குத்பிய்யத் சம்பந்தமான அந்த முபாஹலா.

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை மூலம் சகோதரர் சுதர்சன் அவர்கள் முபாஹலா சம்பந்தமாக விளக்கம் கேட்டுள்ளார். ஆண்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை நியாயப்படுத்த தங்களின் மனைவி மற்றும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் மீது கடவுளின் சாபம் உண்டாகட்டுமாக என சாபமிடுவது எந்த வகையில் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறது? இவ்வாறு சாபம் கோர இஸ்லாம்தான் வழி காட்டுகிறது எனில், இஸ்லாம் எந்த வகையில் அறிவுப் பூர்வமான மார்க்கமாகிறது? இதுதான் சுதர்சன் அவர்கள் முஸ்லிம்களிடம் நேரடியாக வைத்துள்ள கேள்வி. இதற்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களே விளக்கம் பெற வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.

முபாஹலாவுக்கு அழைப்பு விடுத்து வரும் பி.ஜெ.யானிகள் அனைவருமே இறை வேதம் அல் குர்ஆனின் 3:61 ஆவது வசனத்தைத்தான் ஆதாரமாகக் காட்டி வருகிறார்கள். இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் நஜ்ரான் நாட்டு கிறிஸ்தவர்கள் ஈஸா(அலை) அவர்களின் பிறப்பு பற்றி இஸ்லாம் சொல்லும் கருத்துகளுக்கு மாற்றமான தவறான கூற்றுகளை கூறி வந்தார்கள். எனவே கிறிஸ்தவர்களின் தவறான கூற்றுக்கு மாற்றமான ஈஸா(அலை) அவர்களின் சரியான நிலையை இறை வேதம் அல் குர்ஆனின் 3:58,59,60 ஆகிய வசனங்களில் இறைவன். தெளிவாகச் சொல்லிக் காட்டி விளக்கம் அளிக்கிறான்.

அந்த வசனங்களில் உள்ள விளக்கத்தை பி.ஜெ. அவர்களின் மொழி பெயர்ப்பிலிருந்தே தருகிறோம் எல்லா மொழி பெயர்ப்புகளிலும் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை நபியே! என்றுதான் மரியாதையுடன் குறிப்பிட்டுள்ளார்கள். திருவாளர் பி.ஜெ.மட்டும் தனது மொழி பெயர்ப்பில் முஹம்மதே! என்று மரியாதை இன்றி குறிப்பிட்டுள்ளார். எனவே முஹம்மதே! என்று பி.ஜெ. குறிப்பிட்டுள்ள இடத்தில் நபியே! என்று மரியாதையுடன் படித்துக் கொள்ளவும்.

3:58. (முஹம்மதே!) நாம் உமக்குக் கூறும் இச்செய்தி (நமது) வசனங்களும் ஞானமிக்க அறிவுரையாகும்.

3:59. அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அரை மண்ணால் படைத்து ஷஆகு| என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.

3:60. இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே சந்தேகிப்பவராக நீர் ஆகாதீர்!

இந்த விளக்கத்திற்குப் பிறகுதான் ஈஸா(அலை) அவர்கள் விஷயத்தில் இறைத்தூதரிடம் விதாண்டா வாதம் செய்பவர்களை முபாஹலாவுக்கு அழைக்குமாறு அடுத்த வசனமான 61 ஆவது வசனத்தில் இறைவன் கட்டளை இடுகிறான்.

3:61. உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதாண்டா வாதம் செய்தால் "வாருங்கள்" எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும் எங்கள் பெண்களையும் உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம் நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை கேட்போம் என்று கூறுவீராக!

இந்த வசனத்தின் மூலம் விளங்க வேண்டிய விஷயம். இந்த வசனத்தில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இது ஆண்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளுக்காக சொல்லப்பட்டது அல்ல. இரு அணிகளுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக இடப்பட்ட கட்டளை அல்ல. இரண்டு மதத்தவர்களுக்கு இடையிலான கொள்கைப் பிரச்சனையை ஒட்டி சொல்லப்பட்டது.

அதாவது மதம் சார்ந்த கொள்கைப் பிரச்சனை. மதம் சார்ந்த கொள்கைப் பிரச்சனை என்றாலே ஆண் பெண் குழந்தைகள் என பாகுபாடு இன்றி அந்த மத நம்பிக்கையில் உள்ள குடும்பத்தார் அனைவரும் அடங்குவர் என்பதை விளக்கத் தேவையே இல்லை. ஆண்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை நியாயப்படுத்த தங்களின் மனைவி மற்றும் குழந்தைகளின் மீது கடவுளின் சாபம் உண்டாகட்டுமாக என சாபமிட அழைப்பது இஸ்லாம் வழி காட்டிய வழி அல்ல. இதுதான் சுதர்சன் அவர்கள்; நேரடியாக வைத்துள்ள கேள்விக்கு இந்த பதில் போதுமானதாகும். முபாஹலா பூச்சாண்டிகளுக்காக இந்த வசனங்களில் இன்னும் உள்ள விரிவான விளக்கத்தை பார்ப்போம்.

3:58-61 வசனங்களை மேலோட்டமாக பார்த்தாலே இறைவன் சொல்லி உள்ள உண்மைக்கு மாற்றமாக இறைவன் சொல்லை பொய்ப்படுத்தியவர்களை அழைக்கச் சொல்கிறது. இது முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு இறைத் தூதர் என்ற முறையில் இறைவன் இட்ட கட்டளை என்பதை விளங்கலாம். இன்னும் விளக்கமாகச் சொல்வதென்றால் இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை மட்டுமே நோக்கி இறைவன் இட்ட கட்டளையாகும். இது.

உஹதுப் போரில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பல் உடைக்கப்பட்டு முகத்தில் இரத்தம் கசிய கடுமையாக காயப்படுத்தப்பட்டார்கள். அப்போது தம் இறைத் தூதரையே காயப்படுத்திவிட்ட ஒரு சமூகம் எப்படி வெல்லும் என்றார்கள். இன்னான் இன்னானை உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக என்றும் பிரார்த்தித்தார்கள். இறைத்தூதரின் இந்தச் செயலை தனது வேதத்தில் தனது வேதத்தில் (நபியே!) அதிகாரத்தில் உமக்கு எதுவுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள் (3:128.) என்று இறைவன் கண்டித்துள்ளான்..

3:61 ஆவது வசனத்தில் இறைவனின் சாபத்தை கேட்போம் என்று கூறுவீராக! என்று கட்டளை இட்ட இறைவன் பாதிக்கப்பட்ட நிலையில் உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக என்று இறைத் தூதர் பிரார்த்தித்ததை கண்டித்துள்ளான்.

இதன் மூலம் 3:61 ஆவது வசனத்தில் உள்ளது இறைவன் தன் விருப்பப்படி இட்ட கட்டளை. அதுவும் இறைத் தூதரை நோக்கி அந்த விஷயத்தில் மட்டும் இட்ட கட்டளை. பள்ளித் திருடர்களையோ, பத்திரத் திருடர்களையோ, பத்திரிக்கை திருடர்களையோ, அடுத்தவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் ட்டிஸ்டு கொள்ளையர்களையோ நோக்கி இடப்பட்ட கட்டளை அல்ல. மொத்தத்தில் அது பொதுவான கட்டளையும் அல்ல.

3:61 ஆவது வசனத்தில் அழைக்கப்பட்டுள்ளவர்களுடன் முபாஹலா நடந்திருந்தால் அவர்கள் மீது இறைவனின் சாபம் இறங்கி இருக்கும். காரணம் அது இறைவனின் கட்டளைப்படி அழைக்கப்பட்ட முபாஹலா.

இறைவன் அழைக்கச் சொன்ன இந்த விஷயத்தில் மட்டும்தான் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முபாஹலா அழைப்பு விடுத்துள்ளார்கள். ஆயிஷh(ரலி) அவர்களின் கற்பு சம்பந்தமான குற்றச்சாட்டுகள் முதல் எத்தனையோ சம்பவங்கள் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்துள்ளன. அந்த மாதிரி இக்கட்டான எந்த கால கட்டத்திலும் எந்த விஷயத்திற்கும் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முபாஹலா அழைப்பு விடுக்கவே இல்லை.

தமிழகத்தில் முதன் முதலாக முபாஹலா அழைப்பு விடுத்தவர் காயல்பட்டணம் ஜலீல் முஹ்யித்தீன் என்பவர்தான். அதை பி. ஜைனுல் ஆபிதீன் என்பவர் ஏற்றுக் கொண்டார். இருட்டறையில் நின்று கொண்டு யா முஹையத்தீன் என்றழைக்கும் குத்பிய்யத் சம்பந்தமான அந்த முபாஹலா 1984ஆம் ஆண்டு நடந்தது. முபாஹலா செய்து விட்டால் பொய்யர்களின் மீது இறைவனின் சாபம் இறங்கி குறுகிய காலத்தில் அவர்கள் அழிந்து விட வேண்டும்.

குத்பிய்யத் சம்பந்தமான அந்த முபாஹலா நடந்து 23 ஆண்டுகள் ஓடி விட்டது. முபாஹலா செய்த இரண்டு பேரின் குடும்பமும் நல்ல நிலையில்தான் உள்ளது. அவர்கள் முபாஹலா செய்தபோது இருந்ததை விட கூடுதல் வசதி பெற்று அப்பொழுது இருந்ததை விட உயர்வான நிலையிலேயே இரண்டு பேரின் குடும்பமும் உள்ளது. எனவே அல்லாஹ்வின் தீர்ப்பை எதிர் பார்த்து காத்து இருக்கிறேன் என்ற அறிக்கைகள் யாவும் வெறும் நடிப்புதான் என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவை இல்லை.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.