வரட்டுக் கவுரவம் பார்ப்பது நியாயமா?

அப்துல்லாஹ் இப்னு உபை சேகரித்த கூட்டத்தைக் கொண்டு எதிர்க்க ஆயத்தமான செய்தி கிடைத்தது. உடனே அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் அவர்களுக்கே உரிய இயல்பான குணத்தின்படி. அந்த அப்துல்லாஹ் இப்னு உபையிடமே நேரடியாகப் போய் விட்டார்கள். போய் சந்தித்து நேரில் பேசினார்கள்.


குறைஷிகள் உங்களை எச்சரித்ததால் நீங்கள் மிகவும் பயந்துவிட்டீர்களோ! அவர்கள் உங்களுக்கு செய்யும் சூழ்ச்சியை விட நீங்கள் உங்களுக்குச் செய்யும் சூழ்ச்சிதான் மிக மோசமானது. அவர்களின் சொல்லுக்கு இணங்கி உங்களது பிள்ளைகளிடமும், சகோதரர்களிடமும் நீங்கள் போர் புரிய எண்ணுகிறீர்களா?” என்று சிந்தனையைத் தூண்டும் விதத்தில் நபி (ஸல்) கேட்டார்கள். 

அப்துர் ரஹ்மான் இப்னு கஅப் (ரழி) அவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.


இங்கே இருந்து போர் நடந்தாலும் அங்கே இருந்து போர் வந்தாலும் பாதிப்பு யாருக்கு? மதீனாவில் முஹாஜிர்கள் எண்ணிக்கையில் ரொம்பவும் குறைவு. மதீனாவில் உள்ள முஸ்லிம்களில் அன்சாரிகள்தான் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளார்கள். அவர்கள் யார்? 

உன்னுடைய சகோதரர்கள். அல்லாஹ்வின் துாதர் எவ்வளவு அழகாக எடுத்துச் சொல்கிறார்கள் பாருங்கள். அப்துல்லாஹ் இப்னு உபையே நீங்கள் இங்கே இருந்து போரிட்டாலும். அவர்கள் இங்கே வந்து போரிட்டாலும். கொல்லப்படப் போவதும் இழக்கப் போவதும் உன்னுடைய சகோதரர்கள்தான். என்னுடன் மக்காவில் இருந்து வந்தவர்கள் கொஞ்சம் பேர்தான். நாங்கள் எதையும் கொண்டு வரவில்லை. கொண்டு வந்தால்தானே இழப்பதற்கு. நாங்கள் இழக்கப் போவது ஒன்றும் இல்லை.


பொருளாதார இழப்புகள் ஏற்பட்டாலும் உயிர் இழப்புகள் ஏற்பட்டாலும். பாதிப்புகள் அடையப் போவது மதீனாவாசிகளாகிய உன்னுடைய சகோதரர்கள்தான். இந்தப் பொருள்பட அவர்களை கவரக் கூடிய வகையிலே, சிந்திக்கக் கூடிய வகையிலே அல்லாஹ்வின் துாதர் எடுத்துச் சொன்னார்கள். 

அப்துல்லாஹ் இப்னு உபைக்கு ஒன்றும் பதில் சொல்ல ஓடவில்லை, பதில் சொல்ல முடியவில்லை. உபையுடன் இருந்தவர்களுக்கு புரிந்து விட்டது. ஆஹா அப்துல்லாஹ் இப்னு உபையுடன் போனால் ஆபத்துதான். ஆபத்து நமக்குத்தான் நமது சமுதாயத்திற்குத்தான் என்று உணர்ந்து அல்லாஹ்வின் துாதர் பக்கம் வந்து விட்டார்கள். 

நபி வழியில் இறங்கிப் போய். அவர்கள் தங்கி இருந்த இடத்தைத் தேடிப் போய் பேசினாலும். இன்றைய உபையுடன் இருப்பவர்களுக்கு புரிவது இல்லை. புரிந்தாலும் தெளிவது இல்லை. நியாயமான வேண்டுகோள்களுக்கு எதிராக அநியாயமான துாண்டுகோள்களாக அவர்கள்தானே இருக்கிறார்கள்.


நாம் உருவாக்கிய அமைப்பு நாம் பாடுபட்ட சமுதாயம் என்பார்கள். ஆனால் அது அழிந்தாலும் பரவாயில்லை. நான் என்பதில் உறுதியாக இருப்பார்கள். நான் என்ற அகம்பாவத்தில் சமுதாயப் பிளவை சரியானதாக சித்தரிப்பார்கள். ஆயத்து ஹதீஸ்களைச் சொல்வதை தவிர்த்தவர்கள். தங்கள் நிலைப்பாட்டிற்றகு தகுந்தவாறு ஆயத்து ஹதீஸ்களை வளைப்பார்கள். அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வை நினைவு கூறுவதை அறுவருப்பாக கருதியவர்கள். மூச்சுக்கு முன்னுாறு தடவை அல்லாஹு அக்பர் கோஷம் போட வைப்பார்கள். இதுதான் இன்றைய உபைகளின் நிலை. அன்று உபையுடன் இருந்தவர்கள் போய் விட்டார்கள். அதனால் அப்துல்லாஹ் இப்னு உபை அப்போதைக்கு எதுவும் செய்வதற்கு வழி இல்லாமல் இருந்து விட்டான்.


அல்லாஹ்வின் துாதர்(ஸல்) இறங்கிச் சென்று பேசியதால் உள் நாட்டுப் போர் நடக்காமல் ஆனது. சமுதாயம் பாதுகாக்கப்பட்டது. அல்லாஹ்வின் துாதர் போர்க் குணம் உடையவர்களாக இருந்திருந்தால். சமுதாயத்தைப் பற்றியும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் கவலைப்படாதவராக இருந்திருந்தால். வம்பு சண்டைக்கு போக மாட்டேன். வந்த சண்டையை விட மாட்டேன் என வீர வசனம் பேசுகிறார்களே அது போல் நடந்து இருக்க முடியும். வந்த போரை சந்தித்து இருக்க முடியும். வரட்டுக் கவுரவம் பார்ப்பது நபி வழியா? கிடையாது. வரட்டுக் கவுரவம் பார்க்காமல் இறங்கிச் சென்று பேசியவர் அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள்தான். அவர்களின் இந்த செயலில் படிப்பினை இருக்கிறது. அழகிய முன் மாதிரி இருக்கிறது.


யார் எதைச் செய்வதாக இருந்தாலும் கூட நான்கு பேர் வேண்டும். செய்ய முடியாமல் வாய்ப் பந்தல் போடுவதாக இருந்தாலும் கூட நான்கு பேர் இருக்க வேண்டும். இதுதான் உலகின் நிலை. எதைச் செய்வதற்கும் வழி இல்லை என்றாகி விட்டது அப்துல்லாஹ் இப்னு உபையின் நிலை. இருந்தாலும் அவன் மனது அளவில் திருப்தி அடையவில்லை. பதவி பறி போய் விட்டால் அது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது மனித இயல்பு. அவன் முஸ்லிமாக இருந்தால் அல்லாஹ்வின் நாட்டம் என்று எண்ணி ஸபுரன் ஜமீல் எனும் அழகிய பொறுமை செய்ய வாய்ப்புகள் இருக்கின்றது. அவன்தான் முஸ்லிமாக இல்லையே. அதனால் பொறுமை செய்யும் வாய்ப்புகள் இல்லை.


எனவே ந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குறைஷிகளுடன் சேர்ந்து கொள்வான். அத்துடன் தனது உதவிக்காக யூதர்களையும் சேர்த்துக் கொள்வான். அவ்வப்பொழுது சில சில்மிஷங்களை செய்து கொண்டிருந்தான். ஆனால் எந்த ஒரு பெரிய பாதிப்புகளையோ, இழப்புகளையோ அப்துல்லாஹ் இப்னு உபையால் ஏற்படுத்த முடியவில்லை. 

அவன் வஞ்சகத் தீ மூட்டும் போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள். தங்களது  அறிவுப்பூர்வமான நடவடிக்கையால் அல்லாஹ்வின் அருள் கொண்டு அதை அணைத்துக் கொண்டே இருந்தார்கள் அவ்வப்போது ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அப்துல்லாஹ் இப்னு உபையின் செயல்பாடுகள் இருந்தன.


இந்த மாதிரி சூழலில் சஅது இப்னு முஆத்(ரலி) அவர்கள் உம்ரா செய்ய ஆசைப்பட்டார்கள். உம்ரா செய்ய வேண்டும் என்றால் மக்காவுக்குத்தான் போய் ஆக வேண்டும். மக்காவில் உள்ள நிலைமை நன்றாகவே தெரிந்த ஒன்று. மதீனாவில் இருந்து முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு துணை புரியக் கூடியவர் வருகிறார் என்றால் சும்மா விட மாட்டார்கள். சஅது இப்னு முஆத்(ரலி) அவர்கள் என்றால் நல்ல பிரபல்யமானவர். அன்சாரிகளுக்கு அவர்தான் தலைவர்.


ஏற்கனவே மதீனாவுக்கு தலைவராகவோ  யூதர்களுக்கு தலைவராகவோ இருக்கவில்லை. அன்சாரிகள் உருவான பின் அவர்களுக்கு தலைவர்களில் முக்கியமான ஒருவர் சஅது இப்னு முஆத்(ரலி) அவர்கள். பிற்காலத்தில் ஷஹீதான ஸஹாபி. இவருக்கு உம்ரா செய்ய எண்ணம் வந்த உடன். மக்காவில் உமய்யா இப்னு கலஃப் என்ற நண்பர் இருக்கிறார். துாரத்து உறவினர். அவருக்கு மெஸேஜ் அனுப்புகிறார். மெஸேஜ் அனுப்புவது என்றால் இன்றைக்கு அனுப்புவது மாதிரி அல்ல அன்று. அந்தக் கால வழக்கப்படி தகவல் அனுப்பி வைக்கிறார். நான் உம்ரா செய்ய வருகிறேன் நான் மக்காவுக்கு வந்தால் நீ எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று செய்தி அனுப்புகிறார். அவரும் உதவி செய்வதாக ஒப்புக் கொள்கிறார்.


மக்கா சென்று மக்காவில் உமய்யா இப்னு கலஃபிடம் தங்குகிறார். யாருமே இல்லாத நேரமாகப் பார்த்து என்னை கஃபாவுக்கு அழைத்துப் போ என்கிறார். உமய்யாவும் யோசனை செய்கிறார். மத்தியான நேரம் நல்ல வெயில் கொழுத்தும் அந்த நேரத்தில் யாருமே இருக்க மாட்டார்கள். இந்த நேரத்தில் சஅது இப்னு முஆத்(ரலி) அவர்களை அழைத்துச் சென்று உதவி செய்வோம் என முடிவு செய்கிறார். அதன்படி உச்சி வெயிலில் அழைத்துச் சென்றார். எந்த நேரத்தில் யாருமே இருக்க மாட்டார்கள் என்று கணித்துப் போனார்களோ அந்த  நேரத்தில் அந்த இடத்தில் எதிரில் வந்து நின்றான் ஒருவன். அவன் யார்? அவன்தான் அபுஜஹ்ல்.


அபுஸஃப்வானே! உன்னோடு இருப்பது யார்? என்று கேட்டான். உமய்யா இப்னு கலஃபுடைய குன்ய பெயர் அபுஸஃப்வான். பிள்ளையின் பெயரைக் கூறி இன்னாரின் தந்தையே என்று அழைப்பது அரபிகளின் கலாச்சாரம். அந்தக் கலாச்சாரம் இன்றும் அரபிகளிடம் இருக்கின்றது. அப்படி அழைப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியும் அடைவார்கள்


அபுஜஹ்ல் கேட்டவுடன் அவர் தெளிவாகப் பதில் சொன்னார். இது சஅது இப்னு முஆத்(ரலி) மதீனாவில் இருந்து உம்ரா செய்ய வந்து இருக்கிறார் என்று. நீ அவருக்கு உதவி செய்கிறாயா? என்று கூறி விட்டு நேரடியாக சஅது இப்னு முஆத்(ரலி) அவர்களிடம் கடினமான குரலுடன் அபுஜஹ்ல் பேசினான்.


நீ மக்காவுக்கு நிம்மதியாக தவாஃப் செய்ய வந்து விட்டாயா? மதீனாவாசிகளாகிய நீங்கள் மதம் மாறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றீர்கள். அது மட்டுமல்ல அவர்களுக்கு உதவியும் ஒத்துழைப்பும் செய்வோம் என்றும் கூறுகின்றீர்களா? அறிந்து கொள்! இறைவனின் மீது சத்தியமாக! நீ அபூ ஸஃப்வானுடன் வந்திருக்கவில்லை என்றால் உனது குடும்பத்திற்கு நீ பாதுகாப்புடன் திரும்ப முடியாதுஎன்று கூறினான். 

சஅது இப்னு முஆத்(ரலி) எப்படிப்பட்டவர் அபுஜஹ்லுக்கு பயந்து விடுவாரா? என்ன பதில் சொன்னார்? அந்த பதில் எப்படி இருந்தது?

தொடரும் இன்ஷாஅல்லாஹ்
நன்றி ; மக்கள் உரிமை
மே 13-19,2016
அடுத்த தலைப்பு

சஅது(ரலி) அவர்களிடம் இருந்த பெரிய ஆயுதம் எது தெரியுமா?


 முந்தைய தலைப்பு 

ஷைத்தானிய கொள்கை என்ன செய்யும்?


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு