குறுக்கு விசாரணை
தமிழ் கூறும் முஸ்லிம் உலகில் ஒரு விசித்திரமான நிலை நீண்ட காலமாக நிலை பெற்றுள்ளது. அந்த நிலை மாறி விடுமானால் இந்த சமுதாயத்தில் ஊடுருவிவிட்ட ஏராளமான தீமைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
மாக்கம் என்ற பெயரால் யாராவது ஏதாவது கூறிவிட்டால், அதை அப்படியே ஏற்றுக் கொள்கின்ற அலட்சிய மனப்பான்மையையே நாம் குறிப்பிடுகிறோம். 'கால் கிலோ கத்தரிக்காய்' வாங்குவதற்காக எடுத்துக் கொள்ளும் அக்கரைக்கூட மார்க்க விஷயங்களில் எடுத்துக் கொள்ள மறுக்கிறார்கள். நாலணாவுக்கு நல்லெண்ணெய் வாங்குவதற்குக்கூட எவ்வளவு பரிசீலனை! எத்தனைக் கேள்விகள்! தில் பத்தில் ஒரு பங்கை மார்க்க விஷயத்தில் பயன்படுத்தியிருந்தால் கூட பல நூறு தீமைகள் ஒழிந்திருக்குமே!
'என்னிடமே கேள்வி கேட்கிறாயா? என்னையே விமர்சனம் செய்கிறாயா? நான் சொல்வதற்கு உனக்கு ஆதாரம் வேறு சொல்ல வேண்டுமா?' என்ற ஆணவப்போக்குடன் பெரும்பாலான முல்லாக்கள் நடந்து கொண்டதோடு மக்களையும் அப்படியே நம்பவைத்துமிட்டார்கள்.
போலி முல்லாக்கள் தங்கள் சுயலாபம் கருதி இதைச் செய்கிறார்கள் என்றால், மக்களாவது தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர வேண்டாமா? ஏனோ அவர்களில் பலர் உணர்ந்ததாக தெரியவில்லை.
நயவஞ்சகர்களின் தலைவன் அப்தல்லாஹ் இப்னு உபய் இறந்த போது அவனது மகன் அப்துல்லாஹ்(ரலி) என்ற நாயகத்தோழர் அண்ணலாரிடம் வந்து, 'தன் தந்தையின் பிணத்திற்கு தொழுகை நடத்த வர வேண்டுமென்றும்'அவனது உடலில் அணிவித்து அடக்கம் செய்வதற்காக அண்ணலார் தமது சட்டையை அன்பளிப்பாக தர வேண்டுமென்றும் வேண்டி நின்றார்.
அண்ணலார் அவ்வாறே தமது சட்டையே அன்பளிப்பாக தந்ததடன் அவனது சடலத்திற்கு தொழுகை நடத்தவும் புறப்பட ஆயத்தமாகிவிட்டார்கள்,அப்போது அங்கே இருந்த உமர்(ரலி) அவர்கள் 'புறப்பட்ட அண்ணலாரின் சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தி அண்ணலே! அல்லாஹ் உங்களை தடுத்திருக்பகும்போது, அவனுக்கு தொழுகை நடத்தப் போகிறீர்களா? என்று அல்லாஹ்வின் தூதரை நேரடியாகக் கேட்டார்கள்.
அதற்கு அதற்கு அண்ணலார் நீர் அவர்களுக்காக மன்னிப்புக் கோரினாலும் மன்னிப்புக் கோராவிட்டாலும், அவர்களுக்காக எழுபது தடவை மன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்க மாட்டான்(அல்குர்ஆன்9:80) என்று அல்லாஹ் கூறி இந்தப் பிரச்சனையை எனது விருப்பத்திற்கு விட்டிருக்கிறான்.
(எழுபது தடவைகள் அவர்களுக்காக மன்னிப்புக் கேட்டாலும் நான் மன்னிக்க மாட்டேன் என்று தானே கூறுகிறான்). நான் அதற்கு மேலும் அவனுக்காக மன்றாடப் போகிறேன் எனக் கூறிவிட்டு அவனுக்காக தொழுகை நடத்தச் சென்றுவிட்டார்கள். தொழுகை முடிந்து வந்ததும்,
(நபியே)! அவர்களில் இறந்துவிட்ட எவனுக்காகவும் இனி ஒரு போதும் தொழுகை நடத்தாதீர்! அவனுடைய மண்ணறைக்கருதிலும், (அவர்களுக்காக மன்னிப்புக்கோரி) நிற்காதீர்! (9:84) என்ற வசனம் அருளப்பட்டது. அறிவிப்பவர்:இப்னுஉமர்(ரலி) நூல்:புகாரி
அல்லாஹ்வின் தூதரிடமே, அவர்களின் அன்புத் தோழர்கள் கேள்விக் கேட்டிருக்கிறார்கள். விளக்கம் தேடி இருக்கிறார்கள். அவர்களுக்கும் மேலாகவன்றோ சிலர் தங்களை கருதிவிட்டனர்.
ஒரு யூதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'முஸ்லிம்களாகிய நீங்களும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறீர்களே! (எவ்வாறெனில் நீங்கள் உங்கள் நபியை நோக்கி) அல்லாஹ்வும், நீங்களும் நாடியவாறே (நடந்துள்ளது) என்கிறீர்கள்!' கஃபாவின் மீது ஆணையாக! 'என்கிறீர்களே! (அல்லாஹ்வுக்கு இணையாக அவனது தூதரையும், அவனது ஆலயத்தையும் ஆக்கிவிட்டீர்களே!' என்று கேட்டார்.
அதன் பிறகு 'சத்தியம் செய்வதென்றால் 'கஃபாவின் இறைவன் மீது ஆணையாக!' என்று கூறுமாறும், 'அல்லாஹ் நாடிய விதமாகவே நடந்தது. அதன் பிறகே நீங்கள் நாடிநீர்கள், என்று (தன்னைப் பார்த்துச்) சொல்லுமாறு கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: குதைலா(ரலி) நூல்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா
ஒரு யூதருடைய கேள்வியில் உள்ள நியாயத்தை எவ்வளவு மதித்திருக்கிறார்கள். அதில் உள்ள உண்மையை ஒப்புக்கொண்டு தன் தோழர்களை திருத்துகிறார்கள்.
இந்த நிலை தோன்ற வேண்டாமா அல்லாஹ்வின் தூதருக்கும் மேலானவர்களாகத் தங்களை கருதிக் கொண்டிருப்போரை 'குறுக்கு விசாரணை' செய்ய வேண்டாமா? மார்க்கம் என்று எதையாவது சொன்னால், அல்லாஹ் சொல்லி இருக்கிறானா?அல்லாஹ்வின் திருத்தூதர்(ஸல்) கூறி இருக்கிறார்களா? என்று கேட்க வேண்டாமா? எண்ணிப் பாருங்கள்!
நான்கு இமாம்களில் ஒருவரைப் பின்பற்றுவது வாஜிப் என வாதிடுவோரே! அவர்களிலிருந்தாவது நீங்கள் பாடம் படித்தது உண்டா? இமாம்களின் காலத்தில் ஒருவர் கருத்தை இன்னொருவர் விமர்சித்ததில்லையா? தனது தீர்ப்பு தவறானது என்று உணரும்போது உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொண்டதில்லையா? இமாம் ஷhபியி அவர்கள் தமது ஆசிரியப் பெருந்தகை இமாம் மாலிக் அவர்களுக்கு எதிராகவும், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல், தனது ஆசிரியரான இமாம் ஷhபியி அவர்களுக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கியதில்லையா? தனது ஆசிரியர் கூறிவிட்டார், என்று தலையாட்டிக் கொண்டிருக்கவில்லையே! உங்களைப் பற்றி ரொம்பவும்தான் உயர்வாக எண்ணிவிட்டீர்கள்.
யாராக இருந்தாலும் தாட்சண்யமின்றி தவறுகளைச் சுட்டிக்காட்டும் மனப்பான்மை மட்டும் வளர்ந்துவிட்டால், ஆதாரங்கள் கேட்கும் துணிவு வந்துவிட்டால் அதைவிட பொற்காலம் வேறு என்ன இருக்க முடியும்?
இந்தப் பீடிகை எதற்கு என்கிறீர்களா? நாங்களும் மனிதர்கள்தான். அதுவும் சாதாரண மனிதர்கள்தான்! நாங்கள் அறிந்ததைவிட அறியாதவையை மிக அதிகம் உள்ளன. நாங்கள்தான் அறிஞர்கள் என்று நாங்கள் கருதவில்லை. எங்களைவிட பன்மடங்கு சிறந்த அறிஞர் பெருமக்கள் வெளியில் இருந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாகவே அறிகிறோம். அந்த அடிப்படையில் எங்களிடம் ஏற்படும் தவறுகளை-முரண்பாடுகளை-ஆதாரமற்றவைகளை எங்களுக்குச் சுட்டிக்காட்டுங்கள்! எங்களைக் குறுக்குவிசாரணை செய்யுங்கள் அதற்காகவே இந்தப்பகுதி.
'அல்ஜன்னத்' இதழில் வெளியாகும் எதைப் பற்றியும் ஐயங்கள் கிளப்பலாம்! ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம்! தவறுகளை சுட்டிக் காட்டலாம்! மாற்று ஆதாரங்களைச் சமர்ப்பிக்கலாம்!' குறுக்கு விசாரணை' என்று தலைப்பிட்டு எங்களுக்கு அனுப்புங்கள்!
'அல்ஜன்னத்'தில் இடம் பெறாதவை பற்றிய ஐயங்கள் இந்த பகுதியில் இடம் பெறாது. எவரது அர்த்தமுள்ள விமர்சனமும் மறைக்கப்படாது. தவறு என்றால் இந்தப் பகுதியில் பகிரங்கமாக ஏற்றுக் கொள்வோம். இல்லை என்றால் விளக்கம் தருவோம்.
அன்புடன்
ஆசிரியர்குழு
நன்றி: அல்ஜன்னத் 1988 ஜன,பிப்
இதனை கம்யூட்டரில் டைப் செய்து தந்த செல்வி ரஜா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.
Comments