மாற்றாரின் பார்வையில் இஸ்லாம்.
இன்றைய உலகில் 'மனித சமுதாயத்தை மேம்படுத்துகிறோம்' என்று பறைசாற்றக்கூடிய பல்வேறு மதங்கள், இயக்கங்கள் மலிந்து கிடப்பதை நாம் காண்கிறோம். எல்லா மதங்களும், மதவாதிகளும் 'தங்கள் மதமே சிறந்தது' என்று அறிவித்துகொள்கின்றனர். தங்கள் மதத்தை பிரச்சாரமும் செய்கின்றனர். எனினும் சிந்தனையாளர்கள், மற்ற மதங்களை விட இஸ்லாம் சிறந்து விளங்குவதை ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களில் சிலர் இஸ்லாத்தில் தங்களையும் இணைத்துக் கொள்கின்றனர்.
'இஸ்லாம்' வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லித்தரும் மதமாக இல்லாமல், மனித வாழ்வின் எல்லா பிரச்சனைகளையும் கவனிக்கிறது! அதில் தலையிடுகிறது! தக்க தீர்வையும் சொல்கிறது. அன்றிலிருந்து இன்று வரை மனிதக்கரங்களால் மாசுப்படுத்த முடியாத மகத்தான வேதத்தை இஸ்லாம் மட்டுமே வைத்திருக்கிறது என்றெல்லாம், இஸ்லாத்தைப் பற்றி நற்சான்று வழங்குபவர்கள், இஸ்லாத்தில் ஒரு சில சட்டங்களைப் பற்றி அதிருப்தி அடைகிறார்கள். அதன் காரணமாக இஸ்லாத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.
இஸ்லாத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டவர்கள், 'குர்ஆன் கூறுகிறது' என்று சொன்னால் திருப்தி அடைந்து விடுகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டாகள்' என்று சொன்னால் ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் இஸ்லாத்திற்கு வெளியே இருப்பவர்கள் 'குர்ஆன் இறைவனுடைய வேதம்' என்றும் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்னவின் தூதர் என்றும் நம்பாத காரணத்தால் இஸ்லாமிய சட்டங்கள் சிலவற்றில் சந்தேகம் கொள்கிறார்கள், மறுக்கிறார்கள், விமர்சிக்கிறார்கள்.
இத்தகையவர்களின் ஐயங்களை தர்க்க ரீதியாக-அவர்களின் அறிவு ஏற்றுக்கொள்ளும் வண்ணம் எடுத்து வைக்கும் கடமை நமக்கு இருக்கிறது. ஏனெனில் இஸ்லாம் நமக்கு மட்டும் சொந்தமான மார்க்கமல்ல. முழு உலகுக்கும் அருளப்பட்ட மார்க்கம். இஸ்லாத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கும் இஸ்லாத்தை உரிய முறையில் எடுத்து சொல்லும் கடமையை நாம் நிறைவேற்றி ஆக வேண்டும். இவர்கள் வாதங்கள் அறிவுப் பூர்வமானதாக தோன்றுவதால், பரம்பரை முஸ்லிம்களில் சிலரும் கூட இந்த வாதத்திற்கு பலியாகி 'இஸ்லாத்தின் சட்டங்கள் நியாயமற்றவை' என்ற எண்ணத்திற்கு வந்துவிடுகின்றனர்.
'இஸ்லாத்தின் காவலர்கள்' என்று தங்களுக்கு பட்டம் சூட்டிக்கொண்டவர்கள், இதையெல்லாம் கண்டு கொள்வதாக இல்லை. 'நம்மவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்கிறார்களே' இவர்களின் விமர்சனங்களுக்கு விளக்கம் வேண்டுமே என்றெல்லாம் சிந்திப்பதாக இல்லை.
அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம்! புதிது புதிதாக இவர்களால் உருவாக்கப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட மூடநம்பிக்கைகள், போலிச்சடங்குகள், இஸ்லாத்தைக் குறை காண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டன.
இஸ்லாத்திற்கு வெளியே இருப்பவர்கள் இஸ்லாத்தின் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுகளுக்கு உரிய முறையில் நாம் விளக்கம் சொல்லி ஆக வேண்டும். மாதிரிக்கு சில குற்றச்சாட்டுகளைக் காண்போம்.
'இஸ்லாம்' பெண்களுக்கு அநீதி இழைத்துவிட்டது' இதுதான் புதுமை விரும்பிகளின் மிகப்பெரும் குற்றச்சாட்டு, இதனை மெய்ப்பிக்க சில சான்றுகளையும் அவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.
ஒரு ஆண், ஒரு பெண்ணைத் திருமணம் செய்கிறான் ஆணுக்கு பெண்ணை பிடிக்கவில்லை என்றால் அந்த நிமிடமே அவளை விவாக விலக்கு செய்து விடலாம். ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது. தன் இளமையை ஒரு ஆணிடம் ஒப்படைத்த ஒரு பெண் நிர்க்கதியாகி விடுகிறாள். இது மிகப்பெரும் கொடுமை அல்லவா?
ஒரு தந்தைக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையுமிருந்தால் தந்தையின் சொத்தில் ஆணுக்கு மட்டும் இரு பங்குகளும் பெண்ணுக்கு ஒரு பங்கு மட்டுமே இஸ்லாம் தருகின்றது. இது! பாரபட்சமில்லையா? 'ஆணும் பெண்ணும் சமம்' என்று முழங்கக்கூடிய காலக்கட்டத்தில் பெண்ணுக்கு மட்டும் கட்டுப்பாடான உடைகள், தேவையின்றி வெளியே செல்லக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் கட்டுப்பெட்டித்தனம் அல்லவா? ஆக்கிரமம் அல்லவா?
ஒரு ஆண் அதிகபட்சம் நான்கு மனைவிகளை மணமுடிக்கலாம். ஒரு பெண் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிகபட்சமாக இரண்டு ஆண்களை ஒரே நேரத்தில் மணக்க கூடாதா? ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியா?
'ஒருவனிடம் அடிமைப் பெண்கள் இருந்தால் திருமணம் செய்யாமலே உறவு கொள்ளலாம்' என்ற சட்டத்துக்கும், விபச்சாரத்திற்கும் என்ன வித்தியாசம்? இது முறைகேடு இல்லையா?
குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆண்களாக இருந்தால் இரண்டு சாட்சிகள் போதும், பெண்கள் சாட்சி சொல்வதென்றால் நான்கு பேர்கள் வேண்டும் என்று சட்டம் வகுத்ததன் மூலம் பெண்களை 'அரை மனிதனாக' கருதுவது அக்கிரமம் இல்லையா?
தொழுகையில் ஆண்களுக்கு மட்டும் இமாமத் செய்யும் தகுதி உள்ளதாகக் கூறும் இஸ்லாம், பெண்களுக்கு மறுக்கிறதே! இது சரிதானா?
இப்படி அடுக்கிக் கொண்டே போகிறார்கள். மொத்தத்தில் இஸ்லாம் பெண்களுக்கு அநியாயமே செய்துள்ளது என்று உரத்துச் சொல்கிறார்கள்.
மதத்தை அடுத்தவர்மீது வலுக்கட்டாயமாக இஸ்லாம் திணிக்கிறது. இஸ்லாத்தை ஏற்காதவர்களுடன் எதிர்த்து போர் புரியச் சொல்கிறது. கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லச் சொல்கிறது. 'ஜிஹாத்' என்னும் மதப்போரைத் தூண்டி உலக அமைதிக்கு இஸ்லாம் வேட்டு வைக்கின்றது! இதுவும் அவர்களின் குற்றச்சாட்டுகளில் ஒன்று.
இயல்பிலேயே தவறு செய்பவனாக படைக்கப்பட்டுள்ள மனிதன் சில வேளைகளில் தவறு செய்துவிடும் போது அவனிடம் இஸ்லாம் கடுமை காட்டுகிறது. சதாரணத் திருட்டுக் குற்றத்திற்காக கையை வெட்ட வேண்டுமா? விபச்சாரம் செய்து விட்டால் அவனைக்கொலை செய்ய வேண்டுமா? மது அருந்தினால் கசையடி கொடுக்க வேண்டுமா? இவை காட்டுமிராண்டித்தனம் அல்லவா? இப்படியும் ஒரு குற்றச்சாட்டு!
உயிரினங்களை சர்வசாதாரணமாக கொலை செய்வதை இஸ்லாம் அனுமதிக்கின்றதே! உயிருள்ள ஒரு ஜீவனிடம் கருணை காட்டக் கூடாதா? என்று ஜீவ காருண்யம் பேசுகிறார்கள் சிலர்.
சினிமா, தொலைக்காட்சி, இசைக்கருவிகள் போன்ற நவீனக் கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்துவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லையே! இதன் மூலம் இஸ்லாம் விஞ்ஞான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகின்றதே! இதன் மூலம் பிற்போக்கு மார்க்கம் என்பது நிரூபணம் ஆகவில்லையா?
இஸ்லாத்தை நோக்கி வீசப்படும் கேள்விக் கணைகளில் சில இது. இவற்றுக்கெல்லாம் தர்க்கரீதியாக நாம் விளக்கம் சொன்னால் மட்டுமே, இஸ்லாத்தின் மீதுள்ள தப்பான எண்ணமும், கசப்புணர்ச்சியும் நீக்க முடியும். அதற்காக இந்தப் பகுதி துவங்கப் பட்டுள்ளது.
இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்கள் கூறும் வேறு குற்றச்சாட்டுகளை சந்திப்பவர்கள் அவற்றையும் 'அல்ஜன்னத்'துக்கு அனுப்பி வையுங்கள்! அவற்றுக்கும் இந்த கட்டுரைத் தொடரில் விளக்கம் தரப்படும்.
முதலில் பலதாரமணம் பற்றி மாற்றார்கள் எழுப்பும் சந்தேகங்களையும், அதற்கு நியாயமான பதில்களையும் அடுத்த இதழில் காண்போம்.
(வளரும்)
அல் ஜன்னத் 1988 பிப்ரவரி மார்ச்
இதனை கம்யூட்டரில் டைப் செய்து தந்த செல்வி ரஜா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.
Comments