தவறுகள் செய்யக் கூடிய முஸ்லிமுக்கு எதிராக எதுவும் செய்யக் கூடாது என்கிறதா இஸ்லாம்?

பத்ருப் போர் என்பது பேஷனாகவும் பிழைப்பாகவும் ஆகி விட்டதா? 
அல்லாஹ் ஏற்படுத்திய அந்த பத்ரை நாங்களும் ஏற்படுத்துவோம் என மனிதர்கள் கூறுவது சரியா?
கொன்றவனுக்கு நரகம் சரி  கொல்லப்பட்டவனுக்கும் நரகமா?
முன் ஏற்பாடுகளை செய்தவன் எந்த வழியை தேர்ந்து எடுத்துக் கொண்டான்?
கத்தியைக் காட்டுவதே பாவமா?
ஒரு முஸ்லிம் என்ன செய்தாலும் விட்டு விட வேண்டுமா?
தவறுகள் செய்யக் கூடிய முஸ்லிமுக்கு எதிராக எதுவும் செய்யக் கூடாதா?

இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொண்டால் போதுமா? செயல்கள் வேண்டாமா? 

எதுவும் சொல்லக் கூடாது என்கிறதா? கொல்லக் கூடாது என்கிறதா இஸ்லாம்?

இவற்றுக்கான விடை, விளக்கம் இதோ அல் குர்ஆன் ஒளியில் அண்ணல் நபி வழியில்

கொலை செய்தவருக்கு நரகம் என்றால் சரியான தீர்ப்புதான். கொல்லப்பட்டு பிணமாக கிடக்கின்றவருக்கும் நரகம் என்றால் அல்லாஹ்வின் துாதரே எப்படி? 

ஸஹாபாக்களின் இந்தக் கேள்விக்கு  அல்லாஹ்வின் துாதர் (ஸல்) பதில் சொன்னார்கள். அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அவன் கொல்லப்பட்டு விட்டான். வாய்ப்பு கிடைத்து இருந்தால் அவன் கொன்று இருப்பான். எண்ணத்தால்- நிய்யத்தால் இரண்டு பேருமே சமமானவர்கள் என்றார்கள்.


இன்னமல் அஃமாலு பின் நிய்ய. எண்ணங்களைப் பொறுத்துதான் செயல்கள்(புகாரி) எண்ணங்கள் அடிப்படையில்தான் மறுமையில் தீர்ப்புகள் இருக்கும்

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்கிறார்கள். அல்லாஹ்வின் துாதரே திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து விடுகிறது. இறந்து விடுகிறார்கள். (சமீபத்தில் ஹரமில் நடந்த சம்பவம் இப்பொழுது நம் அனைவரின் நினைவுக்கு வரும்) காலரா போன்ற கொள்ளை நோய் வருகிறதுபெரும்பாலானவர்கள் இறந்து விடுகின்றார்கள். மறுமையில் இவர்களின் நிலை என்ன? என்று.


அல்லாஹ்வின் துாதர் பதில் சொன்னார்கள். அவர்கள் உயிரோடு இருந்தால் எப்படி வாழ்ந்து இருப்பார்கள் என்று அல்லாஹ்வுக்கு தெரியாதா? ஆகவே அவர்களின் எண்ணத்தின் அடிப்படையில் மறுமையில் எழுப்பப்படுவார்கள் என்று.


இரண்டு முஸ்லிம்கள் அடித்துக் கொள்ளும்பொழுது அவர்களிடையே என்ன எண்ணம் குறியாக இருந்தது. இவன் அவனை போட்டுத் தள்ள வேண்டும். அவன் இவனை போட்டு போட்டுத் தள்ள வேண்டும். இந்த எண்ணம் தான் அவர்களிடையே குறியாக இருந்தது

ஒருவனுக்கு வாய்ப்பு முந்தி விட்டதுஒருவனுக்கு வாய்ப்பு பிந்தி விட்டதுஒருவனுக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது. ஒருவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அவ்வளவுதான்.


அவனுடைய எண்ணம் இவனை கொல்ல வேண்டும் என்றிருந்தது. இவனுடைய எண்ணம் அவனை கொல்ல வேண்டும் என்றிருந்தது. ஆக இரண்டு பேருமே எண்ணத்தால்- நிய்யத்தால் சமமானவர்கள். ஆகவே இரண்டு பேருமே நரகத்துக்கு உரியவர்கள் என்று இறைத் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொல்லிக் காட்டி உள்ளார்கள்.


ஆக ஒருவன் முஸ்லிமாக, முஃமினாக இருந்து கொண்டு தனது சகோதர முஸ்லிமை கொலை செய்தால். கொலை செய்ய வேண்டும் என்று எண்ணினால். அதற்கான ஆயத்தங்களை செய்தால். முயற்சிகளை செய்தால். முன் ஏற்பாடுகளை செய்தால். அவன் எந்த வழியை தேர்ந்து எடுத்துக் கொண்டான். நரகத்துக்கு போகின்ற வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். இதில் சந்தேகமே இல்லை.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நமக்கெதிராக  ஆயுதம்  ஏந்தியவர்  நம்மைச்  சார்ந்தவர் அல்லர்; நம்மை வஞ்சித்தவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: முஸ்லிம் 164


நீங்கள்  உங்கள்  சகோதரரை  நோக்கி  ஆயுதத்தைக்  காட்டி சைகை  செய்ய வேண்டாம்.  ஏனெனில்உங்களுக்குத்  தெரியாமலேயே  ஷைத்தான்  உங்கள்  கையிலிருந்து  அதைப் பிடுங்கி  (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும்.  அதனால்  நீங்கள்  நரகத்தில் வீழ்ந்து விடக் கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 7072  


கத்தியைக் காட்டுவதே பாவம் எனும் போது வெட்டி வீழ்த்துவது பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.


அப்படி என்றால் ஒரு முஸ்லிம் என்ன செய்தாலும் விட்டு விட வேண்டுமா? என்ற கேள்வி வரலாம். சந்தேகம் ஏற்படலாம்

விட்டு விட வேண்டும் என்று சொல்லவில்லை. நீங்கள் கொலை செய்து விடக் கூடாது. உங்கள் உள்ளத்திலே கொலை செய்து விட வேண்டும் என்ற எண்ணம் - நிய்யத் வந்து விடக் கூடாது. 

உங்களையும் மீறி ஸைத்தானின் துாண்டுதலால் அந்த எண்ணம் வந்து விட்டால் தவ்பா செய்து மீண்டு விட வேண்டும். அந்த எண்ணத்தை மாற்றி விட வேண்டும்.  என்றுதான் மார்க்கம் சொல்கிறது.


தவறுகள் செய்யக் கூடியவன் முஸ்லிமாக இருந்தால். அல்லாஹ்வுடைய  வசனங்களை எடுத்துச் சொல்லலாம். அவனது துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உடைய போதனைகளை எடுத்துச் சொல்லலாம். இப்படி உபதேசம் செய்ய வாய்ப்புகள் இருக்கிறது.

நல்லுபதேசம் (அறிவுரை) செய்யுங்கள். நிச்சயமாக நல்லுபதேசம் (அறிவுரை) நம்பிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் (திரு குர்ஆன் 51:55)


நல்லுபதேசம் செய்த பிறகும் வரம்பு மீறினால் அவனை தட்டி கேட்பதற்கும் அவனை தண்டிப்பதற்கும் இந்த உலகில் உள்ள சட்டங்கள் மூலம் முயற்சிக்கலாம். உங்களுக்கு அனுமதி இருக்கின்றது

தவறுகள் செய்யக் கூடிய முஸ்லிமுக்கு எதிராக எதுவும் செய்யக் கூடாது. எதுவும் சொல்லக் கூடாது என்று சொல்லவில்லை. அவனை கொல்லக் கூடாது என்றுதான் இஸ்லாம் சொல்கிறது.


திரு மறையில் அல்லாஹ் என்ன சொல்லி உள்ளான். வல்லதீன கபரூ யுகாதிலுான பீ ஸபீலித் தாகூத். நிராகரிப்பவர்களாக இருக்கின்றவர்கள்தான் ஷைத்தானுடைய வழியில் போர் செய்கின்றார்கள். பகாதிலுா அவ்லியாவுஷ் ஷய்த்தான். அந்த மாதிரி ஷைத்தானின் கூட்டாளிகளுக்கு எதிராக போரிடுங்கள். இன்ன கைத ஷய்தானி கான ழஈபா நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சிகளெல்லாம் பலவீனமானதாக உள்ளது. (4;76)


பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக தோன்றலாம். இஸ்லாத்தை எதிர்த்து வந்த அத்தனை போர்களிலும். எதிரிகளிடம் பிரம்மாண்டம் இருந்தது. முஸ்லிம்களிடம் ஒன்றும் இருக்கவில்லை. இறுதி வெற்றி யாருக்கு இருந்தது. இறுதி வெற்றி முஸ்லிம்களுக்குத்தான் கிடைத்தது.


யார் புறத்திலிருந்த இந்த வெற்றி கிடைத்தது என்று எண்ணிப் பார்த்து படிப்பினை பெற வேண்டும். 

பத்ருப் போர் பத்ருப் போர் என்று சொல்கிறோம். இந்த வார்த்தை இன்று உலகம் முழுவதும் உள்ள சில கூட்டத்தாருக்கு பேஷனாகவும் பிழைப்பாகவும் ஆகி விட்டது. 

ஹிஸ்புல்லாஹ் -அல்லாஹ்வின் கூட்டத்தார் என்பது போன்ற பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள். பெயர்களை வைத்துக் கொண்டால் போதுமா? செயல்கள் வேண்டாமா? 


மற்றவற்றை போர் என்று சொல்லலாம். பத்ரு நிகழ்வை மட்டும் போர் என்று சொல்லவே முடியாது. ஏனெனில் அது மனிதர்கள் மட்டுமே மோதிக் கொள்ளவில்லை. அல்லாஹ் உடைய பேருதவி அங்கே நேரடியாக இருந்தது. அல்லாஹ், தான் நாடியதை செய்த ஒரு சம்பவம் என்றுதான் பத்ரை சொல்ல முடியும். சொல்ல வேண்டும்.


குர்ஆனில் கூட அல்லாஹ் பத்ரை எந்த இடத்திலும் போர் என்று சொல்லவில்லை. அல்லாஹ் நினைத்தது நடந்தது. 

பத்ருப் போர் என்ற தலைப்பில் அதை விரிவாக ஆய்வோம் இன்ஷா அல்லாஹ். மக்களிடையே பத்ருப் போர் பத்ருப் போர் என சொல்லி பழக்கப்பட்டு விட்டது. அதனால் நாமும் பத்ருப் போர் என்றே எழுத வேண்டிய நிலையில் உள்ளோம்.


அல்லாஹ் ஒரு சம்பவத்தை நிகழ்த்த வேண்டும் என்று தீர்மானித்தான். அதற்கான ஆயத்தங்களை அல்லாஹ் செய்தான், சூழ்நிலைகளை அல்லாஹ் உருவாக்கினான் பத்ருப் போர் என்ற நிகழ்வை அல்லாஹ் ஏற்படுத்தினான். 

மற்ற போர்கள் மாதிரி அது ஒரு போரே கிடையாது. அல்லாஹ் ஏற்படுத்திய அந்த பத்ரை நாங்களும் ஏற்படுத்துவோம் என மனிதர்கள் கூறுவது சரியா? என்பதை சிந்தியுங்கள். பத்ரு என்ற தலைப்பில் பின்னர் விரிவாகப் பார்ப்போம்.


இன்ன கைத ஷய்தானி கான ழஈபா நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சிகளெல்லாம் பலவீனமானதாக உள்ளது. (4;76) என்று அல்லாஹ் சொல்லிக் காட்டி உள்ளான். ஷைத்தான் உடைய சூழ்ச்சிகளெல்லாம் பலவீனமானதாக இருக்கும். 

அப்படியானால் பலவீனமான சூழ்ச்சிகளைக் கண்டு பலமானவர்கள் பயந்து விடக் கூடுமா?

கூடாது ஒரு போதும் பயந்து விடக் கூடாது. ஒரு மாதிரியான பயமோ பின் நோக்கோ பின்டைவோ எந்த ஒரு முஸ்லிமுக்கும் வந்து விடக் கூடாது. அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்ற தைரியத்தை முஸ்லிம்களுக்கு அளித்தது. 

அல்லாஹ் நாடியதை செய்யக் கூடியவன் என்பதை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் உணர வைத்தது. இதுதான் பத்ரில் நடந்தது. இந்த சம்பவம்தான் அந்த பத்ரில் நடந்த சம்பவம்.


சூரத்துன்னிஸாவில் 76ஆவது வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டி உள்ளதை அழுத்தமாக மீண்டும் மீண்டும் பாருங்கள். 

விசுவாசிகள் யார்? அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்கள். 

நிராகரிப்பவர்கள் யார்? ஷைத்தானின் பாதையில் போர் புரிபவர்கள். 

ஆகவே நீங்கள் ஷைத்தானின் தோழர்களை எதிர்த்து போர் புரியுங்கள். நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி பலவீனமானதாக இருக்கின்றது.


எதை பலவீனமானது என்று சொல்லக் கூடியவன் பலமானவனாக இருக்கின்றானோ சொல்லக் கூடியவன் யாருக்கு உதவி செய்யக் கூடியவனாக இருக்கின்றானோ அவன் சொல்கிறான்.


”வஃலமூ அன்னல்லாஹ மஅல் முத்தகீன்” அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடனே இருக்கிறான். (திரு மறை 2:194, 9:123)


இன்னல்லாஹ மஅஸ்ஸாபிரீன் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (திரு மறை 2:153)


யார் இறைவனை அஞ்சக் கூடியவர்களாக இருக்கிறார்களோ அவர்களோடு நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான். யார் பொறுமையாளர்களாக இருக்கிறார்களோ அவர்களோடு நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான்.


எதிர் தரப்பில் இந்த உலகமே இருந்தாலும் வெற்றி யாருக்கு. சொல்லித்தான் தெரிய வேண்டுமா

பொறுமையாளர்களுக்குத்தான் வெற்றி என்றால். பொறுமைக்கு அளவு கோல் இருக்கிறதா? பொறுமைக்கு அளவு கோல் என்ன?


இறைத் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் 13 ஆண்டு காலம் மக்காவில் காத்த பொறுமை. அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுமதி வரும் வரை. மதீனாவுக்கு செல்லுமாறு உத்தரவு வரும் வரை சகித்துக் கொண்ட பொறுமை. அந்த பொறுமைக்கு அளவு கோல் உண்டா? ஆகவே பொறுமைக்கு அளவு கோல் இல்லை.


எவ்வளவு பெரிய பொறுமை மகாத்தான பொறுமை. எண்ணிப் பார்க்க முடிகிறதா

முதல் ஒரு ஆண்டில் இன்னும் 12 ஆண்டுகள் என கூறப்பட்டதா? இல்லை.  

12ஆவது ஆண்டில்தான் இன்னும் ஒரு ஆண்டுதான் பொறுமை என ஆறுதல் கூறப்பட்டதா? இல்லை

அல்லாஹ்விடமிருந்து அனுமதி வரும்வரை இங்குதான் நமது வாழ்வு. மக்காவில் இருந்தபடிதான் நமது பிரச்சாரப் பணி என்று தான் பொறுமையுடன் இருந்தார்கள்.


பொறுமையுடன் இருந்த பொறுமையின் பொக்கிஷம் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொல்லிக் காட்டி உள்ளார்கள். என்ன சொல்லிக் காட்டி உள்ளார்கள்?


 ”மன்ய் யத ஸப்பரூ யுஸப்பிருல்லாஹ்”


பொறுமையாக இருக்க வேண்டும் என்று யார் முயற்சி செய்கின்றார்களோ. பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று யார் எண்ணம் கொண்டுள்ளார்களோ அவர்களுக்கு அல்லாஹ் பொறுமையை நல்குகிறான்

அப்படிப்பட்ட பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். இவ்வாறு மொழிந்த இறைவனின் துாதர் பொறுமையின் எடுத்துக் காட்டாக திகழ்ந்தார்கள். காத்து இருந்தார்கள்.


பொறுமைக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்ந்தார்கள். அவர்களின் பொறுமையிலிருந்து மிகப் பெரிய படிப்பினையை முன் மாதிரியை எடுத்துக் கொள்ள வேண்டும். பொறுமையின் பிறப்பிடம் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எப்படியெல்லாம், எப்படிப்பட்ட சூழ்நிலைகளிளெல்லாம் பொறுமையுடன் இருந்தார்கள் என்பதை பத்ரைப் பற்றி பார்க்கும் போது பட்டியலிடுவோம்.

தொடரும் இன்ஷாஅல்லாஹ்

முஸ்லிம்கள் நடத்தியது போர்களா? போராட்டங்களா? பாகம் 6


நன்றி மக்கள் உரிமை
முந்தைய தலைப்பு

கொன்றால் சொர்க்கமா? கொல்லப்பட்டால் சொர்க்கமா?



அடுத்த தலைப்பு




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.