மஞ்சள் மகிமை
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால், அவனது தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வழிமுறைப்படி நடை பெற்ற
ஷரீஅத் சட்டப்படி மாப்பிள்ளையிடம் பெண் வரதட்சணை வாங்கிடும்புரட்சித் திருமணம்.
ஹிஜிரி1428 ரபிய்யுல் ஆகிர் பிறை 18 (06-05-2007) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் 102. செய்குல் அக்பர் தெரு சுல்தான் அப்துல்லாஹ், தண்டன் ஹமீது பாத்திமா ஆகியவர்களின் மகனும் கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி மைத்துனருமாகிய S.A.காதர் முஹைதீன் மணாளர் J.A.Q.H. மேலப்பாளையம் முன்னாள் செயலாளர் தண்டன் ஷேக் மன்சூர், சிமிட்டி சுலைஹா ஆகியவர்களின் மகள் T.S. சுமையா மணாளியை ரூபாய் 10,000 பெறுமான தங்க நகையை மஹராக வழங்கி திருமணம் செய்து கொண்டார். ஷரீஅத் சட்டப்படி மாப்பிள்ளையிடம் பெண் வரதட்சணை வாங்கிடும்புரட்சித் திருமணம்.
திருமணத்திற்கு தலைமையேற்க இருந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் த.மு.மு.க மாநில பொதுச் செயலாளருமான மாண்புமிகு S. ஹைதர் அலி ஸாஹிப் அவர்கள் மதுரையிலிருந்து வந்து சேர கால தாமதமானதால் முன்னிலை வகிக்க இருந்த சுற்றுப்புறச் சூழல், விளையாட்டுத் துறை, மற்றும் வக்பு வாரிய அமைச்சர்மாண்புமிகு T.P.M. மைதீன் கான் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
இத்திருமணத்தின் சிறப்பம்சங்கள் என்ற தலைப்பில் கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி முன்னுரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது.
''குட்டி மூப்பன் தெரு பள்ளிவாசல் சார்பாக கட்டப்படவிருக்கும் வீட்டு மனைகள் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு வரும்பொழுது மண்புமிகு அமைச்சர் மைதீன் கான் அவர்கள் பத்திரிக்கை ஆபீஸ்களிலிருந்து நேற்று போன் வந்தது நாளை ஏதோ ஒரு புரட்சித் திருமணத்தில் கலந்து கொள்கிறீர்களாமே என்று கேட்டார்கள். இது இஸ்லாமிய முறைப்படி நடைபெறும் வழமையான திருமணம்தான். சிலர் நாட்டு பழக்க வழக்கங்களை சேர்த்துக் கொள்வார்கள். அதிலிருந்து இலாஹி வித்தியாசமாக செய்வார் என்று கூறியதாகச் சொன்னார்கள்.
திருமணத்தின் போது வரதட்சணை என்ற பெயராலும், திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் சீர்வரிசை என்ற பெயராலும் பெண் வீட்டாரிடம் பணம், பொருள்கள் கேட்டு வாங்கக் கூடாது. இந்த உயரிய கொள்கையுடன்தான் மாப்பிள்ளை மணப் பெண்ணுக்கு 10,000 ரூபாய் பெறுமான மஹர் நகை வழங்கி இருக்கிறார். இது மட்டுமன்றி வரதட்சணை கொடுமைகள் வளர்ந்தோங்க காரணமாகிய அனாச்சாரங்களான பூ மாலைச் சோடனைகள், அலங்கார ரத ஊர்வலம், கொட்டு மேளம், வான வேடிக்கைகள், ஆடல், பாடல் கச்சேரிகள், நடத்துதல் போன்ற ஆடம்பரங்கள் இத்திருமணத்தில் இல்லை. பந்தக்கால் ஊன்றுதல், வாழை மரம் நடுதல், ஆரத்தி எடுத்தல், தாலி கட்டுதல், கருமணி கட்டுதல், அர்த்தமற்ற குலவை இடல், தேங்காய் உடைத்தல், இனி பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு அடிமை என்பதை உணர்த்த செய்யும் மாப்பிள்ளையின் கால்களை பெண்ணின் சகோதரன் கழுவுதல் போன்ற சடங்கு சம்பிரதாயங்களும் இத்திருமணத்தில் நடை பெறவில்லை. அந்த வகையில் சமுதாயத்தின் பார்வையில் புரட்சித் திருமணம்.
மருத்துவ ரீதியாக செய்யப்படும் எந்த செயலும் இஸ்லாத்துக்கு விரோதமானது அல்ல. சடங்குகளாக செய்யப்படும் மூட நம்பிக்கைகள்தான் இஸ்லாத்துக்கு விரோதமானவை. மஞ்சள் என்பதை மங்களகரமானது என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. இந்த நம்பிக்கை தவறானது. மஞ்சள் மருத்துவதன்மையுடைய ஒரு கிருமிநாசி. அதில் நோய் கிருமிகளை அழிக்கும் தன்மை இருக்கிறது. அதனால்தான் வெட்டுப்பட்டால் அதில் மஞ்சல் தூளை வைத்து கட்டும் வழக்கம் இன்றும் கிராமங்களில் உள்ளது. விஞ்ஞான முன்னேற்றம் வந்த பின் நோய் பரவாமல் இருக்க பல மருந்துகள் வந்து விட்டது. இந்த தடுப்பு மருந்துகள் வராத காலத்தில் மஞ்சளைத்தான் தடுப்பு மருந்தாக பயன்படுத்தினர்.
பெருவாரியான கூட்டம் கூடும் பகுதிகளுக்கும் ஒரு நாடு விட்டு நாடு போகும்போதும் தடுப்பு ஊசி போடும் வழக்கம் உள்ளது. அது போல் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு கடிதம் போனால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது. ஒருவரிடமிருந்து பலருக்கு போகும்போது தடுப்பு மருந்து அவசியம்.. திருமண அழைப்பிதழ்கள் பலருக்கும் போகக் கூடியது. எனவே நம்மிடமுள்ள நோய் கிருமிகள் மற்றவர்களுக்கு போய் விடக் கூடாது என்பதற்காக மருத்துவ நோக்கில்தான் திருமண அழைப்பிதல்களில் மஞ்சள் தேய்த்தார்கள். அதுபோல்தான் புது மணத் தம்பதிகள் ஒருவரிடமுள்ள நோய் கிருமிகளால் பாதித்து விடக் கூடாது என்பதற்காக ஆடைகளில் மஞ்சள் தேய்த்தார்கள். இந்த மஞ்சள் மகிமைதான் காலப் போக்கில் மஞ்சள் மங்களகரமானது என எண்ணி சடங்கு சம்பிரதாயமாக ஆக்கி விட்டார்கள்.
இது போன்ற சீர் திருத்த பிரச்சாரங்களை செய்தவர்தான் இன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் பெரியார் போன்றவர்களும். இன்று இது புரட்சித் திருமணமாக பார்க்கப்படுகிறது. இந்த திருமணத்தில் ஆரத்தி எடுத்தல் இல்லை என்பது மூடக் கொள்கை என பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் தெளிவாக உள்ளனர். 35 ஆண்டுகளாக தி.மு.க. நகரச் செயலாளராக இருந்த செ.கா.மு. யூசுப் திருமணத்தில் ஆரத்தி எடுக்க வந்த பெண்ணிடம் எனக்கு ஒரு திருஷ்டியும் இல்லை எனவே ஆரத்தி வேண்டாம் என மறுத்து விட்டார். அப்பொழுது அது புரட்சித் திருமணமாகப் பார்க்கப்பட்டது'' என்றார்.
த.மு.மு.க. மாநில செயலாளர் மவுலவி J.S. ரிபாஈ பாஸி, ரஷாதி அவர்கள் திருமண சிறப்புரையாற்றினார்கள். இது கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி குடும்பத்தில் நடைபெறும் 19ஆவது சீர் திருத்த திருமணம் என்று குறிப்பிட்டுப் பேசினார்கள். 1987 முதல் 2002 வரை துபை தவ்ஹீது இயக்கத்தின் தலைவராக இருந்த ஆர்.எஸ். முஹம்மது காஜா, கலாம் ரசூல், நெல்லை இப்னு கலாம் ரசூல், தி.மு.க. பிரமுகர்கள் செய்யது மைதீன், ஆ.மு.பக்கர், கரீம், மஸ்ஜித் தக்வா தலைவர் இனாயதுல்லாஹ், த.மு.மு.க. நகர தலைவர் ரசூல் மைதீன், செயலாளர் மைதீன், பொருளாளர் ஆட்டோ காஜா உட்பட ஏராளமான த.மு.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தனது தம்பியின் திருமணமும் அதே நேரத்தில் இருந்ததால் த.மு.மு.க. நெல்லை வர்த்தகர் அணி தலைவர் உஸ்மான் அவர்கள் சுபுஹு தொழுததும் காலையிலேயே வந்து சென்றார்கள். திருமணத்திற்கு தலைமையேற்க இருந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் த.மு.மு.க மாநில பொதுச் செயலாளருமான மாண்புமிகு S. ஹைதர் அலி ஸாஹிப் அவர்கள் அன்று மஃரிபுக்குப் பிறகு வந்து மணமகனுக்கு வாழ்த்துக் கூறினார்கள். அவர்களுடன் தனிச் செயலாளர் அன்வர், மதுரை மாவட்ட த.மு.மு.க. தலைவர் கவுஸ் பாட்சா, நெல்லை மாவட்ட த.மு.மு.க. துணைத் தலைவர் பாளை பாரூக் வக்பு கண்காணிப்பாளர் உதுமான் மைதீன், இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது உட்பட பலர் வந்திருந்தனர்.
Comments