முஸ்லிம்கள் எப்பொழுதும் வாளும் கேடயமுமாக நிற்க வேண்டுமா?

போர் செய்வதை மட்டும் கடமையாக்கவில்லை. தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவையும் கடமையாக ஆக்கப்பட்டுள்ளது. வற்றை கடமையாக ஆக்கிவன் யார்? ஒரே கடவுளான அல்லாஹ். 


தமிழுக்கு ஒரு கடவுள் இங்லீஷுக்கு ஒரு கடவுள் என்பதெல்லாம் இஸ்லாத்தில் இல்லை. எல்லா மொழியினருக்கும் எல்லா நாட்டவருக்கும் மட்டும் அல்ல. அனைத்திற்கும் கடவுள் அல்லாஹ் மட்டும்தான். 


இதை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லியே ஆக வேண்டும். அண்ணன் தம்பிகளாக பழகுகிறோம் என்பதால் சொல்லத் தயங்கக் கூடாது சொல்லாமல் தவிர்க்கவும் கூடாது. ஒரே கடவுளான அந்த அல்லாஹ்தான் ஒவ்வொரு கடமைக்கும் ஒழுங்குமுறைகளை, கட்டுப்பாடுகளை, விதிகளை, விதி விலக்கல்களை ஆக்கி இருக்கின்றான்.


நோன்பை கடமையாக்கிய அல்லாஹ் அதை எப்படி சொல்கிறான். ”யா அய்யுஅல்லரீன ஆமனுா குதிப அலைக்குமுஸ்ஸியாம்” அதே வார்த்தைதான். அங்கே “கிதால்” இங்கே (கிதால்-போர் என்ற இடத்தில்) “ஸியாம்”(நோன்பு) உள்ளது அவ்வளவுதான். 


ஈமான் (எனும் இறை நம்பிக்கை) கொண்ட மக்களே உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டு விட்டது (2;183) என்று சொல்லி விட்டான். இந்த வசனம் குர்ஆனில் இருக்கிறது. அதனால் எப்பொழுதும் நோன்பு வைத்துக் கொண்டே இருக்கிறோமா? ஆண்டு முழுவதும் நோன்பு நோற்கிறோமா? 24 மணி நேரமும் சாப்பிடாமல் பசியும் பட்டினியுமாக இருக்கிறோமா?


அல்லாஹ் நோன்பை கடமையாக்கி இருக்கிறான் என்பதால் எப்பொழுதும் நோன்பு வைத்துக் கொண்டே இருப்பதில்லை. ஏன்? எப்பொழுதில் இருந்து எப்பொழுது வரை கடமையாக்கி இருக்கிறான் என்று பார்க்கிறோம். நோன்பு வைக்கும் நேரத்தை நம் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியுமா? நோன்பு திறக்கும் நேரத்தைத்தான் நம் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியுமா? முடியாது.


”ரமழான் மாதத்தில்தான் இந்தக் குர்ஆன் இறக்கி அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். ஆகவே உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர்கள் நோன்பு நோற்கவும்இப்படி (திரு குர்ஆன் 2:185ல்) அல்லாஹ் நோன்பு கடமையாக்கப்பட்டது எப்பொழுது என்பதற்கு விடை தருகிறான். இதன்படிதான் நாம் நோன்பு நோற்கிறோம்.


வெள்ளிக்கிழமைக்கு என்று நோன்பு வைக்க கூடாது. பெருநாள் தினங்களில் நோன்பு வைக்க கூடாது. மாவிடாய் காலங்களில் பெண்கள் நோன்பு வைக்க கூடாது. இப்படியெல்லாம் தடைகள் இருக்கின்றது. நோன்பு வைத்துள்ள ஒருவர், நோன்பாளிகள் கடைபிடிக்க வேண்டிய விதிகளை மீறி, தன் விருப்பப்படி செயல்பட முடியாது. 


நோன்பை கடமையாக்கிய ஏக இறைவனான அல்லாஹ், அதற்கான ஒழுங்குகளையும், சட்டங்களையும், சட்ட விலக்கல்களையும் நமக்கு அளித்துள்ளான். அதைப் புரிந்து கொண்டுதான் நாம் அக்கடமையை நிறைவேற்ற வேண்டும். அதைப் புரிந்து கொள்ளாமல். அல்லது தவறாகப் புரிந்து கொண்டு நோன்பை நிறைவேற்றினால். அது இறைவனிடமிருந்து நன்மைக்குப் பதிலாக தண்டனைகள் தான் சம்பந்தப்பட்டோருக்கு கூலியாகப் பெற்றுத் தரும்.


தொழுகையை அல்லாஹ் கடமை ஆக்கி இருக்கிறான். அதனால் எப்பொழுதுமே தொழுது கொண்டு இருக்கிறோமா? தொழுகையை அல்லாஹ் கடமை ஆக்கி விட்டான். எனவே எப்பொழுதுமே தொழுது கொண்டு இருக்க வேண்டும். இப்படி ஒருவன் சொன்னால் அவனை என்னவென்று சொல்வோம்? அவனை எந்த லிஸ்டில் வைத்துப் பார்ப்போம்


நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது.(4;103) அதே மாதிரிதான் அல்லாஹ் நம்மீது போரை கடமையாக ஆக்கி இருக்கிறான் எப்பொழுது?


அதை இஸ்லாமிய வரலாற்றுப் பின்னணியோடு பார்க்க வேண்டும். அப்பொழுது என்ன விடை கிடைக்கிறது? அது போன்ற சம்பவங்கள், பாதிப்புகள் நமக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.  அது போன்ற நிர்ப்பந்தத்திற்கு நாம் ஆளாகி இருக்க வேண்டும். மிக முக்கியமானது அது போன்ற காலச் சூழலும் நமக்கு அமைய வேண்டும். அந்த சூழல் ஏற்பட்ட பின்னர். பனீஇஸ்ரவேலர்கள் வழியில் பின்வாங்கி விட்டு. ஒன்பதுகள் பேசுகிறார்களே அது மாதிரிதான் கூடாது.


உங்களை நோக்கி ஒருவன் வரம்பு மீறி வருவேன் என பிரகடனப்படுத்தி விட்டான். அதன் பிறகு. பயந்து புறமுதுகு காட்டலாமா? கூடாது.  அவனிடம் சொல்லுங்கஜி சொல்லுங்கஜி என பணிந்து சரண் அடைந்து அடிமைத்தனமாக பேசக் கூடாது. இது முஸ்லிம்களுக்குரிய தகுதியா? இல்லை. நிச்சயமாக இல்லை. அழித்தொழிக்கும் ஏழு பெரும்பாவங்களில் புறமுதுகு காட்டுவது ஒரு பெரும்பாவம் என்று அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் கூறி உள்ளர்கள்.( புகாரி2766)


உங்கள் மீது போர் புரிவது கடமை (2;216) என்று படைத்தவன் சொல்லி விட்டான். அதனால் 24 மணி நேரமும் கத்தியும் கையுமாக அலைய வேண்டுமா?. முஸ்லிம்கள் எப்பொழுதும் வாளும் கேடயமும் ஆக நிற்க வேண்டுமா? கூடாது. அந்த சூழலில், அந்த நேரத்தில். நாம் இருந்தால். நம் உயிருக்கு அஞ்சி அடி பணிந்து போகக் கூடாது. அப்படி போவது ஒரு முஃமினுக்கு உரிய தகுதி அல்ல. ஏனெனில் அது கடமையான நேரம். அந்த கடமை இன்றும் இருக்கிறது.


எந்த ஒரு பகுதியிலே நாம் வாழ்ந்தாலும் அந்தப் பகுதியிலே நமக்கு, நம்முடைய உறவினருக்கு, நம்முடைய பொருளாதாரத்திற்கு, நம்முடைய மானத்திற்கு,  நம்முடைய உரிமைக்கு ஒருவன் பங்கம் விளைவிப்பேன் என்று சொன்னால் அதற்காக அவன் ஆள் திரட்டினால். அவனை எதிர்த்து நிற்பது நம்மீது கடமை. நமக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை நாம் பார்த்தாலும். அதனையும் எதிர்த்து நிற்பதும் நம்மீது கடமையாகும். அதில் நாம் இறந்து விட்டால் ஷஹீது உடைய அந்தஸ்து நமக்கு உண்டு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

தொழுகையை நிலைநாட்டுங்கள் என்றுள்ள வசனங்களை எடுத்துக் கொண்டு எல்லா நேரத்திலும் ஏன் தொழவில்லை என யாரையும் கேட்க முடியாது. நோன்பு கடமை என்ற வசனத்தை வைத்துக் கொண்டு எல்லா மாதங்களிலும் ஏன் நோன்பு வைக்கவில்லை என்று யாரையும் கேட்க முடியாது


அது போல போர் கடமை என்ற வசனத்தை எடுத்துக் கொண்டு. எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் போர் கடமை என்று ஒருவர் சொன்னால். அவர் அவருக்கு, அவரது முடிவுக்கு சாதகமான வசனத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறார். உதாரணத்திற்கு இன்று வாட்ஸப் அதற்கு முன் ஈ மெயில் இண்டர்நெட் எனும் வலைத் தளங்கள்.


இவற்றின் மூலம் பெரும்பாலானவர்கள் பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். அதில் இஸ்லாத்தை எத்தி வைக்கும் பணிகளும் நடை பெறுகின்றன. இந்தப் பணிகளில் ஒரு சிலவற்றை காணும்போது சந்தோஷமாக இருக்கும். ஒரு சிலவற்றை பார்க்கும்போது நுனிப் புல் மேய்தல் என்ற நிலைதான் அவற்றில் அதிகம் உள்ளது என்பது தெரிய வரும்


இந்த வலைத் தளங்களில் ஒரு வசனத்தை எடுத்து வைத்துக் கொண்டு  ஒரு சில அற்புதங்களை சொல்கிறார்கள். அதிசயங்களை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற அவர்களின் ஆசை ஆர்வக் கோளாறாக ஆகிவிடுகிறது. அதன் காரணமாக உலகில் விஞ்ஞானம் என்று அறிவிக்கப்பட்ட ஒரு சம்பவத்தோடு ஒப்பிட்டு ஒரு ஆயத்தை மட்டும் எடுத்து போட்டு விடுகிறார்கள்.


அதைப் பார்ப்பவர்கள் குறிப்பாக பிற மதத்தவர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்பதே அவர்களின் நோக்கம். ஆச்சரியப்படுகின்ற மாதிரியான அதிசயம் எதுவுமே அதில் இல்லை. ஏன் எந்த வசனத்தை ஆதாரமாக எடுத்து எழுதுகிறார்களோ அதற்கு முரணான வசனங்களும் குர்ஆனில் இருக்கிறது. இதைப் பார்த்து விட்டு அதைப் படிக்கும்பொழுது சந்தேகங்கள்தான் வரும்.


எனவே ஒரு விஷயத்தைப் பற்றி எடுத்துச் சொல்லும்பொழுது அதைப் பற்றி வரக் கூடிய அத்தனை வசனங்களையும் எடுத்து எழுத வேண்டும். இந்த வசனத்தை இவ்வாறு விளங்க வேண்டும். அந்த வசனத்தை இவ்வாறு விளங்க வேண்டும். இன்ன வசனத்தை இவ்வாறு விளங்க வேண்டும். இப்படி விளக்கி விட்டு குறிப்பிட்ட இந்த வசனத்தின் அடிப்படையில் இன்றைய விஞ்ஞானம் இவ்வாறு சொல்கிறது என்று சொல்ல வேண்டும். இப்படி சொல்லும்பொழுது பார்ப்பவர்கள் எத்தனை முறை குர்ஆனை மீண்டும் மீண்டும் படித்தாலும் மறுபடியும் அவர்களுக்கு சந்தேகம் வராது.


போர் நம்மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால். அதனுடைய பின்னணி, அதன் உடைய காரணம். அதனுடைய கால கட்டம். அங்கு வாழ்பவர்களின் நிலைப்பாடு. இதையெல்லாம் வைத்துதான் போர் எப்படி கடமை என்று விளங்க வேண்டும்.  விளங்கிய உண்மை நிலையை விளக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஒரு வசனத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு ஜிஹாதுக்கு வாருங்கள் என்று அழைக்கக் கூடாது. ஜிஹாது என்றால் போர் என்று அர்த்தம் அல்ல என்பது தனி விஷயம்.
தொடரும் இன்ஷாஅல்லாஹ்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு