நபி வழியா? நமது பாலிஸியா?

இந்த ஆக்கம் இறையச்சம் உடையவர்களால் மட்டுமே ஜீரணிக்க முடியும் என்பதை முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறோம். நமது சமுதாயத்தின் இன்றைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஒற்றுமை, பிளவுகள் ஏன்? ஒன்றுபட என்ன வழி? இப்படி ஏதாவது ஒரு தலைப்பில் அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறும் ஒற்றுமை பற்றி எழுதுமாறு பல சகோதரர்கள் வற்புறுத்தினார்கள். நாம் அவற்றை தலைப்பாகக் கொண்டு எழுத விரும்பவில்லை. காரணம், பிரிவுகளை தவிர்க்க என்ன வழி? ஒற்றுமையின் அவசியம், ஒன்றுபடுவது எப்படி? என்பது பற்றியெல்லாம் விரிவாகவும் விளக்கமாகவும் ஆய்வுரைகளையும் ஆக்கங்களையும் தந்தவர்களே பிளவுகளுக்கு காரணமாக இருந்து பல பிரிவுகளை உண்டு பண்ணி விட்டனர். எனவே அந்த தலைப்பில் எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள். அந்த அளவக்கு ஒற்றுமை சம்பந்தமான தலைப்புகள் மீது சமுதாய மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. எனவே நபி வழியா நமது பாலிஸயா? என்ற தலைப்பை நாம் தேர்வு செய்துள்ளோம்.

இரண்டு முனாபிக்குகளும் சமமானவர்களா?

முனாபிக்குகள் என்றால் யார்? என்பது பற்றி விளக்கம் தரும் ஹதீஸ்களை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். எனவே முனாபிக்குகள் என்றால் யார்? என்ற விரிவான விளக்கம் தேவை இல்லை. இன்று நமது சமுதாயத்தில் முனாபிக்குகள் இருப்பதுபோல் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உயிரோடு வாழ்ந்த காலத்திலும் முனாபிக்குகள் இருந்தார்கள். இந்த இரண்டு முனாபிக்குகளும் சமமானவர்களா? என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். முனாபிக்குகளின் அடையாளங்களில் ஒன்றான பேசினால் பொய்யே பேசுவான் என்ற முனாபிக்குகளின் பண்புப்படி இன்றைய முனாபிக்குகளின் பொய்யும் அன்றைய முனாபிக்குகளின் பொய்யும் சமமா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.
இன்றைய முனாபிக்குகளின் பொய்யும் அன்றைய முனாபிக்குகளின பொய்யும்.
இன்று நம் சமுதாயத்தில் உள்ள முனாபிக்குகள் அவர்களின் பண்புப்படி மற்ற மற்ற விஷயங்களில் பொய் சொல்வார்கள். ஆனால் அல்லாஹ்வுடைய விஷயத்திலும் அவனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய விஷயத்திலும் பொய் சாட்சி சொல்வதில்லை. லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரசூலுல்லாஹ் என்ற கலிமாவை உண்மையிலேயே நம்பி மனதால் ஏற்று ஈமான் கொண்டுள்ள முஸ்லிம்கள்தான் இன்று நம் சமுதாயத்தில் உள்ள முனாபிக்குகள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த முனாபிக்குகளின் பொய் எப்படிப்பட்டதாக இருந்தது? லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரசூலுல்லாஹ் என்ற கலிமாப்படி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மனதால் நம்பி ஈமான் கொள்ளாமல் நாங்களும் ஈமான் கொண்டுள்ள முஸ்லிம்கள்தான் என்ற பொய்யைச் சொன்னார்கள்.

அன்றைய முனாபிக்குகள் பற்றி அல்லாஹ்.

தமது உள்ளங்களில் இல்லாததைத் தமது வாய்களால் கூறினர். 3:167, நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்ற உள்ளான். 4:142 தமது உள்ளங்களில் உள்ளதை வெளிப்படுத்தும் அத்தியாயம் நம்பிக்கை கொண்டோர் மீது அருளப்படுவதை அஞ்சுகின்றனர். 9:64, "அல்லாஹ்வையும் இத்தூதரையும் நம்பினோம், கட்டுப்பட்டோம்" என்று அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் இதன் பிறகு புறக்கணிக்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். 24:47, நம்பிக்கை கொண்டோரை சந்திக்கும்போது நாங்களும் நம்பிக்கை கொண்டுள்ளோம் எனக் கூறுகின்றனர். தமது iஷத்தான்களுடன் தனித்திருக்கும்போது நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே .. என்கின்றனர் 2:14. இதுபோன்று இன்னுமுள்ள பல வசனங்களும் ஹதீஸ்களும் நபி(ஸல்) காலத்து முனாபிக்குகளை அதாவது முஸ்லிம்களாக நடித்த காபிர்களை அடையாளம் காட்டுகின்றன.

குராபிகள், முகல்லிதுகள்.

நபி வழியே நல் வழி அவ்வழியே நம் வழி என பிரச்சாரத்தை துவங்கிய நாம் நபி வழி என்ன நம் நிலை என்ன? என்பதை மேற்கண்ட ஆயத்து ஹதீஸ்களுடன் உரசிப்பார்க்க வேண்டும். தர்கா, தரீகாக் கொள்கைகளை மார்க்கம் என நம்பி செயல்பட்ட முஸ்லிம்களுக்கு குராபிகள் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தோம். மத்ஹபு கொள்கை உடையவர்களை முகல்லிதுகள் தக்லீது பேர்வழிகள் கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள் என்று விமர்சித்து நம்மை நபி வழி நடப்போராக பிரகடனப்படுத்தினோம்.

பள்ளிகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன.

நாம் சிறுபான்மையாக இருந்தபோது பள்ளிக்கு வரக் கூடாது என்று தீர்மானம் போட்டு அவர்கள் நம்மை தடுத்தார்கள். அப்பொழுது அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து அவற்றை பாழாக்க முயல்பவனைவிட அநியாயக்காரன் யார்? 2:114 என்ற ஆயத்தைக் கூறி பழமைவாய்ந்த அந்த பள்ளிகளில் அவர்களது பின்னால் நின்று தொழ உரிமை கோரி போராடினோம். பிறகு சற்று வலிமை ஏற்பட்டதும் தவ்ஹீது பள்ளிகள் எனும் பெயரில் தனிப்பள்ளிகள் கட்டினோம். அல்லாஹ்வோ, ஷபள்ளிகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன| என்று 72:18 வசனத்தில் கூறுகிறான். நாமோ, தனிப்பள்ளிகள் கட்டும் வரை எந்த பள்ளிகளில் நின்று தொழ உரிமை கோரி போராடி வந்தோமோ அந்த பழமைவாய்ந்த பள்ளிகளை குராபி பள்ளிகள் என்று பெயர் சூட்டி புறக்கணித்தோம்.

இணை வைக்கும் இமாம்கள்.

தர்கா, தரீகா கொள்கை உடையவர்களை பின்பற்றி தொழலாமா? என்ற சர்ச்சையை கிளப்பி நமக்குள்ளேயே கூடும் என்று ஒரு அணியும் கூடாது என்று ஒரு அணியும் ஆனது. தொழக் கூடாது என்ற முடிவை எடுத்தவர்கள் தர்கா, தரீகா கொள்கை உடையவர்கள் இணை வைப்பவர்களே. எனவே அவர்களை பின்பற்றி தொழக் கூடாது. அதாவது இணை வைக்கும் இமாமை பின்பற்றி தொழக் கூடாது. மத்ஹபு கொள்கை உடையவர்களை பின்பற்றி தொழலாம் என்று அறிவித்தார்கள். அடுத்து மத்ஹபுகாரன் பின்னால் நின்று தொழலாமா? என்ற சார்ச்சை வந்து அதிலும் 2 அணி ஆனது. மத்ஹபுகளும் பித்அத்துகள்தான். பித்அத்காரனின் அமல்கள் யாவும் பாழாகி விடும் என ஹதீஸ் உள்ளது. எனவே பாழாகி விடும் அமலைச் செய்பவன் பின் நின்று தொழக் கூடாது. குர்ஆன் ஹதீஸ்கள் மட்டுமே மார்க்கம் என்ற கொள்கை உடையவர்கள் பின்னால்தான் தொழ வேண்டும் என்றார்கள்.

அந்த பள்ளிகளுக்கு போகாதே.

குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்ற கொள்கை உடையவர்களிடையே ஏற்பட்ட மனக் கசப்புகள் பிளவுளாக ஆகி பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டுவிட்டது. ஆரம்பத்தில் மனக்கசப்புகளின் காரணமாக ஒரு சாராரின் பொறுப்பில் உள்ள பள்ளிகளுக்கு போகாமல் தவிர்த்து வந்தார்கள். பிறகு போகாதே என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். தவ்ஹீது ஜமாஅத்தினர் என்று ஆகி அதில் பல பரிவுகளாக ஆகி விட்டாலும் அடிப்படைக் கொள்கை குர்ஆன் ஹதீஸ் என்றுதான் அனைவரும் கூறுகிறார்கள். எனவே சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் உள்ள இமாம்களை பின்பற்றி தொழக் கூடாது என்பதற்கு கொள்கைப் பிரச்சனைகளை காரணமாக காட்டியவர்களால், தங்களுக்கு பிடிக்காத தவ்ஹீது ஜமாஅத் பள்ளிகளுக்கு போகக் கூடாது என்பதற்கு கொள்கைப் பிரச்சனையை காரணமாக கூற முடியவில்லை. எனவே சொந்த விவகாரங்களைக் கூறி அந்த பள்ளிகளுக்கு போகக் கூடாது என்பதை ஒரு பாலிஸியாக வைத்திருக்கிறோம். இது நமது பாலிஸி என்கிறார்கள்.

குர்ஆன் ஹதீஸை நிலை நாட்டவா? நமது பாலிஸியை நிலை நாட்டவா?

பிரிந்து சென்று தனிப்பள்ளிகள் கட்டக் கூடாது என்றவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களிடம் உதவி பெறமாட்டோம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டவர்கள் நிலை என்ன? கட்டப்பட்ட தனிப் பள்ளிகளை வெளிநாட்டு நிறுவனங்களின் உதவி பெற்று கட்டப்பட்ட பள்ளிகளை அரசியல் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கைப்பற்றினார்கள். பிறகு இதிலிருந்து தனிப்பள்ளி கூடாது என்றார்கள். இப்படி பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்கள் நிலை என்ன? அடமான இடத்தை பள்ளியாக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் தலைமையோ தங்கள் தனித்தன்மையைக் காட்ட வாடகை கட்டிடத்தில் தனி ஜும்ஆ நடத்தி வருகிறார்கள். இவை எல்லாம் எதற்காக? குர்ஆன் ஹதீஸை நிலை நாட்டவா? அவர்களின் நமது பாலிஸியை நிலை நாட்டவா?

இணை வைக்கும் பெண்கள்.

தர்காக்காரன் பள்ளிக்கு போகாதே என்று ஆரம்பித்து மத்ஹபுகாரன் பள்ளிக்கும் போகாதே என்றவர்கள் தவ்ஹீதுகாரன் பள்ளிக்கும் போகாதே என்று கூறிவிட்டார்கள். நமது பாலிஸியை நிலை நாட்ட நமது ஆபீஸில் நடக்கும் தொழுகைக்கு மட்டும் வா என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். அதுமாதிரி சுன்னத் ஜமாஅத்திலுள்ள பெண்களை திருமணம் செய்யக் கூடாது. அவர்கள் தர்காக்களுக்குச் செல்வதன் மூலம் இணை வைப்பவர்களாக ஆகி விட்டார்கள். எனவே 2:221 வது வசனப்படி சுன்னத் ஜமாஅத் பெண்களை திருமணம் செய்யக் கூடாது என்பதை மார்க்க அடிப்படையில் கூறுவதாகச் சொன்னார்கள்.

சுன்னத் ஜமாஅத் பெண்களை திருமணம் செய்யக் கூடாது.

2:221வது வசனம் அல்லாஹ் ரசூலை ஏற்காது ஈமான் கொள்ளாது கலிமாச் சொல்லாது நிராகரித்த முஷ;ரிக்கீன்களான காபிர்களைப் பற்றித்தான் சொல்கிறது. சுன்னத் ஜமாஅத்தவர்கள் அல்லாஹ் ரசூலை ஏற்று ஈமான் கொண்டு கலிமாச் சொன்ன முஸ்லிம்கள். இதைச் சுட்டிக் காட்டினால், மக்கா காபிர்கள் சிலைகளை நாங்கள் கடவுள் என்று சொல்லவில்லை. சிலைகளாக உள்ள அந்த பெரியார்கள் பரிந்துரை செய்வார்கள் என்றுதான் சொன்னார்கள். இதனால்தான் அல்லாஹ் அவர்களை முஷ;ரிக்குகள் என்று 10:18வது வசனத்தில் குறிப்பிட்டுள்ளான். சுன்னத் ஜமாஅத்தினரும் தர்காக்களில் அடங்கப்பட்டுள்ள பெரியார்கள் பரிந்துரை செய்வார்கள் என்று சொல்வதால் அவர்களும் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களாக - முஷ;ரிக்களாக ஆகி விட்டார்கள் எனவே 2:221வது வசனப்படி சுன்னத் ஜமாஅத் பெண்களை திருமணம் செய்யக் கூடாது என்றார்கள்.

யூத, கிறிஸ்தவ பெண்களை திருமணம் செய்யலாம்.

தர்கா, சடங்கு போன்ற செயல்களால் சுன்னத் ஜமாஅத் பெண்களை முஷ;ரிக் ஆகி விட்டார்கள் என்று கூறி, அவர்களை திருமணம் செய்யக் கூடாது என்கிறீர்கள். அப்படிச் சொல்லும் நீங்கள்தான் யூத கிறிஸ்தவ பெண்களை வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் திருமணம் செய்யலாம் என்று கூறுகிறீர்கள். சுன்னத் ஜமாஅத்தினரோ அல்லாஹ் அல்லாத எவரையும் கடவுள் என்று சொல்லவில்லை. தர்காக்களில் அடங்கப்பட்டுள்ளவர்களை அவ்லியாவுல்லாக்கள் என்றுதான் சொல்கிறார்களே தவிர அல்லாக்கள் என்று யாரும் சொல்லவில்லை. கிறிஸ்தவர்களோ அல்லாஹ்வை நிராகரித்து பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற முக்கடவுள் கொள்கையைச் சொல்கிறார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனை வேதமாகவும் ஏற்க மறுத்து பொய்ப்பிக்கிறார்கள். அந்த யூத, கிறிஸ்தவ பெண்களை வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் திருமணம் செய்யலாம் என்று கூறுகிறீர்கள்.

நாங்கள் இப்படி ஒரு பாலிஸி வைத்திருக்கிறோம்.

அல்லாஹ்வை கடவுளாகவும் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் திருக்குர்ஆனை வேதமாகவும் ஏற்று ஈமான் கொண்டு கலிமாச் சொன்ன முஸ்லிம் பெண்கள் அறியாமல் செய்யும் தவறுகளுக்காக அவர்களை திருமணம் செய்யக் கூடாது என்ற உங்களின் கூற்று யூத, கிறிஸ்தவ பெண்கள் விஷயத்தில் உள்ள உங்கள் கூற்றுடன் முரண்படுகிறது. எனவே சுன்னத் ஜமாஅத் பெண்களை திருமணம் செய்யக் கூடாது என்பதற்கு சரியான ஆதாரம் வேண்டும் என்று கேட்டால், தவ்ஹீது பெண்கள் நிறைய தேங்கி விடுவதால் நாங்கள் இப்படி ஒரு பாலிஸி வைத்திருக்கிறோம் என்கிறார்கள். தங்கள் நலனுக்காக ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அதற்கு தக்கவாறு ஆயத்து ஹதீஸ்களை வளைத்துக் கூறுவது கொள்கைப் பிரச்சனைகள் பெயரால் புதிய அமைப்புகள் துவங்குபவர்களின் பாலிஸியாக ஆகிவிட்டது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

வேறு என்ன நோக்கம் இருக்க முடியம்?

சுன்னத் ஜமாஅத் பெண்களை திருமணம் செய்யக் கூடாது என்று சொன்னவர்கள் அத்தோடு நின்றார்களா? தவ்ஹீது ஜமாஅத்தைச் சார்ந்த பெண்களாக இருந்தாலும் அவர்கள் நாங்கள் நடத்தும் பெண்கள் கல்லூரியில் படித்தவர்களாக இருக்க வேண்டும். நமது கல்லூரியில் பயிலாத பெண் தவ்ஹீது ஜமாஅத்தைச் சார்ந்த பெண்ணாக இருந்தாலும் அந்த திருமணங்களுக்கு நாங்கள் வர மாட்டோம் என்றார்கள். இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், இப்படி ஒரு பாலிஸியை நாங்கள் வைத்திருக்கிறோம் இது நமது பாலிஸி என்கிறார்கள். இந்த பாலிஸியின் நோக்கம் என்ன? அப்பொழுதுதான் நமது பாலிஸியினர் நடத்தும் பெண்கள் மதரஸாவுக்கு மாணவிகள் சேருவார்கள். அதை வைத்து நமது பாலிஸி அமைப்பில் உள்ள உஸ்தாதுகளுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். இதைத் தவிர இதில் வேறு என்ன நோக்கம் இருக்க முடியம்?

இந்த நமது பாலிஸி எங்கே கொண்டுபோய் சேர்த்துள்ளது?

ஏதாவது ஒரு திருமண வீடு கிடைக்காதா? அதை ஒட்டியாவது நபி வழியில் மார்க்கத்தை சொல்லலாமே என்று நபி வழியை நிலை நாட்ட பாடுபட்ட உண்மையான கொள்கைவாதிகளை ஓரங்கட்டினார்கள். எனவே நமது பாலிஸியை நிலை நாட்டி வாழ்வை கழிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். நமது கல்லூரியில் பயிலாத பெண்ணை திருமணம் செய்தால் அந்த திருமணங்களுக்கு நாங்கள் வர மாட்டோம் என்ற இந்த நமது பாலிஸி எங்கே கொண்டுபோய் சேர்த்துள்ளது? ஜாக் கல்லூரியில் பயின்ற பெண்கள் திருமணத்திற்கு நாங்கள் வர மாட்டோம். நிக்காஹ் புத்தகம் தர மாட்டோம் என்ற ஜாஹிலிய்யா செயலில்தான் கொண்டு போய் சேர்த்துள்ளது. நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) காலத்து முனாபிக்குகள் பற்றி மீண்டும் சிந்திப்போம்.

முஸ்லிம்களோடு முஸ்லிம்களாக.

உள்ளத்தால் ஈமான் கொள்ளாது நடிப்பவர்களை நாம் என்ன சொல்வோம். காபிர்கள் என்றுதானே சொல்வோம். உள்ளத்தால் ஈமான் கொள்ளாமல் வார்த்தைகளால் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த அந்த காலத்து முனாபிக்குகளை அதாவது அல்லாஹ்வையும் தூதரையும் நிராகரித்த (காபிர்)களின் உள்ளத்தை ஊடுருவி நன்கறிந்தவன் அல்லாஹ். அந்த அல்லாஹ், இவர்கள் முஸ்லிம்களாக நடிக்கும் முனாபிக்குகள் ஜமாஅத் தொழுகையை தவற விட்டவர்கள் இவர்களைப் பற்றி அறியாமல் 2வது ஜமாஅத்தாக இவர்கள் பின்னால் நின்று தொழுது விடக்கூடாது என்று கூறினானா? ஈமான் கொள்ளாது முஸ்லிம்கள் போல் நடித்தவர்களை பெயர் வாரியாக அடையாளம் காட்டினானா? உள்ளத்தால் ஈமான் கொள்ளாது நடித்தவர்களை முஸ்லிம்களின் ஜமாஅத்தை விட்டு நீக்கி விடும்படியோ அல்லது அவர்களை விட்டும் முஸ்லிம்கள் நீங்கி விடும்படியோ வஹி தொடர்புடைய தனது நபிக்கு கட்டளை இட்டானா? இல்லை. வெளிப்பார்வைக்கு முஸ்லிம்களாக காட்டிக் கொண்ட அவர்கள் அல்லாஹ்வுடைய பள்ளிக்கு வந்து முஸ்லிம்களோடு முஸ்லிம்களாக நின்று தொழக்கூடிய உரிமையுடன்தான்; இருந்துள்ளார்கள். இதை ஷஷஅவர்கள் தொழுகையில் நிற்கும்போது சோம்பேரிகளாகவும் மக்களுக்கு காட்டுவோராகவும் நிற்கின்றனர்..|| 4:142 என்ற வசனத்தின் மூலம் அறிகிறோம்.

மற்றவர்களின் பார்வையில் முஸ்லிம்கள்.

முஸ்லிம்களாக நடித்த இந்த முனாபிக்குகள் பிரித்து ஒதுக்கப்படாமல் போர்க்களங்களுக்கு கூட அழைத்துச் செல்லப்பட்டுள்ளதை ஹதீஸ்கள் மூலம் அறிகிறோம். முனாபிக்குகளை அடையாளம் காட்டுங்கள் அவர்கள் தலையை சீவி விடுகிறேன் என நபி(ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் கொதித்தெழுந்து கேட்டார்கள் என்ற சம்பவத்தை அறிந்திருக்கிறோம். அதற்கு உடனே நபி(ஸல்) அவர்கள், பெயர் வாரியாக அடையாளம் காட்டி வெட்டி விட சொன்னார்களா? அவர்களை விட்டு விலகி தனித்து இருக்கச் சொன்னார்களா? அல்லது அவர்களை தனிமைப்படுத்தச் சொன்னார்களா? இறைத் தூதர் முஹம்மது நபி நபி(ஸல்) என்ன பதில். சொன்னார்கள்? அவர்கள் நமது பார்வையில் முனாபிக்குகள். மற்றவர்களின் பார்வையில் முஸ்லிம்கள். அவர்களை நாம் வெட்டினால் முஸ்லிம்களை முஸ்லிம்கள் வெட்டிவிட்டார்கள் என்றுதான் மற்றவர்கள் சொல்லுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விடுகிறார்கள். இந்த ஹதீஸை சிந்தித்தால் உள்ளத்தால் ஈமான் கொள்ளாமல் வாயால் மட்டும் கலிமாச் சொல்லி இருந்தவர்களைக் கூட நபி (ஸல்) பிரித்துக் காட்டவில்லை. பிரித்துக் காட்டி இருந்தால், எதிரிகளின் பார்வையில் பிளவுபட்டு பலஹீனப்படுவது முஸ்லிம்கள்தான். இந்த படிப்பினையைத்தான் இந்த ஹதீஸ் உணர்த்துகிறது. இறையச்சமுடையவர்கள் இந்த ஹதீஸின் மூலம் இந்த படிப்பினையைத்தான் பெறுவார்கள்.

பிரிவுகளாக ஆகி சிதறி கிடக்கிறோம்.

தர்கா, தரீகாக் கொள்கைகளை மார்க்கம் என நம்பி செயல்பட்ட முஸ்லிம்களிருந்து நம்மை பிரித்துக் காட்ட நமக்கு தவ்ஹீதுவாதிகள் என அடையாளம் இட்டோம். அவர்களுக்கு குராபிகள் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தோம். மார்க்க மஸாயில்களில் சிறந்த ஆய்வுகளைத் தந்த அறிஞர் பெருமக்களை இமாம்களாக ஏற்று செயல்பட்டவர்களை பிரித்துக் காட்ட அவர்களுக்கு முகல்லிதுகள் தக்லீது பேர்வழிகள் கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள் என்ற பட்டப் பெயர் சூட்டினோம். நம்மை நபி வழி நடப்போராக பிரகடனப்படுத்தினோம். முஸ்லிம்களுக்கு மத்தியில் அல்லாஹ்வோ அவனது தூதரோ பிரித்துக் காட்டி ஒதுக்காத இந்த மாதிரியான செயலை தவ்ஹீதின் பெயரால் பிரித்துக் காட்ட ஆரம்பித்தோம். அதன் விளைவு தவ்ஹீது ஜமாஅத்களின் பெயராலும் ஏராளமான பிரிவுகளாக ஆகி சிதறி கிடக்கச் செய்து விட்டோம். அதன் மூலம் முஸ்லிம்களின் ஜமாஅத்தை, வலிமையை பலவீனப்படச் செய்தவர்களாகவும் ஆகி இருக்கிறோம்.

வெறித்தனமான ஆலிம்களை எந்த மத்ஹபுகளிலாவது காண முடியுமா?

இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை என்று கூறி 1100 ஆண்டுகளாக உள்ள 4 மத்ஹபுகளை நபி வழி என்ற ஒரே மத்ஹபாக ஆக்கப்போகிறோம் என்றோம். 20 ஆண்டுகளில் 40 பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறோம். மத்ஹபு, தர்கா, தரீகாக் கொள்கை உடையவர்களை விமர்சிக்கும்போது மத்ஹபு வெறி பிடித்தவர்கள், தர்கா வெறி பிடித்தவர்கள் என்று விமர்சித்தோம். ஒரு மத்ஹபில் உள்ள மார்க்க பிரச்சாரகரை பேச கூப்பிட்டால் நீ வேறு மத்ஹபுக்காரன் அதனால் நான் வரமாட்டேன். உங்கள் ஊரில் நான் சார்ந்துள்ள மத்ஹபு அமைப்பை ஏற்படுத்து. இல்லாவிட்டால் நான் பிரச்சாரத்துக்கு வரமாட்டேன் என்று சொன்ன கீழ்தரமான பிரச்சாரகர்கள் எந்த மத்ஹபுகளிலாவது இருக்கிறார்களா? எங்கள் மத்ஹபு பெயரால் கூட்டம் போடு என்று மத்ஹபு வெறி பிடித்துக் கூறிய கீழ்த்தரமான மவுலவிகளை எந்த மத்ஹபுகளிலாவது பார்க்க முடியுமா? அந்த மத்ஹபு ஆலிம் பேச வருவதால் எங்கள் மத்ஹபு ஆலிம்கள் பேச வரமாட்டோம் எனக் கூறிய வெறித்தனமான ஆலிம்களை எந்த மத்ஹபுகளிலாவது காண முடியுமா? அந்த மத்ஹபு பிரச்சாரகர்களை கூப்பிடாதே. இந்த மத்ஹபு பிரச்சாரகர்களை கூப்பிடாதே என்று சொன்ன மட்ட ரகமான கேடுகெட்ட பிரச்சாரகர்கள் எந்த மத்ஹபுகளிலாவது இருக்கிறார்களா?

இறையச்சமுடையவர்களாக இருந்தால் சிந்தியுங்கள்.

எங்கள் அமைப்பை உங்கள் ஊரில் பார்ம் பண்ணினால்தான் நாங்கள் பேச வருவோம். எங்களை பேச அழைத்தால் அவர்களை அழைக்கக் கூடாது. அவர்கள் வந்தால் நாங்கள் வரமாட்டோம் என்ற நிலைக்கு போய் விட்டவர்கள் யார்? குர்ஆன் ஹதீஸ்களை நிலை நாட்ட புறப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டிருப்பவர்கள்தான் இந்த நிலையில் உள்ளார்கள். எந்த முடிவு எடுத்தாலும்; குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் அடிப்படையில் எடுத்து செயல்படுத்திக் கொண்டிருப்பதாக கூறிக் கொள்ளும் அவர்களிடம், அவர்கள் வந்தால் நாங்கள் வரமாட்டோம். அடுத்த அமைப்பின் பேனரின் கீழ் பேச மாட்டோம் என்கிறீர்களே, எந்த ஆயத்து ஹதீஸ்களின் அடிப்படையில் இப்படி கூறுகிறீர்கள்? ஆதாரம் கூறுங்கள் என்று கேட்டால். இப்படி ஒரு பாலிஸியை நாங்கள் வைத்திருக்கிறோம் இது நமது பாலிஸி என்கிறார்கள். நபி வழியா நமது பாலிஸியா என்றால் இங்கு நபி வழி தூக்கி வீசப்பட்டு நமது பாலிஸி நிலை நிறுத்தப்படுகிறது. இது பவாவமா இல்லையா? இந்த மாதிரி பாவமான காரியத்தை செய்து வரும் அமைப்புக்கு ஆதரவளித்தால் இந்த பாவத்தில் பங்கு உண்டா? இல்லையா? இறையச்சமுடையவர்களாக இருந்தால் சிந்தியுங்கள். அல்லாஹ்வின் தண்டனைகளுக்குப் பயந்து திருந்துங்கள்.

இதுவே ஒற்றுமைக்கான சரியான வழி.

லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்முதுர்ரசூலுல்லாஹ் என்று கலிமாச் சொல்லி விட்டால் அவர் முஸ்லிம். 'ஹக்குல் முஸ்லிம் அலல் முஸ்லிம் சித்துன்' என்ற ஹதீஸ்படி முஸ்லிம்களுக்குரிய அத்தனை உரிமைகளுக்கும் சொந்தக்காராக ஆகி விடுகிறார். இந்த அடிப்படையில் கலிமாச் சொன்ன ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்காகவும் பாடுபட்டுக் கொண்டு அவர்களிடம் ஏற்படும் தவறுகளின் பெயரால் பிரித்துக் காட்டாமல் முறையான உபதேசம் செய்யும் ஜமாஅத்துதான் முஸ்லிம்களின் ஜமாஅத். முஸ்லிம்கள் இருக்க வேண்டிய ஜமாஅத். நபி(ஸல்) அவர்கள் வழியில் உள்ள ஜமாஅத். எனவே பிரிவினைகளை விரும்பாதவர்கள். ஒற்றுமையை விரும்பக் கூடியவர்கள் இப்படி நபி வழியில் உள்ள ஜமாஅத்தை தெளிவாக தெரிந்து கொண்டால் கொள்கையின் பெயரால் முஸ்லிம்களை கூறு போட்டு சமுதாய ஒற்றுமையை குலைத்து. சமுதாய வலிமையை பலவீனப்படுத்திடும் தீய சக்திகளிடமிருந்து மீண்டு ஒற்றுமையாக வாழலாம். இதுவே ஒற்றுமைக்கான சரியான வழி. முஸ்லிம்களை மார்க்கத்தின் பெயரால் பிளவுபடுத்தி முஸ்லிம்களின் ஜமாஅத்களை பலவீனப்படுத்திடும் iஷத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக ஆமீன்.
அன்புடன்:
கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.