திருமணமா? பொதுக் கூட்டமா? இட ஒதுக்கீடு போராட்டமா?



5-1-14 அன்று நடந்த நிகழ்ச்சியில் நாம் ஆற்றிய உரை பாகம்-1. 
கண்ணியத்திற்குரிய சமாயினா, ஷேக்முஹம்மது மூப்பன் தெரு ஜமாஅத்தார்களே, மஸ்ஜித் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் ஜமாஅத்தார்களே, தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், மு.லீக், கம்யூனிஸ்டு மற்றும் அனைத்துக் கட்சியினரையும். த.மு.மு.க. ஷார்ஜா மண்டல முதல் தலைவர் அதிரை ஜமீல்காகா, த.மு.மு.க, ம.ம.க. சகோதரர்கள் மற்றும் வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். 


எங்கள் இல்லத் திருமணத்தைப் பற்றி பேச ஆரம்பித்த உடனேயே, எனது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த உடனேயே. அவனா மாப்பிள்ளை வீட்டுக்கு ஒன்றும் தர மாட்டானே என்பது உட்பட பல்வேறு விமர்சனங்கள். அந்த விமர்சனங்களுக்கு ஓரளவு (எனது மச்சான் எல்.கே.எம். காஜா மைதீன் ரியாஜி) அவர்கள் விளக்கம் அளித்து விட்டார்கள்.

 
1983ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி நான் திருமணம் செய்து கொண்டேன். எனது திருமணம் நடந்தது முஸ்லிம் லீக் மேடையில். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குடைய பொறுப்பாளர்கள் முன்னிலையில் அந்த திருமணம் நடந்தது. அந்த திருமணத்திலே ஷம்சுல் ஆலம், செ.கா.மு. யூசுப், அன்றைக்கு இளைஞா் அணி தளபதியாக இருந்த மவுலவி நிஜாமுத்தீன் மஹ்ழரி மற்றும் பலரும் அந்த திருமணத்திலே உரையாற்றினார்கள். 


ஏனென்று சொன்னால் நாங்கள் நடத்தக் கூடிய திருமணங்கள் திருமண நிகழ்ச்சியாக இருக்காது. இஸ்லாமிய பிரச்சார கூட்டமாக இருக்கும். இஸ்லாமிய பிரச்சார கூட்டத்தில் திருமணத்தை நடத்துவோம். திருமணத்தில் கதீப் மட்டும் குத்பா பண்ண வேண்டும் என்பதை அன்றே மாற்றினோம். இதுதான் நான் ஹிக்மத்தாக செய்து வரக் கூடிய இஸ்லாமிய பிரச்சார வேலைகள். 

அது போலத்தான் இதுவும். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடைபெறும் இஸ்லாமிய பிரச்சார பொதுக் கூட்டம். திருமண நிகழ்ச்சி என அழைத்து விட்டு இஸ்லாமிய பிரச்சார பொதுக் கூட்டம் என்கிறாரே? என்ற கேள்விக்குறி  மீண்டும் உங்களில் சிலரது முகங்களில் பிரதிபலிக்கிறது. ஆம் இது திருமண நிகழ்ச்சி அல்ல. த.மு.மு.க. சார்பில் நடைபெறும் இஸ்லாமிய பிரச்சார பொதுக் கூட்டம்தான். 

இதை இப்பொழுது சொல்லவில்லை. நகர தலைவரிடமும் மாநில தலைவரிடமும் முன்பே சொல்லி விட்டேன். அந்த அடிப்படையில்தான் எனக்கு முன் உரையாற்றிய எனது மச்சான் எல்.கே.எம். காஜா மைதீன் ரியாஜி அவர்கள் சமூக அவலங்களை கண்டித்துப் பேசினார்.

திருமணம் என அழைத்து விட்டு இஸ்லாமிய பிரச்சாரக் கூட்டம் நடத்தலாமா என்று சொன்னால், இதற்கான வழி காட்டுதல் முன்மாதிரி இறைத் துாதரின்  முதல் பிரச்சாரத்திலேயே இருக்கின்றது. பிரச்சாரம் செய்யப் போகிறேன் வாருங்கள் என்று அழைத்து பிரச்சாரத்தை துவக்கவில்லை. விருந்துக்கு வாருங்கள் என்று அழைத்து விட்டுத்தான் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். 

இஸ்லாமிய திருமணத்திற்கு பெரிய கூட்டமோ, இவ்வளவு  நீள பந்தலோ, ஒலி பெருக்கிகளோ தேவை இல்லை. வலீ (மணமகளுக்கான பொறுப்பாளா்) மணமகன், இரண்டு சாட்சிகள் போதும். ஆக நான்கு போ் இருந்தாலே இஸ்லாம் கூறும் திருமணம் நிறைவு பெற்று விடும். 

ஆக இந்தக் கூட்டம் இஸ்லாமிய பிரச்சார பொதுக் கூட்டம்தான். இஸ்லாமிய பிரச்சார பொதுக் கூட்டத்தில் எங்கள் இல்லத் திருமணம் நடைபெறுகிறது. ஜும்ஆ குத்பா (உரை) பெருநாள் குத்பா (உரை) மாதிரி ஒருவர் திருமண குத்பா (உரை) ஆற்ற வேண்டும் என்பதும் கிடையாது. திருமண குத்பா (உரை) என்று ஒன்று இல்லை. 

இதை இன்று சொல்லவில்லை, செய்யவில்லை. 1983இல் இருந்து சொல்லி செய்து காட்டி வருகிறோம். எண்பதுகளிலிருந்து என்று சொல்லவில்லை. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான இஸ்லாமிய பிரச்சாரத்தை பிழைப்பாகவும் தொழிலாகவும் வியாபாரமாகவும் கொண்டுள்ளவர்கள். தங்களது போலித்தனத்தை மறைத்து விளம்பரம் தேடுவதற்காக எண்பதுகளிலிருந்து பிரச்சாரத்தை செய்து வருவதாக பொருள் மயக்க வார்த்தை ஜாலங்கள் செய்வார்கள். 

87இல் நீங்கள் இப்படித்தானே என்று குறுக்குக் கேள்வி கேட்டால். நான் எண்பதிலிருந்து என்றா சொன்னேன். எண்பதுகளிலிருந்து என்றுதான் சொன்னேன் எண்பதுகளிலிருந்து என்றால் 89 வரை சொல்லலாம் என்று சமாளிப்பார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்குப் புரிகிறது. 

நாம் அந்த மாதிரி பொருள் மயக்க வார்த்தைகள் கூறவில்லை. ஆதாரத்தோடு சொல்கிறோம். 4-10-1983இல் நடைமுறைபடுத்தினோம். இன்று எல்லா திருமண அழைப்பிதழ்களிலும் மஹா் சம்பந்தமான குர்ஆன் வசனம், நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பாரக்கல்லாஹு லக துஆ இடம் பெற்று விடுகிறது. 

இந்த திருமணத்தின் அழைப்பிதழில் பாரக்கல்லாஹு லக நாங்கள் போடவில்லை. மஹர் சம்மந்தமாகவும் தமிழில் நாம் போடவில்லை. காரணம் அல்லாஹ்வின் பேரருளால் ஆரம்பிக்கப்பட்ட இன்னமல் அஃமாலு பின் நிய்யாத். சிறுவயதிலிருந்தே வரதட்சணைக்கு எதிராக ஏற்பட்ட அந்த எண்ணமானது. எனது திருமணத்திலே 500 ரூபாயை முன் பணமாக மஹர் தொகை கொடுத்தோம்.  அதன் பிறகு ஒரு லட்சத்தி 25 பெறுமான (அபுல்கலாம் ஆஸாத் ரோட்டில் உள்ள) ஒரு கடையை எனது மனைவிக்கு மஹராகக் வழங்கினேன். 

அதன் பிறகு எனது வீட்டில் மட்டுமல்ல எனது குடும்பத்தில் நடைபெறும் ஒவ்வொரு திருமணத்தையும் வரதட்சணை ஒழிப்பு , எதிர்ப்பு பிரச்சார மேடையாகவே பயன்படுத்தி வருகிறோம்.எனது திருமணம் நடந்த மேடையில் வரதட்சணை எதிர்ப்பு பிரச்சாரம் செய்தேன். வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், முஹம்மது லெப்பை ஆகியவர்கள் பேசும்போது நாங்கள் வரதட்சணை வாங்கவில்லை மஹர் கொடுத்துதான் திருமணம் செய்தோம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக் காட்டினார்கள். செ.கா.மு. யூசுப் அவர்கள் பேசும்போது தான் தாலி கட்டவில்லை, ஆரத்தி எடுக்க விடவில்லை என்று கூறினார். 

அந்த திருமணத்திலேதான் பாரக்கல்லாஹு லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா பீ கைர் இதுதான் துஆ என்று திட்டவட்டமாக அறிவித்தார். எனது அருமை நண்பர் மவுலவி கே.எப். நிஜாமுத்தீன் மஹ்ழரி அவர்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இளைஞர் அணித் தலைவராக இருந்த அவர் அன்று சொல்லிக் காட்டினார். சொல்லிக் காட்டியது மட்டுமன்றி எல்லோரும் சொல்லுங்கள் என்றார். எல்லோரையும் சொல்ல வைத்தார். 

இதை ஏன் சொல்லிக் காட்டுகிறேன் என்று சொன்னால். இந்த வரதட்சணை எதிர்ப்பு பிரச்சாரங்கள், மஹர் விழிப்புணர்வு, இந்த துஆக்களெல்லாம் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பது எண்ணத்தின் அடிப்படையில் உருவானது. அதுதான் இன்றைய வெற்றிக்கு காரணம். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய சம்பளம் பேசி வந்தவர்கள் இதை தங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

ஒவ்வொரு கருத்துக்களையும் மக்களிடையே எளிய முறையில்தான் கொண்டு செல்வோம். கருத்துக்களை சொல்லுகிறோம் என்ற பெயரால் மக்களை பகைத்துக் கொண்டு சொன்னால் அந்தக் கருத்து எடுபடவே செய்யாது. மக்களாக பகைத்துச் சென்றால் அது வேறு.

நாங்களெல்லாம் துாய்மையானவர்கள் ஆக நாங்கள் மட்டும்தான் இருப்போம். அவர்கள் தேவை இல்லை என்ற நிலையில்  ஒருக்காலும் கொள்கையை கொண்டு போய் சேர்க்கவே முடியாது.  அப்படிப்பட்டவர்கள். கொள்கைவாதிகள் என்ற பெயரால் கொள்ளைக் கூட்டத்தைத்தான் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். 

மவுலவிகளின் பெயருக்கு முன்பாகவோ பின்பாகவோ ஹஜரத், ஹஸரத், ஹளரத்  என்று குறிப்பிடும் வழக்கம் மக்களிடையே உள்ளது. 1985 ஆண்டு ஷரீஅத் பேரணி மாநாடு விளக்கக் கூட்ட நோட்டீஸில் மவுலவி அல்லாத ஒருவரின் பெயருக்கு முன் ஹளரத்  என்று பிரிண்டாகி விட்டது. அதை ஒட்டி பெரும் பிரச்சனை. ஜனாப் என்றுதானே போடனும் ஹளரத் போடலாமா? என்ற விவாதமும் நடந்தது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்க அதன் பிறகு நாம் நடத்திய ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எல்லார் பெயருக்கு முன்னாலும் ஹளரத் என்று போட்டேன்.அதைப் பார்த்து கேள்வி கேட்டவர்களுக்கு விளக்கம் அளித்து வந்தேன்.

நமது பக்கத்து தெருவான சமாயினா காதர் மீத்தீன் மூப்பன் தெருவில் எனது மச்சான் R.S. காஜா நஜ்முத்தீன் திருமணம். அதையும் வரதட்சணை எதிர்ப்பு பிரச்சார பொதுக் கூட்டமாகத்தான் நடத்தினோம். அந்த திருமண அழைப்பிதழை மச்சானிடம் கேட்டேன். இல்லை என்றார். இரவு முழுவதும் தேடி எடுத்தேன். 16-1-86இல் நடந்த அந்த கல்யாண கூட்ட அழைப்பிதழில், 

தலைமை
ஹளரத் ஷம்சுல் ஆலம் எம்.எல்.ஏ.
முன்னிலை 
ஹளரத் செ.கா.மு. யூசுப்.
வாழ்த்துரை வழங்குவோர். 

ஹளரத் தீன் காஜா மைதீன், ஹளரத் T.S.M.O. ஹஸன் M.A ஹளரத் L.K.S. மீரான் மைதீன் B.Sc. என்று ஒவ்வொருவருடைய பெயருக்கு முன்பாகவும் ஹளரத் என்று போட்டோம். யாரும் மவுலவிகள் இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பு வரை சண்டையிட்டவர்கள் ஜீரணித்துக் கொண்டார்கள்.

இஸ்லாமிய இளைஞர் இலக்கிய கழகம் என்ற அமைப்பை வரதட்சணை எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு பயன் படுத்தினோம். T.S.M.O. ஹஸன்  L.K.S. மீரான் மைதீன், Er செய்யது அஹ்மது போன்றவர்களெல்லாம் அதில் இருந்தார்கள். 1985இல் பட்டிமன்றம் மூலம் வரதட்சணை எதிர்ப்பு பிரச்சாரம் செய்தோம். சிறுகச் சிறுக துவங்கிய பிரச்சாரம். இன்னமல் அஃமாலு பின்நிய்யாத். 

நாம இந்த நிகழ்ச்சிக்கு த.மு.மு.க. மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை அழைக்கும்பொழுது (ஜவாஹிருல்லாஹ்) அவர்கள் அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். பெயர் சொல்லவில்லை.  அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். நான் நிஸாமுத்தீனா என்று கேட்டேன். ஆமாம் என்று சொன்னார்கள். நான் எப்பொழுது போன் போட்டாலும் நிஸாமுத்தீன் பெயர் குறிப்பிட்டு உடல் நலம் விசாரிப்பார்கள். 

ஏனென்றால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் யு.ஏ.இ. முதல் தலைவர். சந்து பொந்துகளில் சென்று பிரச்சாரம் செய்தவர். நன்றியுள்ள தலைவர்கள் என்றைக்குமே மூத்தவர்களை, ஆரம்ப கால பொறுப்பாளா்களை மறக்கவே மாட்டார்கள். அந்த அடிப்படையிலே அதிகமான முறையில், எப்பொழுது போன் பேசினாலும் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நிஸாமுத்தீன் அவர்களை என்னிடம் விசாரிப்பார்கள். 

ஹைதா் ஸாஹிப் அவர்களும் எப்பொழுதாவது விசாரிப்பார்கள். அந்த நிஸாமுத்தீன்தான் பாரக்கல்லாஹு லக என்ற துஆவை மீண்டும் உயிர்ப்பித்தார். அவர் வேறு கருத்துடையவராக இருந்தாலும் அவரும் நானும் அதிகமான முறையில் சண்டையிட்டுக் கொள்வோம் கொள்கை விஷயத்திலே விவாதிக்கும்பொழுது. அதற்காக பிரிந்து போனதில்லை. 

ஒரு முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமும் மூன்று நாளைக்கு மேல் பிரிந்து இருக்கக் கூடாது. எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் சண்டை வந்தாலும் மூன்று நாளைக்குள் ஸலாம் சொல்லி சமாதானம் ஆகி விட வேண்டும். ஒன்று சேர்ந்து விட வேண்டும். அப்படி சேராத நிலையில் இறந்து விட்டால் நேராக நரகம்தான்.

நேராக நரகத்துக்கு போக வேண்டியதுதான். எவன் சமாதானம் ஆக மாட்டேன் என்று சொல்கிறானோ அவன் தனக்காக நரகத்தில் இடத்தை ரிசா் செய்து விட்டான். மனிதன் என்றால் கோபம் வரும், பிரச்சனைகள் வரும் அதுதான் உலகம். எவ்வளவு கோபம் வந்தாலும் எவ்வளவு பேசினாலும் 3 நாளைக்கு அவ்வளவுதான்.

நானும் நிஸாமுத்தீனும் எவ்வளவோ சண்டை போட்டு இருக்கிறோம். அதைப் பார்த்த றஹ்மதுல்லாஹ் இம்தாதி பயந்து போய் இருக்கிறார். பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்லக் கூடிய ஷய்த்தான் ஒருவன் செய்த சூழ்ச்சியால் எங்கள் இருவரிடையே பிரிவினை ஏற்பட்டு விட்டது. 

அப்பொழுது யு.ஏ.இ. ஷார்ஜா மண்டல த.மு.மு.க. தலைவராக இருந்த அதிரை ஜமீல் காகா அவர்கள் தலைமையில் சமாதானக் கூட்டம். அவர்கள் சொன்னார்கள் 6 மாதமாக நானும் அஹ்மது தீதாதும் பேச மாட்டோம். ஏன் பேசவில்லை என அல்லாஹ் கேட்பானா என்று கேட்டார்கள்.அவர் (ஜமீல்) நல்ல பேச்சாளர், அவரை இந்த மேடையில் பேசச் சொன்னோம் பேசவில்லை. கைர்.

நானும் அஹ்மது தீதாதும் பேசவில்லை அல்லாஹ் கேட்பானா? யாரிடம் கேட்பான் யார் இணைந்து இருந்து பிரிந்து விட்டார்களோ, யார் அண்ணன் தம்பிகளாக, நண்பர்களாக, ஒரே அமைப்பினராக இருந்தார்களோ அவர்கள் மத்தியிலே பிரச்சனை ஏற்பட்டால், அந்த பிரச்சனைக்கு மனிதன் என்ற அடிப்படையில் உடனே அமைதியாகி விட முடியாது. அதனால்தான் 3 நாள் தவணை அந்த 3 நாளில் ஒன்று சேர்ந்து விட வேண்டும். 

சமாதானம் ஆகாமல் மறுமையில் சந்திப்பேன் என்று எவன் ஒருவன் சொல்கின்றானோ அவன் வழி கெட்டு விட்டான். இதுதான் நிலை. இன்றைக்கு எத்தனையோ பிரச்சனைகள் நடக்கிறது, குடும்பங்களில் நடக்கும் அதை 3 நாட்களில் முடித்து விட வேண்டும். 

இந்த திருமணம் சம்பந்தமாக நான் எங்களுடைய சம்பந்தி அவர்களிடம் நேரில் போய் கேட்டேன். நீங்கள் எவ்வளவு மஹர் தருவீர்கள். தெளிவாகக் கேட்டேன். நாங்க உங்களுக்கு சாப்பாடு தர மாட்டோம். நீங்கதான் எங்களுக்கு சாப்பாடு தரணும். 

வலீமா விருந்து என்பது மாப்பிள்ளை வீட்டார் வைக்க வேண்டியது. அதற்காக என்னுடைய அழைப்பில் வரக் கூடிய, எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் உங்களுக்கு குடும்பம் இருக்கிறது. எனக்கு கூடுதலான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் உங்கள் தலையில்  கட்டக் கூடாது. உங்களிடம் டிமாண்ட் வைக்கக் கூடாது. நீங்கள் (மாப்பிள்ளை வீட்டார்) எப்படி என்னிடம் டிமாண்ட் வைக்கக் கூடாதோ. அது போல்தான் நான் உங்களிடம் டிமாண்ட் வைக்கக் கூடாது. 

இத்தனை பேருக்கு வலீமா விருந்து தர வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக் கூடாது. அதனால் நீங்கள் எத்தனை பேருக்ககான சாப்பாட்டை எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். என்று கேட்டேன். பிறகு சொல்கிறேன் என்றார். இந்த பேச்சு வார்த்தையின் போது த.மு.மு.க. நகர தலைவர் காஜா, மாவட்ட தலைவர் அப்துல் வாஹித் உடன் இருந்தனர்.

மறுநாள் சொன்னார் தலைவர்களையெல்லாம் நம்ம வீட்டுக்கு வரச் சொல்லுங்கள். தலைவர்களுக்கும் தலைவர்களோடு எத்தனை போ் வந்தாலும் வரக் கூடிய அனைவருக்கும் நான் வலீமா விருந்து தருகிறேன். இதை த.மு.மு.க. நகர தலைவர் காஜாவிடம் கூறி விட்டேன் என்றார். அப்படியா சந்தோஷம் என்றேன். 

வரக் கூடிய எனது குடும்ப எண்ணிக்கை கூடுதலாக இருந்ததால் நானும் சாப்பாடு ஏற்பாடு செய்தேன். உடனே விருந்து வைக்கலாமா வைக்கக் கூடாதா சா்ச்சைகள். நான் சொன்னேன் இறைத் துாதா் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று உளுஹிய்யா கொடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். தொழுகைக்குப் பிறகு கொடுத்தால் அது உளுஹிய்யா. அதற்கு முன்பு கொடுத்தால் சாதராண தர்மம். மாப்பிள்ளை வீட்டார் வைத்தால் அது வலீமா - திருமண விருந்து. பெண் வீட்டார் வைத்தால் அது சாதாரண விருந்து. 

என் குடும்பம் அதாவது பெண் வீட்டார் குடும்பம் பெரியது என்பதற்காக நான் கொண்டு போய் அவர்கள் தலையில் பாரத்தை சுமத்தக் கூடாது. ஆய்வுகளில் வித்தியாசப்படும். ஆய்வு செய்ய அத்தனை பேருக்கும் உரிமை இருக்கிறது. யாரையுமே தக்லீது பண்ண தேவை இல்லை. அந்த அடிப்படையிலே நாங்கள் ஆய்வு செய்கிறோம் செயல்படுகிறோம். இதை விமா்சித்து நீ சாப்பாடு வைக்கிறாயா? வைக்கவில்லையா பொறுத்து இருந்து பார்ப்பேன் இப்படி எத்தனையோ விமர்சனங்கள்.

நேரம் குறைவாக இருப்பதால் திருமணத்தை நடத்தி வைக்க விரும்புகிறேன். நான் சம்பந்தியிடம் நீங்கள் எவ்வளவு மஹர் தருவீர்கள். என்று கேட்டேன். வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம். அதனால் மஹராக 12 கிராம் தங்க நகை இப்போதைக்கு தருகிறோம். மேற்கொண்டு பிறகு தருவோம் என்றார்கள். எப்பொழுது நிய்யத்து வைத்து விட்டார்களோ நிச்சயமாக அல்லாஹ் நிறைவேற்றிக் கொடுப்பான். 

ஆகவே, மருமகனே, சகோதரரே எழுந்திருங்கள். முன் மஹராக 12 கிராம் தங்க நகையை மஹராக பெற்றுக் கொண்டு. அதாவது இன்றைய நிலவரப்படி 37500 பெறுமான தங்க ஜெயினை மஹராக பெற்றுக் கொண்டு எனது மகள் ஜெய்னப் அவர்களை உங்களுக்கு மணம் முடித்து தந்தேன் ஒப்புக் கொண்டீர்களா? (மணமகன் ஒப்புக் கொண்டேன் என்றார்) பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர். 

மஹர், மற்றும் பாரக்கல்லாஹ் துஆவை எப்படி 83இல் சொன்னோமோ அது போல் 4-1-1985இல்  தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கொடியை ஜின்னா திடலில் ஏற்றினோம். அன்று மேலப்பாளையம் பசார் திடலில் தாஜ் மஹால் செட்டிங் அமைத்து அதனுள் சிராஜுல் அ.கா.அ. அப்துஸ்ஸமது இருக்க அன்றைக்கு வைத்தோம் இட ஒதுக்கீடு கோரிக்கையை. இன்னமல் அஃமாலு பின் நிய்யாத். 

அப்பொழுது L.K.S. மீரான் மைதீன் அவர்களுடன் எங்கள் பகுதியில் வைத்து பேச முடியாது. கஃபா என்ற சினிமா படப்பிரச்சனை. அதனால் எங்கள் தெருவில் ஏற்றிய கொடியில் அவர் பெயர் இருக்காது. இப்பொழுது அந்த கல்லை காணோம். வரலாற்றை சொல்லிக் கொண்டிருக்கும் கல்லை மீண்டும் வைக்க வேண்டும் என்று மு.லீக் நகர தலைவர் நாகூர் கனி போன்றோரிடம் கூறிக் கொள்கிறேன். 

ஜின்னா திடலில் உள்ள கல்லில் L.K.S. மீரான் மைதீன் பெயர் இருக்கும். தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய அந்த கொடிக் கம்பத்தை சில காரணங்களால் அறுத்து சிறியதாக ஆக்கி இருக்கிறார்கள். நாம் அமைத்த அந்த கம்பம் இன்றும் துறு பிடிக்கவில்லை. அதற்கு பிறகு உள்ளவை துரு பிடித்து விட்டன. அந்த பெரிய கொடியை ஏற்றி விட்டு  இட ஒதுக்கீடு கோரிக்கையை வைத்தோம் 

குணங்குடி R.M.  ஹனீபா அவர்கள் கடந்த முறை தடா கைதியாக வந்தார்கள். இப்பொழுது சுதந்திர பறவையாக வந்திருக்கிறார்கள். 1987 ஆண்டு  ஒரு அமைப்பின் தலைவர் குடியரசு தினத்தை கறுப்புத் தினமாக அறிவித்து விட்டார். அதைக் கண்டித்து 16-1-87இல் சென்னை காந்தி சிலை அருகில் உண்ணாவிரதம் என அறிவித்தார் குணங்குடி R.M.  ஹனீபா.  16-1-87 தேதி வந்தது. காந்தி சிலை அருகில் காவல்துறை அதிகாரிகள் குவிந்தனர்.

உண்ணாவிரதம் இருக்க யார் வந்தார்கள். அவரும் அவரது இரு சிறு பையன்கள் மட்டுமே வந்தனர். இது மைதீன் ரஸாக் கூற நான் கேட்டது. காவல் துறை அதிகாரிகள் படிக்க வேண்டிய வயதப்பா உங்களுக்கு என்று கூறி இரண்டு பையன்களையும் வீட்டில் கொண்டு போய் விட்டனர். குணங்குடி R.M.  ஹனீபா அவர்களை அரஸ்டு பண்ணி கொண்டு போய் விட்டார்கள். 

செய்தி அறிந்த அன்றைய முதல்வர் M.G.R. அவர்கள் குணங்குடி R.M.  ஹனீபா அவர்களுக்கு தேசப் பற்றாளர் விருது வழங்குவதாக அறிவித்தார். அதன் பிறகு இறந்து விட்டதால் விருது கிடைக்கவில்லை. 

அதே ஆண்டு  M.G.R. உடைய வீட்டிற்கு போய் விட்டார் குணங்குடி R.M. ஹனீபா. அப்பொழுது த.மு.மு.க. என்பது லட்டர் பேடு இயக்கம்தான். அவரோடு 10 பேரை சேர்த்துக் கொண்டு ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டிற்கு போய் விட்டார். தொப்பி போட்டுக் கொண்டு சென்றதால் காவல்துறை அதிகாரிகள் உள்ளே விட்டு விட்டனர். அப்பொழுதெல்லாம் முஸ்லிம்கள் என்றால் காவல்துறை அதிகாரிகள் நன்கு மதிப்பார்கள். ரொம்ப சோதனை செய்ய மாட்டார்கள். 

எம்.ஜி.ஆர். வெளியே வந்ததும் மறைத்து வைத்திருந்த கறுப்பு துணியை அசைத்துக் காட்டி இட ஒதுக்கீடு கொடு, இட ஒதுக்கீடு கொடு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடு என்று கோஷம் போட்டார். அங்கே நின்ற காவல்துறை அதிகாரிகள் இவர்களை ஒடுக்க முயற்சித்தனர். எம்.ஜி.ஆர். அதிகாரிகளை தடுத்து குணங்குடி R.M. ஹனீபா அவர்களை தட்டிக் கொடுத்து இனி இது மாதிரி செய்யக் கூடாது என அன்போடும் கண்டிப்போடும் கூறி, உங்கள் கோரிக்கைகளை எழுதி கொடுங்கள் என்றார்.

26-11-1987 அன்று அனைத்து ஜாதி அமைப்புகளையும் அழைத்து இட ஒதுக்கீடு சம்பந்தமாக எம்.ஜி.ஆர். பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் முஸ்லிம்கள் சார்பாக அழைக்கப்பட்ட ஒரே அமைப்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்தான். குணங்குடி R.M. ஹனீபா முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை வைத்தார்கள். அதில் என்ன சிக்கல் என்றால், எல்லா அமைப்பினரும் கொடுத்த மொத்த சதவீதத்தை கூட்டினால் 100க்கு பதிலாக 200 தாண்டி விட்டது. அதனால் எம்.ஜி.ஆர். இட ஒதுக்கீடு  திட்டத்தை கை விட்டு விட்டார். 

ஆனால் அவர் வைத்த நிய்யத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அவர் நினைத்து பார்க்காத அளவுக்கு பெரிய அமைப்பாக மாறியது. இந்த இட ஒதுக்கீட்டை வென்றெடுத்தது என்பதை நீங்களெல்லாம் அறிவீர்கள். (த.மு.மு.க.வின் நிறுவனர் இன்றைய துணைத் தலைவர் குணங்குடி R.M. ஹனீபா) அவர்களை பேச அழைக்கிறேன்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.