இறையச்சம்தான் ஒரு மனிதனை நேர்வழிபடுத்தும்.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
கண்ணியத்திற்குரியவர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முதல் முகவரி மனித நேய இல்லம். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டிருக்கும் அரசியல் கட்சியின் பெயர் மனித நேய மக்கள் கட்சி. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிறுவனர் குணங்குடி ஹனீபா. மனித நேய இல்லம் என்பதும் குணங்குடி ஹனீபா அவர்களது இல்லம்தான்.
குணங்குடி ஹனீபா.
1995 ஜனவரியில் மேலப்பாளையத்தில் தடாவுக்கு எதிராக ஜாக் சார்பில் நடத்தப்பட்டது மனித நேயப் பேரணி. மனித நேய மாநாடு. அப்பொழுதுதான் குணங்குடி ஹனீபா அவர்கள் மேலப்பாளையம் வந்தார்கள். அதன் பிறகு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனித நேய மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சி துவங்கிய பின் மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் காஞ்சி அப்துஸ்ஸமது கலந்து கொள்ளும் இந்த திருமணத்துக்கு வந்துள்ளார்கள்.
கட்சி பாகுபாடு இன்றி.
1995ஆண்டு குணங்குடி ஹனீபா அவர்கள் கலந்து கொண்ட ஜாக் சார்பில் மேலப்பாளையத்தில் நடத்தப்பட்ட மனித நேயப் பேரணி. மற்றும் மனித நேய மாநாட்டில் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் என்று கட்சி பாகுபாடு இல்லாமல் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்று திரண்டோம். அதே போல் கட்சி பாகுபாடு இன்றி இந்த திருமணத்தில் ஒன்று திரண்டு இருக்கிறோம். கட்சி பாகுபாடு இன்றி ஒன்று திரண்டு இருக்கும் எங்கள் அனைவரையும் யா அல்லாஹ் முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக. இதுபோல் சுவர்க்கத்திலும் அனைவரையும் ஒன்றிணைப்பாயாக என்று துஆச் செய்து கொள்கிறேன்.
பொதுவான இந்த அடிப்படையில்.
திருமண குத்பா திருமண உரை என்பதற்கு ஹதீஸ்களில் எந்த ஆதாரம் கிடையாது. மக்கள் அதிமாக கூடும் இடங்களிலெல்லாம் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்யக் கூடியவர்களாக, உபதேசம் செய்யக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். பொதுவான இந்த அடிப்படையில்தான் திருமண நிகழ்ச்சிகளில் நாம் பிரச்சாரம் செய்கிறோம்.
அரபியில் மட்டும் சொல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும்போது யா அய்யுஹன்னாஸுத்தகூ றப்பகுமுல்லரீ கலககும் மின்னஃப்ஸின்வ் வாஹித(தின்) வகல மின்ஹா ஸவ்ஜஹா வபஸ்ஸ மின்ஹுமா ரிஜாலன் கஸுறன்வ் வநிஸா வத்தகுல்லாஹல்லரீய் தஸாஅலூன பிஹி வல்அர்ஹாம் இன்னல்லாஹ கான அலைக்கும் றகீபா என்ற வசனத்தைக் கொண்டு உபதேசிக்கக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த வசனத்தை எல்லா தரப்பினருமே திருமண நிகழ்ச்சிகளில் அரபியில் மட்டும் சொல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
தமிழிலே யாருமே மொழி பெயர்த்து சொல்வதில்லை. மனிதர்களே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள் என்று இந்த வசனம் இறையச்சை சொல்கிறது. எவனை முன்னிறுத்தி நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி வேண்டுவீர்களோ அந்த இறைவனை அஞ்சுங்கள் என்றும் இந்த வசனத்தில் இறையச்சை பற்றி இரு முறை சொல்லப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருமே திருமண நிகழ்ச்சிகளில் இதை ஒரு சடங்காக அரபியில் மட்டும் படிக்கிறார்கள். தமிழிலே யாருமே மொழி பெயர்த்து சொல்வதில்லை. மொழி பெயர்த்து சொல்லி இறையச்சம் ஏற்படும் வண்ணம் எச்சரிப்பதில்லை.
தமிழில் கூறி உபதேசிக்க வேண்டும்.
இறைத்தூதரின் உரைகளிலே வலா தமூதுன்ன இல்லா வஅன்தும் முஸ்லிமூன் என்ற வசனத்தைக் கொண்டும் உபதேசிக்கக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த வசனத்தை எல்லா உரைகளிலும் ஓதக் கூடியவர்களில் பெரும்பாலானவர்கள் திருமண நிகழ்ச்சிகளில் ஓதுவதில்லை. ஓதுபவர்களில் கூட பெரும்பாலானவர்கள் தமிழிலே மொழி பெயர்த்து சொல்வதே இல்லை. மண வீட்டில் மரணத்தைப் பற்றி பேசுவது அபசகுணம் என கருதுகிறார்கள் போலும். நீங்கள் முஸ்லிமாக அன்றி மரணிக்காதீர்கள் என்ற இறை வசனத்தை தமிழில் கூறி உபதேசிக்க வேண்டும்.
வாதம் வைத்து பேசுவதற்கு யார் முன் மாதிரி.
அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு உபதேசிக்காமல் சொந்த பேச்சுத் திறமையைக் காட்டுவதால் எந்த பயனும் ஏற்படாது. இல்லற வாழ்வில் அதிகம் கஷ;டப்படுவது ஆணா பெண்ணா? என்று கேட்டு பெண்தான் என்று வாதம் வைப்பார்கள். இப்படி வாதம் வைத்து பேசுவதற்கு யார் முன் மாதிரி. இறைத்தூதரா? நிச்சயமாக இல்லை. ஒருவர் தனது வாதத் திறமையை, பேச்சுத் திறமையைக் காட்ட பேசிய பேச்சுக்கள்தான் குடும்ப வாழ்வில் அதிகம் கஷ;டப்படுவது பெண்கள்தான் என்பது. அதைத்தான் எல்லாரும் காப்பி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்ணின் தியாகத்திற்கு ஈடு இல்லை.
அந்த வாதத் திறமையாளர் 2001ஆம் ஆண்டு ஒரு தொடர் நிகழ்ச்சியிலே முதல் நாள் மனைவியின் உரிமைகளும் கடமைகளும் என்ற தலைப்பில் பேசினார். முனைவி என்பவள் குடும்பத்தை பிரிந்து கஷ;டப்படுகிறாள். பிரசவத்தின் போது கஷ;டப்படுகிறாள் என்றெல்லாம் பட்டியல் இட்டார். இறுதியில் பெண்ணின் தியாகத்திற்கு ஈடு இல்லை என்று முடித்தார். நாளை கணவனின் உரிமைகளும் கடமைகளும் என்ற தலைப்பு. எனவே பெண்களை அதிமாக அழைத்து வாருங்கள் என்றும் அறிவித்தார்.
பெண்ணின் தியாகம் அற்பமானது.
மறுநாள் கணவனின் கடமைகளும் உரிமைகளும் என்ற தலைப்பில் பேசிய அந்த வாதத் திறமையாளர். பெண் வாழ்வில் ஒரு முறைதான் பெற்றோரை விட்டு பிரிகிறாள். ஆண்மகன் அப்படி அல்ல. சம்பாதிப்பதற்காக வெளியூர் வெளிநாடு என செல்லும்போது வாழ்வில் பல முறை பிரிவு துயரத்தை அனுபவிக்கிறான். பெற்றோரை விட்டு பிரிந்து செல்வதைவிட பெற்ற பிள்ளைகளை விட்டு பிரிந்து செல்வது. கட்டிய மனைவியை விட்டும் பிரிந்து செல்வதுதான் மிகக் கடுமையானது, கொடுமையானது. குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக பணி செய்யும் இடங்களில் படும் கஷ;டங்களை பட்டியலிட்டால் அவற்றின் முன் பெண்ணின் தியாகம் அற்பமானது என்று பேசினார்.
இப்படியும் பேச முடியும் அப்படியும்.
இந்த உரையைக் கேட்ட மதுரையைச் சார்ந்த ஒரு சகோதரர் துபை ஜெயின் கார்க்கோ திருச்சி அஸ்கர் அவர்களுடன் வந்து இதுதான் இஸ்லாமிய பிரச்சாரமா? முதல் நாள் மனைவியின் தியாகத்திற்கு ஈடு இல்லை என்பது. மறுநாள் கணவனின் தியாகத்திற்கு முன் மனைவியின் தியாகம் அற்பமானது என்பது. இதில் இஸ்லாமிய பிரச்சாரம் இல்லை. பேச்சாளர் தன்னால் இப்படியும் பேச முடியும் அப்படியும் பேச முடியும் என்ற திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்றார். எனவே மாப்பிள்ளை பெண்ணிடம் வாங்கும் வரதட்சணை ஒழிய வாத ரீதியான உரைகள் தேவை இல்லை.
சொல்லிக் காட்ட ஏன் தயங்க வேண்டும்.
இன்னும் திருமண நிகழ்ச்சிகளில் பன்கிஹு மாதாப லகும் மினன் நிஸாhயி மஸுனா வஸுலாதா வறுபாஅ என்ற வசனத்தையும் அரபியில் மட்டும் சொல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள். உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள் என்று திருமணம் பற்றி அல்லாஹ் கூறும் இந்த வசனத்தை திருமண வீடுகளில் தமிழில் சொல்வதே இல்லை. இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ்வின் கட்டளையைச் சொல்லிக் காட்ட ஏன் தயங்க வேண்டும்.
ஒரு குழந்தையுடன் நிறுத்தி விடுகிறோமா?
நீங்கள் நீதமாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒரு பெண்ணையே மணந்து கொள்ளுங்கள் என்ற வசனத்தை மேற்கோள் காட்டி ஒன்றுடன் இருந்து விடுகிறோம். நீதமாக நடக்க வேண்டும் என்பது மனைவிகள் இடத்தில் மட்டும் அல்ல. பிள்ளைகளிடமும்தான் நீதமாக நடக்க வேண்டும். நம்மால் நீதமாக நடக்க முடியாது என்று யாராவது ஒரு குழந்தையுடன் நிறுத்தி விடுகிறோமா? எனவே இறைக் கட்டளைப்படி இரண்டிரண்டாக மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளும் முறை சர்வசாதாரணமாக நடைமுறைக்கு வந்தால்தான் மாப்பிள்ளை பெண்ணிடம் வாங்கும் வரதட்சணை ஒழியும்.
வியாக்கியானங்கள் தேவை இல்லை.
மாப்பிள்ளை பெண்ணிடம் வாங்கும் வரதட்சணை ஒழிய வேண்டும் என்றால் முதலிலே இறையச்சம் ஏற்பட வேண்டும். இறையச்சம்தான் ஒரு மனிதனை நேர்வழிபடுத்தும். இறையச்சம் ஏற்பட்டுவிட்டவனிடம் அல்லாஹ் மஹர் கொடுக்கச் சொல்கிறான் என்று சொன்னால் அல்லாஹ்வுக்கு அஞ்சி மஹர் கொடுப்பான். எனவே வேறு வேறு விளக்கங்கள் வியாக்கியானங்கள் தேவை இல்லை. இறைக்கட்டளைப்படி மஹர் வழங்கி மணமுடிக்க வந்திருக்கிறார் எனது தங்கை மகன் அபுபக்கர் சித்தீக். கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியாகி நான் அவருக்கு எனது மகள் ரஜாவை மணமுடித்து கொடுக்க உள்ளேன்.
Comments