் விளங்கி வைத்துள்ளார்கள். அதைச் செய்து சாதனை என பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நையாண்டி செய்வது வேஷதாரிகளின் வேலையாகும். வேஷம் போட்டு மோசம் போக வைக்கும் வேலையை முஸ்லிம்கள் செய்ய மாட்டார்கள். செய்யச் சொல்ல மாட்டார்கள். சரி எப்படி கவலைப்படக் கூடாது?

தொடரும் இன்ஷாஅல்லாஹ்
நன்றி மக்கள் உரிமை
முந்தைய தலைப்ப
அடுத்தடுத்த தலைப்புகள் 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.