சட்ட(ம் இயற்றும்) சபைக்கு சன்மார்க்கத்தவர்கள் செல்லலாமா?

ஒருமைப்பாடு என்று சொன்னால் எந்த ஒரு இனத்தையோ மொழியையோ சார்ந்து இருக்கக் கூடாதுமுன்னிலைப்படுத்தக் கூடாது. மனிதர்கள் என்ற ஒரு நிலையை மட்டும்தான் முன்னிலைப்படுத்த வேண்டும். அதுதான் ஒருமைப்பாடு.


பல கடவுள் கொள்கை உடையவர்கள் அவர்கள் நம்பிக்கைப்படி  வணங்கிக் கொள்ளட்டும். முஸ்லிம்கள் நம்பும் ஒரே கடவுளான அல்லாஹ்வை முஸ்லிம்கள் வணங்கிக் கொள்ளட்டும். கடவுள்கள் இல்லை என்று நாத்திகர்கள் சொன்னால். சொல்லி விட்டுப் போகட்டும்அதில் அரசு தலையிடக் கூடாது


தாய் மண்ணை வணங்கு தந்தை மண்ணை வணங்கு என சொல்லக் கூடாது. எல்லாரும் ஒரே நாட்டில் இருக்கக் கூடிய பிரஜைகள். ஒரு நாட்டில் உள்ள குடிமக்களுக்கு அவரவருக்கு உள்ள உரிமைகளை கிடைக்கச் செய்வதுதான் ஒவ்வொரு நாட்டில் உள்ள ஒருமைப்பாட்டின் நோக்கமாக இருக்க வேண்டும்.


மதச் சார்பற்ற இந்திய ஒருமைப்பாடு என்று சொல்லுகிறோம். மதச் சார்பற்ற இந்திய ஒருமைப்பாடு என்ன செய்ய வேண்டும். மதம் சம்பந்தமான சடங்குகளுக்கு அரசு ரீதியாக எந்த முக்கியத்துவமும் கொடுக்கக் கூடாது. இந்துக்கள் தீபாவளியை கொண்டாடி சந்தோஷப்படுகிறார்கள் என்றால் அது அவர்களுடைய உரிமை. அவர்கள் படைக்கப்படாத உணவுகளை கொடுத்தால், இனிப்பு வழங்கினால் இஸ்லாமியர்கள் சாப்பிடுவார்கள்


ஈதுகளின் போது இஸ்லாமியர்கள் விருந்து அளிப்பார்கள். பாய்மார் விருந்து என்றால் மற்றவர்கள் ஆடு, மாடு, கோழிகளை அறுத்து பிரியாணியாக தர வேண்டும் என்று உரிமையோடு எதிர் பார்ப்பார்கள். கேட்கவும் செய்வார்கள். இது அவர்களுக்குள் செய்து கொள்வது.


இதில் அரசாங்கம் தலையிடக் கூடாது. அதே மாதிரி சலுகைகளும் ஒரு பக்கமாக ஓர வஞ்சனையுடன் செய்து விடக் கூடாது. குறிப்பிட்ட ஒரு சமுதாயத்துடைய பண்டிகைகளுக்காக சிறப்பு சலுகைகைளை அரசாங்கம் வாரி வழங்கக் கூடாது. வழங்கினால் அடுத்தவர்களுக்கு ஏக்கம் வருமா வராதா? அந்த சலுகையில் மற்ற சமுதாயத்தினர் பயன் அடைந்தாலும் ஏக்கம் வரும். தங்களுடைய சமுதாய ரீதியான பண்டிகைகள் பெயராலும் சலுகைகள் கிடைக்க வேண்டும்


தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை, பருப்பு கொடுத்தால். ரமழானுக்கு லுங்கி, ஜிப்பா, அபாயா  கொடுக்கப்பட வேண்டும் என ஆசைபடுவதில் தவறு என்ன இருக்கிறது? பொங்கலுக்கு விலையில்லா சக்கரை அரிசி, கரும்பு கொடுக்கிறார்கள் என்றால் பக்ரீதுக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும் என ஏங்குவது நியாயம்தானே. ஒருமைப்பாடு என்றால் எல்லாவற்றிலும் சமமாக இருக்க வேண்டும்.


ஒன்று யாருடைய பண்டிகைகளுக்கும் கொடுக்க வேண்டாம். யார் கேட்டார்கள்? கடந்த காலங்களில் அரசு கொடுத்த இலவசங்களைக் கொண்டா தீபாவளி கொண்டாடினார்கள்? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடி வருவதாக சொல்கிறார்கள்! இலவசங்களைக் கொண்டா கொண்டாடினார்கள்? எதற்காக இந்த இலவசங்கள்? அரசியல்வாதிகள் மெஜாரிட்டிகளின் ஓட்டு பெறுவதற்காக, மக்கள் மத்தியிலே பிரச்சனைகளை உண்டு பண்ணி, கிளர்ச்சிகளை ஏற்படுத்தி, பாகுபாடு செய்ய வந்ததுதான் இந்த இலவசங்கள்.


ஒருமைப்பாட்டின் நாயகர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எழுதிய ஒப்பந்தத்தில் உள்ள ஆறாவது விதி. ”அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யப்பட வேண்டும்”  என்பது. ஒருவர் அநீதி இழைக்கப்பட்டு விட்டார் என்றால். அவர் எந்த இனத்தைச் சார்ந்தவர் என்ற கேள்வியே அங்கு வரக் கூடாது. நம் நாட்டு குடிமகன் அநீதி இழைக்கப்பட்டு விட்டார். அந்த பகுதி மக்களோ அரசாங்க பொறுப்பாளரோ அநீதி இழைக்கப்பட்டிருக்கிறார் என்ற அந்த ஒரே காரணத்துக்காக உதவி செய்ய வேண்டும். இது அல்லாமல் அவர் யார் என்ற எண்ணம் வரவே கூடாது. இதுதான் ஒருமைப்பாடு.


இதனால் மதச் சடங்கு என்பது அவரவர் வீட்டுடனும் வணக்கத் தலங்களுடனும் நின்று விடும். வீதிக்கும் விவகாரத்துக்கும் வராது. மதச் சடங்குகள் வீதிக்கு வருவதால்தான் விவகாரங்கள் ஆகின்றன. இஸ்லாமிய மதச் சடங்குகளுக்கும் ரோட்டுக்கும் சம்பந்தமே இல்லையே. ரோட்டில் போய்க் கொண்டே இருக்கும்போது வழியை மறித்து நின்று கொண்டும், நடு ரோட்டில் வாகனங்களை நிறுத்தி வைத்துக் கொண்டும் வணங்கும் வணக்கம். ஊர்வலமாகச் செல்லும் வணக்கம். இப்படியான எந்த வணக்கமும் இஸ்லாத்தில் கிடையாது. தெருத் தெருவாக சுற்றுகிற வேலையும் இஸ்லாத்தில் இல்லை.


தினமும் கடமையான ஐவேளைத் தொழுகையை பள்ளிவாசல்களின் உள்ளே போய்தான் தொழ வேண்டும். வெள்ளிக்கிழமை என்றால் ஜமாஅத்தார்கள் சங்கமிக்கும் ஜும்ஆ பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். அது நிரம்பி வழியும். மாநகரங்களில் ஜாமிஆவுக்கு வெளியிலும் நிற்பார்கள். நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள்களில் திறந்த வெளி திடலில் தொழுவார்கள். இதைத் தவிர ரோட்டுக்கும் இஸ்லாமிய வணக்கங்களுக்கும் சம்பந்தமே இல்லை.


மழையின் காரணமாக பிற மதத்தவர்கள் வீடுகளை இழந்து நின்றார்கள். உடனே வீடுகளை இழந்த பிற மதத்தவர்களை பள்ளிவாசல்களின் உள்ளே தங்க வைத்தோம். அப்போதுதான் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களின் வெளியில் ரோடுகளில் நின்று வணங்கினோம். மற்றபடி ரோடுகளை நடப்பதற்கும் வாகனங்களுக்கும் என போக்கு வரத்துகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம். மற்றவற்றுக்கு ரோடுகளை முஸ்லிம்கள் பயன்படுத்த மாட்டோம். குறிப்பாக நடைபாதையில் வணக்க வழிபாடுகள் என்பது இஸ்லாத்தில் இல்லை. மக்களின் நடைபாதைகளுக்கு இடையூறு செய்வது சாபத்திற்குரிய செயல் என நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்து உள்ளார்கள்.


இதுபோல் மற்றவர்கள் அவரவர் வழிபாடுகளை அவரவர் இல்லங்களிலும் அவரவர்கள் உடைய மத கட்டிடங்களுக்குள்ளும் நடத்திக் கொண்டால். வெளியில் நடமாடும்பொழுது நாம் மனிதர்கள், அண்ணன் தம்பிகள், இந்திய நாட்டின் குடிமக்கள். இந்த நிலையே இருக்கும். யாருக்கு ஒரு ஆபத்து என்றாலும் எல்லாரும் சேர்ந்து போய் உதவி செய்ய வேண்டும். நல்லதுகளுக்கு எல்லாரும் சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இந்த பொது நலம் வந்தால் எந்த பிரச்சனைகளும் வராது. கலவரங்களுக்கு இடமே இல்லை.


கலவரம் கலவரம் என்கிறார்களே அது உண்மையா? திட்டமிட்டே ஒரு சாரார் இன்னொரு சாராரை கொன்று விடுகிறார்கள். திட்டமிட்டே தீயிட்டு கொளுத்துகிறார்கள். இதையெல்லாம் கலவரம் என்று செய்தி போடுகிறார்கள். இரு தரப்பு மோதிக் கொண்டால்தான் கலவரம். ஆனால் கை ஓங்கிய ஒரு தரப்பார் செய்யும் அநியாயங்கள் அட்டூழியங்கள்தான் கலவரம் என்ற பெயரால் மூடி மறைக்கபட்டு வருகிறது.


இப்படிப்பட்ட விஷயங்களை ஒழிப்பபது எப்படி? என இப்பொழுது சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அருமை நாயகம் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் 1435 ஆண்டுகளுக்கு முன்னால் யூதர்களுடன் போட்ட ஒப்பந்தம் வழிகாட்டி விடை தந்து விட்டது. இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த ஒப்பந்தம் தேவை. இது மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இது போன்ற இஸ்லாமிய வழிகாட்டுதல்களை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு போக வேண்டும். அது முஸ்லிம்களின் கடமை. எப்படிக் கொண்டு போவது?


அல்லாஹ்வின் துாதர் தந்த அற்புத சட்டங்களை அரசின் கவனத்துக்கு கொண்டு போக வீதியில் நின்று கத்தலாம். திருச்சியிலும் தீவுத் திடலிலும் திண்டுக்கல்லிலும் கூடலாம். அதனால் குரல் ஒலிக்கும். பதிய வேண்டிய இடத்தில் பதியுமா? பதியாது. சட்டமாக வராது. பதிய வேண்டிய இடத்தில் பதிய வேண்டுமா? சட்டம் இயற்றும் சட்டமன்றங்களுக்குள் சன்மார்க்கத்தவர்கள் செல்ல வேண்டும். கொள்கையே உயிர் மூச்சாகக் கொண்ட கொள்கைவாதிகளை கோட்டைக்குள் அனுப்ப வேண்டும்.


ம.ம.க. தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், அஸ்லம் பாட்ஷா போன்ற கொள்கைவாதிகள் கோட்டைக்குள் சென்றதால்தான் அவர்களுடைய பேச்சுக்கள் பதிய வேண்டிய இடத்தில் பதிவானது


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால் என்பது திரு குர்ஆனின் துவக்க வசனம். அந்த துவக்க வசனத்தைக் கொண்டு தனது சட்டமன்ற துவக்க உரையை துவங்கியவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள். மது விலக்கு விவாதத்தில் ”மது தீமைகளின் தாய்” என்ற ஹதீஸை சட்டமன்றத்தில் சொல்லிக் காட்டினார். அது அவைக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது. பதிய வேண்டிய இடத்தில் பதிந்து உள்ளது. 


குர்ஆன் ஹதீஸ்களை சட்டமன்றத்தில் ஒலித்தது. ஆட்சியாளர்களின் செவிகளில் குர்ஆன் ஹதீஸ்களை விழ வைத்தது நன்மையானதுதானே.  எனவே சட்டம் இயற்றும் சட்டசபைக்குள்ளும் ஆட்சி அதிகாரத்துக்கும் கொள்கைவாதிகள் செல்லத்தான் வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக!
தொடரும் இன்ஷாஅல்லாஹ்
நன்றி ; மக்கள் உரிமை

ஏப்15-21,2016

அடுத்த தலைப்பு
அன்சாரி அவர்களே! என்ன இல்லை இஸ்லாத்தில் வெளியில் இருந்து உள் வாங்க




முந்தைய தலைப்புகள் 

பொய் வழக்கு போடும் போலீஸாரை விமர்சிக்கும் பொதுமக்கள் நிலை என்ன?




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு