கும்பகோணம் அதிர்ச்சிகள். படிப்பினைகள். தீர்வு.

அஸ்ஸலாமு அலைக்கும். 16-7-2004 அன்று, 'மதராஸில் உள்ள மதரஸாவில் மாணவ மாணவிகள் எரிந்து விட்டார்கள்' என்று அரபிய டி.வி. செய்திகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அரபிகள் சோகத்துடன் சொன்னார்கள். (தமிழ்நாட்டை மதராஸ் என்றும் தமிழர்களை மதராஸிகள் என்றும்தான் அரபிகள் சொல்வார்கள்.) தீ பிடித்து கரிக்கட்டைகளாக எரிந்துவிட்ட செய்திகளை டி.வி-யில் கேட்ட அரபிகளெல்லாம் சோர்ந்து இருந்தனர். நாமும் அதிர்ச்சி அடைந்தோம். அதுவும் மகாமக சோகம் இன்னும் நீங்கிடாத கும்பகோணத்தில் என்றதும் மேலும் அதிர்ச்சியாக இருந்தது. உருகாத உள்ளங்களும் உருகிவிடும் அந்த நிகழ்வின் செய்திகளை அறிய தமிழ் தொலைக்காட்சிகளை திறந்தோம். கட்சிகளை சார்ந்துள்ள ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் செய்திகளை சொன்னவிதம் இன்னும் அதிர்ச்சி அளித்து வேதனை தந்தது. கட்சிகளை சார்ந்துள்ள பத்திரிக்கைகளும் அவ்வாறே செய்திகளை தந்தன.

மொத்தத்தில் கட்சிகளை சார்ந்துள்ள ஒவ்வொரு மீடியாக்களும் இந்தச் செய்தியை தந்த விதம் தாங்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்கு விளம்பரம் தேடிக் கொடுப்பதிலேயே குறியாக இருந்ததை பார்த்தபோது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. கட்சிகளும் அதன் சார்பு மீடியாக்களும் தந்த அதிர்ச்சிகளைவிட சில மனித கூட்டங்கள் தகவல் கேட்ட விதங்கள் எழுத முடியாதவை. இதையெல்லாம்விட பேரதிர்ச்சி என்னவென்றால் கும்பகோணம் தந்த படிப்பினை சம்பந்தமாக கூடி பேசிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஒரு முஸ்லிம் சகோதர் கூறிய யோசனை.

அந்த முஸ்லிம் சகோதரர் ஏற்படுத்திய பேரதிர்ச்சி என்ன? இது மாதிரி சம்பவங்கள் இனி ஏற்படக் கூடாது என்றால் ஸ்கூல்களை சினிமா தியேட்டர்கள் மாதிரி தனித்து இருக்க வேண்டும். பெரிய ஹாலாக இருக்க வேண்டும். சுற்றி காம்பவுண்ட் சுவர் இருக்க வேண்டும். என்று விளக்கம் கூறிக் கொண்டிருந்ததுதான். அப்பொழுது குறுக்கிட்ட நாம் கூறிய கருத்துக்களையே கீழே தர உள்ளோம்.

சினிமா தியேட்டர்கள் என்பது 100 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவைதான் பள்ளிவாசல்கள். வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழி காட்டி உள்ளது இஸ்லாம். அந்த இஸ்லாம் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் வழி காட்டி உள்ளது. இதற்குரிய முன் மாதிரியாக பள்ளிவாசல்களை அமைத்து தந்துள்ளது. 1400 ஆண்டுகளுக்கு முன் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் கட்டிய மஸ்;ஜிதுன் நபவி(எனும் நபி பள்ளி)யின் அமைப்பு எப்படி இருந்தது? கீற்றுகளால் அமைக்கப்பட்ட அந்தப் பள்ளி எவ்வளவு சுகாதரமாக காற்றோட்டமாக நாலாபுறமும் வழிகள் இருந்தது என்பதை பல ஹதீஸ்கள் முலம் அறியலாம்.

குறிப்பாக, பெருநாள் தினத்தன்று மஸ்ஜிதுன் நபவியின் உள்ளே அபிஸீனிய வீரர்கள் வீர விளையாட்டுகள் செய்து காட்டினார்கள். அதை இறைத் தூதர் முஹம்மதுநபி(ஸல்) அவர்களும் அன்னை ஆயிஷh(ரலி) அவர்களும் தங்கள் வீட்டில் இருந்தவாறு பார்த்தார்கள் என்ற ஹதீஸை நம்மில் பெரும்பாலானவர்கள் அறிந்துள்ளோம். அடிக்கடி கேட்டுள்ள இந்த ஒரு ஹதீஸை மட்டும் நம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

அந்தகால வீரர்களின் வீர விளையாட்டு வாள் வீச்சாகும் வாளை வீசி சுழற்றி ஓங்கும்போது அது மேல் நோக்கித்தான் உயரும். வாளை ஓங்கும்போது எகிறி குதித்தும் ஓங்குவார்கள். வாளின் உயரம் மேல் நோக்கி எகிறி குதித்து ஓங்கும்போது உயரும் உயரத்தைவிட மேலே உயர்ந்து இருந்துள்ளது நபி பள்ளி கீற்றுக் கொட்டையின் குறுக்கு கம்பங்கள். குறுக்குக் கம்பங்களின் உயரம் இந்த அளவுக்கு என்றால் மேல் முகடு - கூரை எவ்வளவு உயரத்திற்கு இருந்திருக்கும். இவற்றை சிந்தித்தால் மக்கள் கூடும் இடங்கள் நல்ல காற்றோட்டத்துடன் இலகுவாக சுவாசிக்கும் வகையில் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபி(ஸல்) அவர்கள் கட்டிய பள்ளியின் கூரை மிக உயரமாக கட்டப்பட்டுள்ளதை புரிய முடிகிறது.

பள்ளிவாசல்களில் நடத்திடும் மற்ற தொழுகைகளைவிட மக்கள் அதிகமாக் கூடும் பெருநாட்களின் தொழுகையை திறந்த வெளியில் நடத்தியதிலும் இதற்கு முன் மாதிரி உள்ளது. பொதுவாக மக்கள் பெருவாரியாக கூடும் இடங்களுக்கு ஓரிருவராக சிறு சிறு கூட்டங்களாக வந்து கூடுவார்கள். கூடிய நோக்கம் முடிந்து வெளியேறும்போதும் சரி, அவசரத்தில் கலையும்போதும் சரி. கூடிய பெருங் கூட்டமே ஒட்டு மொத்தமாக வெளியேறுவதும் கலைவதும் மனித இயல்புகளிலிருந்து தவிர்க்க முடியாத ஒன்று. தீ பிடித்தல் போன்ற சம்பவங்கள் மூலம் மட்டுமன்றி நெருக்கியடித்து வெளியேறும்போதும் முன்டியடித்து கூட்டம் கூட்டமாக இறந்த சம்பவங்களும் உலக நாடுகள் முழுவதிலும் கடந்த காலங்களில் நடந்துள்ளதை மறுக்க முடியாது.

பெருந்திரளான மக்களை கூட்டினால் ஒட்டு மொத்தமாக குறிப்பிட்ட இடத்தை விட்டு காலியாகும் விதத்தில் இருக்க வேண்டும் என்று மஸ்ஜிதுன்நபவி மூலமும் திறந்த வெளி பெருநாள் திடல் மூலமும் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளது அழகிய முன் மாதிரியாகும். இந்த அழகிய முன் மாதிரியை செயல்படுத்தி மற்றவர்களுக்கும் வழி காட்டிகளாக இருக்க வேண்டிய நம் சமுதாயமும் இந்த நபி வழியையும் சிறுக சிறுக மறந்து வருகிறது.

நமது சமுதாய முன்னோர்கள் கட்டிய பள்ளிவாயில்கள் யாவும் பல வழிகளுடன் காம்பவுண்ட் (சுற்றுச்) சுவர்களைக் கொண்டும் தகுந்த காலி இடங்களுடனும்தான் இருந்தன. ஆரம்பத்தில் உருவான அந்த அஸ்திவாரங்களை இடித்து தள்ளி விட்டு, பல வாயில்கள் எதற்கு ஒரு வாயில் போதாதா? என்று கேட்டு பள்ளிவாயில்களின் வருவாய்க்கு வழி காணுகிறோம் என்று கூறி, பள்ளிக்கு வரும் வாயில்களை அடைத்து வருகிறார்கள். பள்ளிக்கு வரும் வாயில்களில் ஒன்றைத் தவிர அனைத்தையும் அடைத்து கடைகளும் காம்ளக்ஸ்களும் கட்டி வருகிறார்கள்.

இப்படியெல்லாம் ஆகி விடக் கூடாது என்றுதானோ என்னவோ? பள்ளிகளை சுற்றி திறந்த வெளி இருக்க வேண்டும் என்பதற்காகவோ பள்ளியை ஒட்டி கபரஸ்தான்களை முன்னோர்கள் அமைத்தார்கள் போலும். அந்த கபரஸ்தான்களையும் காலி செய்து கடைகள் கட்டி காம்ளக்ஸ்களாக ஆக்கிடும் பணிகள் வேகமாக பல ஊர்களில் நடந்து முடிந்து விட்டதையும் நடந்து வருவதையும் பார்க்கிறோம்.

விரிவான உயரமான கதவுகளுடன் கூடிய பல ஜும்ஆ பள்ளிகளில் ஜும்ஆ அன்றைக்கும் ஓரிரு வாயில்களை மட்டும் திறந்து வைத்து விட்டு அல்லாஹ்வுடைய பள்ளியை விட்டு வெளியேற அவ்வளவு அவசரமா? என்று தத்துவம் பேசி மற்ற கதவுகளை திறக்க மறுக்கின்றனர். மக்கள் சென்ற பின் மீண்டும் பூட்டுவதற்கு சோம்பி கூறும் தத்துவம்தான் இது. கும்பகோணம் மூலம் படிப்பினை பெற்று சிறுக சிறுக மறந்து வரும் நபி வழியை மீண்டும் சரியாக செயல்படுத்தி மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நம் சமுதாயம் ஆக வேண்டும்.

ஒரு அதிகாரி இன்ன இன்ன வசதி குறைவுகளால் அனுமதி மறுக்கிறேன் என்று கூறினால், அது மாதிரி வசதி குறைவு உள்ள வேறு பள்ளிக்கூடங்களை காட்டித்தான் அனுமதி பெறுகிறார்கள். எனவே அதிகாரிகளை மட்டும் குறை சொல்லி பயன் இல்லை. நடந்து விட்ட சம்பவங்களுக்கு 4 அதிகாரிகளை நீக்குவதும் நிவாரண உதவிகள் அளிப்பது மட்டும் தீர்வாகுமா? இழந்த உயிர்களை மீட்க முடியுமா? லட்ச லட்சமாக அல்ல கோடி கோடியாக கொண்டு வந்து கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகுமா? ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் விமர்சித்து விட்டால் போதுமா? நம்மீது உள்ள கடமை என்ன? சிந்திக்க வேண்டாமா? நாம் பெற வேண்டிய படிப்பினைகள் என்ன என்பதை நாம் சிந்தித்து செயல்படாவரை ஆற்றப்படும் பணிகளால் அணு அளவு நன்மையும் இல்லவே இல்லை.

கும்பகோண ஸ்கூல் மாதிரி நமது பகுதிகளில் ஸ்கூல்கள் இருக்கின்றவா என்பதை பார்க்க வேண்டும். இருந்தால் உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கும் பணிகளில் முனைப்போடு ஈடுபட வேண்டும். பள்ளி கூடங்களெல்லாம் சத்துணவு பெயரால் சமையல் கூடங்களாக மாறி வருகின்றன. இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இரவில் உறங்கும்போது எண்ணை ஊற்றி எரிக்கப்படும் விளக்குகளை அனைத்து விடும்படி கட்டளை இட்டு தீ விஷயத்தில் அவ்வளவு முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள். எனவே சத்துணவு சமையல் கூடங்கள் உடனடியாக பள்ளிக் கூட வளாகங்களை விட்டு அப்புறப்படுத்தும்படி ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

சத்துணவு சமையல் கூடங்களை தனியாக வெகு தொலைவில் அமைத்து அங்கிருந்து தயாரிக்கப்பட்ட உணவாக வரவேண்டும். மக்கள் திரளாக கூடும் இடங்கள் அனைத்திலும் அது வணக்க வழிபாட்டுத் தலங்களாக இருந்தாலும் ஒரே நேரத்தில் அனைவரும் வெளியேறும் அவசர வாயில்களுடன் இருக்க வேண்டும். கான்கிரீட் கட்டிடங்களாக இருந்தாலும் சமையல் கூடங்கள் தனித்தும் தொலைவிலும்தான் இருக்க வேண்டும். என்பன போன்ற கட்டாயச் சட்டம் கொண்டு வர வழி காண வேண்டும். தீயவன் ஒருவன் ஒருவனுக்கு தீங்கிழைத்தால் தீங்கிழைத்த அந்த தீயவனை தட்டிக் கேட்க வேண்டும். தட்டிக் கேட்கத்தவறியவர்கள், நமக்கென்ன என்றிருந்தவர்கள் அந்த தீயவனால் பாதிப்புக்குள்ளாவதை யாராலும் தடுக்க முடியாது.

10 வீடுகளுக்கப்பால் உள்ள வீட்டில் பாம்பு நுழைந்து விட்டது என்றால் அதை அடிக்க 10 வது வீட்டுக் காரனும் ஓடுவான். ஏன்? அங்கு நுழைந்த பாம்பு நம்ப வீட்டுக்கும் வந்து விடும் என்ற பயம்தான். ஏர்வாடி, ஸ்ரீரங்கம், குப்பகோணம் இதற்குப் பிறகும் எங்கோ நடந்தது நமக்கென்ன? என்று இருக்கலாமா? தீர்வு காண வேண்டாமா? ஓரே தீhவு நபி வழியே என்பதை நாமும் உணர்ந்து செயல்படுத்தி நாட்டு மக்களுக்கும் உணர்த்திடுவோம். இன்ஷh அல்லாஹ்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.